சான்றோன் எனக்கேட்ட தாய்!

ஒருமுறை என் தாயிடம் ” குறளைச் சொல்லி வளர்த்தீர்கள்!யாராவது என்னை சான்றோன் என சொல்லிக் கேட்டிருக்கிறீர்களா?!” என லார்ட் லபக் தாஸ் கேள்வியைக் கேட்டேன். அதற்கு ” பல முறை கேட்டிருக்கிறேன்! உன்னை சான்றாகச் சொல்லி குழந்தைகள் வளர்த்தவர்கள் உன்னை தங்கள் குழந்தைகளுக்கு காட்டவும் விரும்புகிறார்கள். நான் சொல்கிறேன் நீ சான்றோன்! தாய்க்கே உபதேசிக்கும் தகுதி உடையவன். நான் உன்னிடம் நிறைய கற்றுக் கொள்கிறேன்! ” என்றார். நான் “அம்மா! நீங்கள் இட்ட விதை இன்று விருட்சம் ஆகி கனியைத் தருகிறது! இதில் எனது என்று எதுவுமில்லை! உங்கள் தியாகங்கள் தண்ணீர், உரம், நிழல்,பாதுகாப்பு (தீ நட்பிலிருந்து!… ” என்றேன். அதற்கு என்னை எனக்கு வேத மந்திரத்தின் ஒரு பகுதியை கற்பித்த குருவின் வீட்டிற்கு கூட்டிச் சென்றார். என் குரு தியானத்தில் இருந்ததால் பார்க்க முடியவில்லை. அவரது மனைவி ” ஓம் பேரச் சொல்லித்தான் என் மகன்களை வளர்த்தேன்! ” என்று சொல்லிவிட்டு தன் பையன்களிடம் ” இந்த மாமா தான் கல்லூரி படிப்பையும் விடாமல் இறைத் தேடலையும் விடாமல் செய்தவர்! ” என்றார். இது ஒரு 5 வருடம் முன் நடந்த சம்பவம்.

நான் அமர்ந்த மலர்களும் சேகரித்த தேனும்!-5

சத்குரு சாந்தானந்த ஸ்வாமிகள் அதிஷ்டான பீடாதிபதி ஸ்ரீ ஸ்ரீ ஓம் காரானந்தா ஸ்வாமிகள் சமஸ்கிருதம் பாடம் சொல்லுவதுண்டு. என் தமக்கை அவரிடம் சமஸ்கிருதம் கற்றார். அப்போது ஸ்வாமிகள் பாடம் நடத்தி முடித்தவுடன் தமக்கையை கூப்பிட 10 நிமிடம் முன்பே சென்று விடுவேன். அவர் என்னைக் காட்டி ” அவர் என் சமஸ்கிருத வகுப்பிற்கு வராததை எண்ணி பெருமைப்படுகிறேன்! ” என்பார். “ஏனென்றால் வேத முறைப்படி அவர் சூரிய அஸ்தமன வழிபாடு செய்பவர்! என் வகுப்பு அதை பாதிப்பதால் அவர் வருவதில்லை! ” என்பார். ஒரு முறை மன்னன் யயாதியைப் பற்றி அவர் கேட்க ” யத்ர யத்ர இந்த்ரியானி யாதி தத்ர தத்ர யாதி!” என சட்டென்று சொல்லி விட்டேன். எனக்கு சுத்தமாக சமஸ்கிருத பயிற்சி கிடையாது. நான் ஏதோ இட்டுக்கட்டி சொன்னேன். அவர் அசந்து போய் விட்டார். அவர் மகா பண்டிதர். வேதாந்தம் பிய்த்து உதறுவார். நான் சொன்னதன் பொருள் ” புலன்கள் எங்கெல்லாம் செல்கின்றனவோ அங்கெல்லாம் செல்பவன் “. “இதுவரை இவ்வளவு அழகாக எவரும் சொல்லவில்லை. இதை நான் இன்றிலிருந்து உபயோகித்துக் கொள்கிறேன்! ” என்றார். இன்னும் என்னை நினைவு கூர்கிறார். எப்டி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்! அவர் கைப்பட எழுதிய கடிதம் இன்னும் என்னிடம் இருக்கிறது.

ஈகை ஏன்?

கொடை என்பது நமக்கு நாம் செய்யும் உதவியே! பணம் “நான் எனது ” என்ற எண்ணத்தின் ஆணிவேர்! அதை சிறிது சிறிதாக சாய்க்க கொஞ்சம் கொஞ்சமாய் கிள்ளித் தருகிறோம்! அஞ்ஞானியானதால் கிள்ளித் தருகிறோம்! ஞானியானால் அள்ளித் தருவார்கள், பட்டினத்தார் போல! ஈகை இதனாலேயே மிகச் சிறந்த ஈகோ கரைக்கும் இயந்திரம்! அதனால் முடிந்த போதெல்லாம் கொடுக்கவேண்டும்!முழுமனதோடு கொடுக்க வேண்டும்! வேதம்,ஆதிசங்கரர், திருக்குறள், திருக்குர்ஆன், பைபிள்,விவேகானந்தர் . .. இப்படி எந்த நூலைப் படித்தாலும் ஈகோ வை விரட்டும் ஈகை சிறப்பாகக் கூறப்பட்டிருக்கும்! ஈர நெஞ்சங்களே ஈகிற நெஞ்சங்களே நீங்கள் செய்யும் பணி சாதாரண விஷயமல்ல!

ஞான வாளிகள்!

இப்போதெல்லாம் இயந்திரத்தில் துவைக்கும் துணிகள் ,கையால் துவைக்கும் துணிகள் என வகைப்படுத்தி துவைக்கிறோம். நேற்று அவ்வாறு கையால் துவைக்கும் துணிகளை துவைப்பதற்காக இரண்டு கருப்பு வாளிகளில் அரை வாளி அளவு நீரை நிரப்பிவிட்டு ஒன்றில் நிறமற்ற (color less) சோப்புக் கரைசலை ஊற்றிவிட்டு துணிகளை எடுத்துவரச் சென்றேன். திரும்பி வந்தபோது எந்த வாளியில் சோப்பு உள்ள தண்ணீர் என்பது மறந்து விட்டது. ஒரு நொடி யோசித்தேன். சோப்புள்ள தண்ணீரை கலக்கினால் அதில் உள்ள நுரையைக் கொண்டு கண்டு கொள்ளலாம் எனத் தோன்றியது. அடுத்த கணம் ” அடடா! இது எவ்வளவு பெரிய தத்துவம்! நம்முடைய உடலும் ஞானியின் உடலும் வாளியைப் போலத்தானே! அதிலிருக்கும் ஆத்மாவும் மனமும் தண்ணீரைப் போலத் தானே! இரண்டிலும் வேறு பாடில்லை. ஆனால் உலக நிகழ்வுகள் மனம் ஆகிய தண்ணீரைக் கலக்கும் போது ஞானியின் மன நிலை சோப்புக் கலக்காத நீரைப் போல அலைக்கழிந்தாலும் தன்மை மாறாது இருக்கின்றது! ஆனால் நாமோ சோப்பு நுரைபோல கோப தாபங்களைக் காட்டுகிறோம்! சோதனை அதிகரிக்க அதிகரிக்க நம் மனம் மேலும் கோபதாப வழிப்பட்டு நுரையில் உள்ள இலட்ச்சக்கணக்கான குமிழ்கள் போல பலப் பல எண்ணங்களைத் தோற்றுவிக்கிறது! நம் மனதில் கரைந்துள்ளது வாழ்க்கை நிலையானது என்ற மாயைச் சோப்பின் விளைவே இது என்று தோன்றியது. இந்த மாயையைக் களைந்து எண்ணமற்ற நிலை பெற இறைவன் கொடுத்த அறிவிப்பாய் இதை நான் கருதினேன்!