போலி குருக்கள் நமக்கு அமைவதேன்?

நம் மனத்தின் தூய்மைக்குத் தகுந்த குருவே நமக்குத் தோன்றுவார். மக்கள் தின வழிபாடுகள் ஏதோ கீழானது. பெரிய மந்த்ரோபதேசம் தேவை என்று தவறாகப் புரிந்து கொண்டு குருக்களைத் தேடிப் போகிறார்கள்.

மேலும் உலக இன்பதுன்பங்களில் உதவி பெறவே குருக்களைத் தேடுகிறார்கள். தினமும் செய்யும் மூவேளை வழிபாடுகளால் நம் மனது தூய்மையாக தூய்மையாக சத்குரு நமக்குத் தோன்றுவார்.

பால்காரர் வரும் முன் நாம் செய்ய வேண்டியது பால்வாங்கும் பாத்திரத்தை நன்றாக கழுவித் தேய்த்து உலர்த்தி வைக்க வேண்டும். அதுவே தின வழிபாடும் நல்லொழுக்கமும் நற்சிந்தனையும் தரும் பலன்.

பாத்திரம் கழுவி இருந்தால் பால்காரர் தேடி வந்து பால் ஊற்றுவார். அவரே குரு.

நாமோ பால் பாத்திரத்தைத் தேய்க்காமல் தெருத்தெருவாய் பால்காரரைத் தேடி அலைகிறோம். பாலும் கிடைப்பதில்லை. கிடைத்தாலும் பால் திரிந்துவிடுகிறது.

அதாவது அன்றாட வாழ்விற்கான வேண்டுதல்களையே குருவிடம் வைக்கிறோம். காலப்போக்கில் அப்படிப்பெற்ற அனைத்தும் அழிந்து போகிறது.

குறை நம்மிடமே இருக்கிறது!

#போலிகுருக்கள்நமக்குஅமைவதேன்

மகான்கள் நோயிலிருந்து காப்பார்களா?!

ஷீரடியில் காலரா வந்த போது பாபா எக்கச்சக்கமாக கோதுமையை அரைத்தார். பெண்களும் உதவி செய்து உழைப்பிற்குத் தகுந்த அளவு கூடையில் மாவை நிரப்பி எடுத்துச் செல்ல நினைத்தனர். பாபாவுக்கு வந்ததே கோபம் ” உங்க அப்பன் வீட்டுச் சொத்தா என்று சாடினார்!” பெண்கள் கூடையைப் போட்டுவிட்டு ஓடத் தொடங்கினார்கள்.

பாபா அவர்களைக் கூப்பிட்டு இந்த மாவு அனைத்தையும் ஊரியின் எல்லையைச் சுற்றி தூவச் சொன்னார். காலரா ஊரை நெருங்கவில்லை. அவர் அரைத்தது கிருமிகளை.

பல அற்புதங்களைச் செய்யும் மகான்கள் இன்றும் இந்தியாவில் உண்டு.

குகைகளை விட்டு வெளிவராமலும் தங்களை வெளிப்படுத்தாமலும் நம்மை காக்கிறார்கள்.

வினை முடிந்த உயிர்களை காப்பதில்லை.

போர்க்காலங்களில் மகான்கள் எல்லைப்புறங்களில் காட்சி அளித்தது உண்டு பலமுறை!

காஞ்சிப் பெரியவர் ஒரு இராணுவ டாக்டர் போரில் குண்டடி பட்டபோது தோன்றி அவரது உதவியாளரிடம் அந்த டாக்டரைக் தூக்கிக் கொண்டு ஓடச் சொன்னார்!

பல ஆண்டுகள் கழித்து முதல் முறையாக காஞ்சிப் பெரியவரை சந்திக்க வந்தபோது ” குண்டடி பட்டதே! தேறிவிட்டாய்!” என்றார் பெரியவர். ” ஆமாம் ஸ்வாமி! என் உதவியாளர் ஏதோ ஒரு சந்யாஸி என்னைத் தூக்கிக் கொண்டு ஓடச் சொன்னதாகச் சொன்னார். எனக்கு அப்போது புரியவில்லை!” என்று கண் கலங்கி வணங்கினார்!

மகள் கேட்ட கேள்வி!

“நீங்கள் எப்போதும் காஞ்சிப் பெரியவர் காஞ்சிப் பெரியவர் என்று சொல்கிறீர்கள். அவரது கதைகளைச் சொல்லாத நாளில்லை. மேலும் பலரின் கனவுகளில் அவர் இன்றும் வரும் சம்பவங்களைப் பகிர்கிறீர்கள். ஆனால் உங்கள் கனவில் ஒருமுறை கூட வரவில்லை ஏன்?!” என்றாள்.
” நல்ல கேள்வி! கனவு என்பது மனதில் ஏற்படும் நிகழ்வு. மனம் ஒரு கண்ணாடியைப் போலவே! முன்னால் இருப்பதை அப்படியே பிரதிபலிக்கும் தன்மை உடைய கண்ணாடி. காஞ்சிப் பெரியவர் உலகளாவிய ஒரு தெய்வம். என் மனம் அழுக்கான கண்ணாடியைப் போல. என் மனதின் முன் அவர் இருந்தாலும் அவரது பிம்பத்தை பிரதிபலிக்கும் தன்மை இல்லை. நான் இன்னும் என் மனதை தூய்மை செய்ய வேண்டும்!” என்றேன்.

எறும்பு என் குரு!

தனியாக சுற்றும் எறும்பு ஏதேதோ திசைகளில் அரக்கப்பரக்க ஓடுகிறது. ஆனால் ஆயிரக்கணக்கான எறும்புகள் பல ஆயிரம் அடிகள் தொடர்ந்து ஒரே திசையில் வளைந்து நெளிந்து போகின்றன.
நானும் தனி எறும்பைப்போல உணவு வாசனை வரும் பக்கம் எல்லாம் போவதைப் போல புலன்கள் இழுத்த திசையிலெல்லாம் சென்றேன்! பின் நல்ல குருவின் தொடர்பு நல்லோர் நட்பு என்ற வரிசையில் இணைந்தேன்! ஓரளவு நேர் கோட்டில் பயணிக்கிறேன்! நடு நடுவே ஏற்படும் கவனச் சிதறல்கள் ஒருபுறம் என்றாலும் நல்லோர் நட்பு எனக் கைவிடாது ” வாடா! வரிசைல!” என்று தடுத்தாட்க் கொள்கிறது. நாளும் போராடுகிறேன் நல்ல திசையை நோக்கி!

நானும் சிவலிங்கமே!

மிக்ஸி என் குரு!

பரம்பரை பரம்பரையாக பூஜை செய்த சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்ய சோம்பல்பட்டு பழச்சாறு அடித்துக் குடிக்க முயன்றேன். பழச்சாற்றை வாரி இரைத்து “ நானும் சிவலிங்கமடா மகனே! என்னை நீரூற்றிக் கழுவி சுத்தம் செய்!” என சொல்லாமல் சொன்னது மிக்ஸி!

புத்தி வந்தது! குருவே சரணம்!

மனம்

யானைக்கு தும்பிக்கை ஆடாம இருக்காது! மாவுத்தன் ஒரு குச்சியை அதன் தும்பிக்கையில் வைத்துவிடுவான். அதை ஆட்டிக்கொண்டே அது இருக்கும்.அதைப் போல நம் மனம் சமாதானம் அடைய பலவற்றை நாம் கற்பித்துக் கொள்கிறோம்.

முடிவிலா சிந்தனைகள்

சிந்தனை குறைய வேண்டும் என்கிறார்கள். பால் பொங்கி தணிவது போல. யோக சித்த வ்ருத்தி நிரோதஹ- மனம் அடங்குவதே யோகம் என்கிறது பதஞ்சலி யோக சூத்திரம். மனமடங்கக் கல்லார்க்கு வாயேன் – திருமூலர்.
மனம் கேள்வி கேட்டு கேட்டு அதற்கு முடிவில்லை என உணர்ந்து குருவை சரணடைந்து இறைநிலை அடைவது யதார்த்தம்! A simple natural process! கேள்வி கேட்க்கும் மனம் தன்னை பகுத்தறிவாளி என முட்டாள்த்தனமாக எண்ணி சிலகாலம் சந்தோஷப்படுவதும் இயற்கையே!

போலிச் சாமியாரை நம்பி ஏமாறும் உலகம்!

”குருட்டினை நீக்கும் குருவினைக் கொள்ளார்

குருட்டினை நீக்கா குருவினைக் கொள்வர்,

குருடும் குருடும் குருட்டாட்டம் ஆடிக்

குருடும் குருடும் குழிவிழுமாறே—திருமந்திரம்