போலி குருக்கள் நமக்கு அமைவதேன்?

நம் மனத்தின் தூய்மைக்குத் தகுந்த குருவே நமக்குத் தோன்றுவார். மக்கள் தின வழிபாடுகள் ஏதோ கீழானது. பெரிய மந்த்ரோபதேசம் தேவை என்று தவறாகப் புரிந்து கொண்டு குருக்களைத் தேடிப் போகிறார்கள்.

மேலும் உலக இன்பதுன்பங்களில் உதவி பெறவே குருக்களைத் தேடுகிறார்கள். தினமும் செய்யும் மூவேளை வழிபாடுகளால் நம் மனது தூய்மையாக தூய்மையாக சத்குரு நமக்குத் தோன்றுவார்.

பால்காரர் வரும் முன் நாம் செய்ய வேண்டியது பால்வாங்கும் பாத்திரத்தை நன்றாக கழுவித் தேய்த்து உலர்த்தி வைக்க வேண்டும். அதுவே தின வழிபாடும் நல்லொழுக்கமும் நற்சிந்தனையும் தரும் பலன்.

பாத்திரம் கழுவி இருந்தால் பால்காரர் தேடி வந்து பால் ஊற்றுவார். அவரே குரு.

நாமோ பால் பாத்திரத்தைத் தேய்க்காமல் தெருத்தெருவாய் பால்காரரைத் தேடி அலைகிறோம். பாலும் கிடைப்பதில்லை. கிடைத்தாலும் பால் திரிந்துவிடுகிறது.

அதாவது அன்றாட வாழ்விற்கான வேண்டுதல்களையே குருவிடம் வைக்கிறோம். காலப்போக்கில் அப்படிப்பெற்ற அனைத்தும் அழிந்து போகிறது.

குறை நம்மிடமே இருக்கிறது!

#போலிகுருக்கள்நமக்குஅமைவதேன்

முக்தி,மோட்சம்,லிபரேஷன்,ரியலைசேஷன்!

(நண்பர் Doss Ry முக்தி என்றால் என்ன என்று கேட்டிருந்தார். என் சிறுமதிக்கு எட்டிய விளக்கம் இதோ. இதை பின்னூட்டமாக எழுதினேன். பின்னூட்டங்கள் 800 சொற்களுக்குக் குறைவாக இருக்க வேண்டுமாம்! மார்க் இன்று எனக்குக் கற்றுக் தந்தது. அதனால் இதைத் தனிப்பதிவாக இங்கே தருகிறேன்!)

முக்தி என்ற நிலை வார்த்தைகளில் விவரிக்க முடியாத ஒன்று என்று சொல்லப்படுகிறது.

அதை அனுபவித்தே உணரமுடியும் என்றும் அதை அடைந்தவர்களில் கூட தெளிவாக விளக்க இயலாது என்றும் சொல்லப்படுகிறது.

இதன் அடிப்படைக் காரணம் அது மனங்களைக் கடந்த நிலை என்பதால்.

நம் அனுபவம் சிந்தனை எல்லாம் மனம் என்ற கருவியைக் கொண்டே நடக்கிறது.

முக்தி நிலை மனங்களைக் கடந்த நிலை என்பதால் திலிருந்து வரும் சிந்தனைகளாலோ சொல்லாலோ எழுத்தாலோ விவரிக்க இயல்வதில்லை.

அப்படி என்றால் என்னதான் செய்வது? மனம் அழிய பயிற்சி எடுப்பதே ஆன்மீகம்.

நாம் என்று நாம் சொல்லுவது உடல்,மனம்,ஆன்மா என்ற மூன்றின் கோப்பு.

அதாவது மூன்று கூறுகளைக் கட்டும்போது நாம் நான் என்ற எண்ணம் அதாவது ஈகோ என்ற “நான் இருக்கிறேன்” என்ற சிந்தனை உருவாகிறது.

அந்த நான் என்ற அடிப்படைச் சிந்தனையை ஈகோ என்கிறோம். உடலுக்கும் ஆன்மாவிற்கும் இணைப்புப் பாலமாக இருப்பது நான் என்ற சிந்தனை.

அதைச் சுற்றி பின்னப்பட்ட ஆயிரமாயிரம் எண்ணங்களே மனம் என்று நாம் கூறுகிறோம்.

மனம் என்ற இணைப்புப் பாலம் துண்டிக்கப்பட்டால் உடல் வேறாக ஆன்மா வேறாக இருக்கும் நிலையை இந்த உடலிலேயே உணர்வது ஜீவன் முக்தி.

மனம் அழியக் கற்பதே அட்டாங்க யோகம் . அதாவது மனத்தை அழிக்க எட்டு படிகள்.

அந்த ஒவ்வொரு படியிலும் ஏற தன் முயற்சி குருவின்(உண்மை ஜீவன் முக்தர். அந்த இந்த ஆனந்தாக்கள் இல்லை. விவேகானந்தருக்கு பரமஹம்சர் கிடைத்தது போல) வழிகாட்டல் தேவை.

அப்படி பலப்பல பிறவிகளில் முயன்று முக்தி அடைவதற்கு எடுத்துக்காட்டாக ஒரு கதை உபநிடதங்களில் சொல்லப்படுகிறது.

ஒரு உப்புப்பொம்மை கடலின் ஆழம் காணப் புறப்பட்டு கரைந்து போனதாம். நாம் யார் என்று தேடத்தொடங்கி இறுதியில் நாம் என்ற நினைவே மாயை .நாம் தான் எங்கும் நீக்கமற நிலைத்த பரம்பொருள் என்று உணர்தல் இறுதி நிலை. இதுவரை சொன்னது புரிந்து கொள்ளக் கடினமான விளக்கம்.

நிற்க.

எளிதான விளக்கம் காண முயல்வோம்.

முதலில் நாம் கட்டுண்டு இருக்கிறோம் என்பதை உணர்தல்.

எதில் கட்டுண்டு இருக்கிறோம் என்று உணர்தல் அடுத்த நிலை.

கட்டைத் தவிர்க்க வழிகள் உண்டா என்று ஆராய்தல் அடுத்த நிலை.

கட்டை அவிழ்த்தவர்கள் உண்டா என்று தேடிச் சரணடைந்து அவர்கள் வழி நிற்றல் அடுத்த நிலை.

கட்டுக்களை அவிழ்க்க சுய முனைப்போடு செயல்பட்டு விடுபட்டால் இறுதி நிலை.

எடுத்துக்காட்டாக
பூமியில் நாம் கால் பதித்திருக்கும் வரை புவியீர்ப்பு விசை என்ற ஒன்றை உணர்வதில்லை.

அதைப் போல அன்றாட வாழ்வியலான உண்ணல்,உறங்கல்,உடலால் கூடல் என்ற சுழலில் பம்பரம்போல் சுழன்று கொண்டிருக்கும் வரை நாம் ஏன் இந்த சுழற்சிக்கு ஆட்படுகிறோம் என்ற சிந்தனை நம்மில் பலருக்கும் வருவதில்லை.

பூமியை விட்டு வெளியேறும்போதே புவி ஈர்ப்புவிசை என்ற ஒன்றே நம்மைத் தரையில் காலூன்றி நடக்க உதவியது என்பதை உணர்வோம். மேலும் பொருட்கள் மேலிருந்து கீழ் விழுவதை இயற்கை என்று சட்டை செய்யாமல் வாழ்பவர்கள் நூற்றுக்குத் 99 பேர்.

அதைப்போலவே வாழ்வில் வரும் இன்பதுன்பங்கள் ஏன் என்று சிந்திப்பவர்கள் கோடியில் ஒருவரே.

மேலும் பிறப்பு இறப்பு என்ற ஒன்றே இல்லை.

அது மனதில் நிகழும் மாயை என்று ஞானிகள் சொல்வது நமக்குக் குழப்பத்தைத் தருகிறது.

எடுத்துக்காட்டாக பூமியில் உள்ள யாரைக்கேட்டாலும் இரவு பகல் உண்டு. சூரியன் உதிப்பதும் மறைவதும் உண்மை என்று சத்தியம் செய்வார்கள். வீடியோ கூட எடுத்து ” இதோ பார் சூரிய உதயம்! இதோ பார் அஸ்தமனம்!” என்று .

ஆனால் விண்வெளியில் பூமியின்மேல் விண்கலத்தில் சுற்றிவரும் வீரர்கள் இதைக் கேட்டு சிரிப்பார்கள். ” சூரிய உதயம் அஸ்தமனம் என்ற ஒன்று இல்லை. நாங்கள் எப்போதும் சூரியன் ஒளிவிடுவதைப் பார்க்கிறோம்!” என்று வீடியோ எடுத்துக் காட்டுவார்கள்.

ஆச்சரியம் என்னவென்றால் இரண்டுமே உண்மை. இதில் வித்தியாசம் அவரவர் நிற்கும் நிலையும் பார்க்கும் கோணமுமே!

நாம் பூமியில் உள்ளவரை சூரிய உதய அஸ்தமனம் உள்ளதைப் போல மனதால் கட்டுண்ட உண்டு,உறங்கி,உடலால் கூடி நடத்தும் இன்ப துன்ப வாழ்வில் பிறப்பும் இறப்பும் உண்மை!

மனமழிந்த முக்தி நிலையில் உடல் மட்டுமே தோன்றி மறைகிறது. நாம் மறைவதில்லை. நாம் என்றுமுள்ள பரம்பொருள். மனதால் இயற்றிய கர்ம வினைகளைக் கழிக்க உடல் தோன்றி மறைகிறது. இதை உணர்வதே ஆன்மீகத்தின் குறிக்கோள்.

வழிபாடு சடங்குகள் நம் மனதைக் கடக்க உதவும் வழிமுறைகளே. முக்தி ,விடுதலை,மோக்ஷம்(மோஹ=ஆசைகள் க்ஷயம்=மறைதல் அதாவது ஆசைகள் மறைவதே மோக்ஷம். தனியாக எங்கோ சுழலும் உலகில் அரை ஏக்கர் நிலம் கிடைப்பது என்ற பொருள் இல்லை)என்று நாம் சொல்லும் அத்தனையும் ஒரே நிலையைக் குறிக்கும் !

#முக்திமோட்சம்லிபரேஷன்ரியலைசேஷன்