பெண்களின் மேல் ஏன் இந்தக் குவியம்?

எல்லாவற்றிற்கும் பெண்ணையே பாராட்டுவதும் பெண்ணையே குற்றம் சொல்வதும் ஏன்?
ஔவையார் என்ற பெண் சொல்கிறார்

இல்லாள் அகத்திருக்க இல்லாதது ஒன்றில்லை
இல்லாளும் இல்லாமே ஆமாயின் – இல்லாள்
வலிகிடந்த மாற்றம் உரைக்குமேல் அவ்வில்
புலிகிடந்த தூறாய் விடும்.

பெண் நல்லவளாய் இருந்தால் அந்த வீட்டில் இல்லாதது ஒன்றும் இல்லை. அவளுக்கு ஒன்றும் இல்லாவிட்டால் ( படிப்பு,பண்பு,புத்திக் கூர்மை,அன்பு,தயை,இரக்கம்,கருணை,பாசம்,..
இல்லாவிட்டால்) புலி வாழும் காடாக வீடு மாறிவிடும்!

காய்கறிகளை மிகச் சிறிதளவே பரிசோதித்தும் வைரத்தை 4C இருக்கிறதா என்று பார்த்தே வாங்குகிறோம். அதனால்தான் பெண் பரிசீலிக்கப் படுகிறாள். புலி வாழும் காட்டில் வாழ ஒருவரும் விரும்புவதில்லை.
#பெண்களின்மேல்ஏன்இந்தக்குவியம்

சாம்பார் பொடி என் குரு!

சாம்பார் பொடி வீட்டில் செய்யத் தெரியாதவர்கள் திடீர் ரசப்பொடி திடீர் சாம்பார்ப் பொடி என்று வாங்குகிறார்கள்.

அதைப்போல அறவாழ்வு வாழ்ந்து இறைநிலை அடைய சோம்பித் திரிபவர்கள் ரெடிமேட் இறைநிலை தேடி திடீர் பக்தி திடீர் யோகம் திடீர் ஞானம் அடைய முடியும் என்று நினைக்கிறார்கள்.

முயல்கிறார்கள்.

சாம்பார் பொடியில் பல செடிகளின் வேர் இரசாயனப் பொருட்கள் கலந்திருப்பது இயற்கையே! அதுபோக அதிகமான மக்கள் இவ்வழியாக செல்லும்போது கலப்படமும் அதிகமாகிறது.

அன்றாட நிகழ்வுகள் என்ற சந்தனக்கல்லில் நம் கர்மவினையை விருப்பு வெறுப்பின்றி தேய்த்தால் நம்முள் உள்ள ஆன்ம அனுபவம் சந்தன மணம் போல பரவும். நம் அனுபவங்கள் அரைத்த சந்தனமாய் பலருக்கும் உதவும்.
#சாம்பார்பொடிஎன்குரு

கோ கோ ஆட்டம்!

வாழ்கிறோமா அல்லது உயிரை கையில் பிடித்துக் கொண்டு ஒவ்வொரு நாளையும் கழிக்கிறோமா என்ற ஐயம் தோன்றுகிறது..

இதன் மூல காரணம் பணம். பணத் தேவை அதிகரிப்பு.

வாழ்க்கை கோ கோ ஆட்டம் போல ஆகிவிட்டது. நம் பணப்பையில் அடுத்தவன் கைவைத்து காலி செய்ய நாம் அடுத்தவன் பணப்பையில் கைவிடுகிறோம்.

பாதிக்கப் பட்டவன் மற்றவன் பணப்பையில் கை வைக்க ஓடுகிறான். அதாவது பரவாயில்லை. நாம் மூச்சிறைக்க வந்து உட்கார்ந்த உடனே கோ கோ என்று நம்மை மறுபடி தொட்டு விடுகிறான்.

ஓடி ஓடி களைத்து வாழ்ந்தோமா தினமும் செத்துச் செத்து வாழ்ந்தோமா என்ற நிராசையுடன் இருக்கும்போதே காலன் வந்து கதவைத் தட்டிவிடுகிறான்! வாழ்க்கையாடா இது?! என்று தோன்றுகிறது. இந்த கோ கோ விளையாட்டு வெள்ளைக்காரன் கற்றுக் கொடுத்தது .

அறம் என்ற சொல்லே அவன் பரம்பரையில் கிடையாது. அறமில்லா நடமாடும் பிணங்களாய் பணத்தைத் தேடி தேடி ஓட வைக்கும் இந்த கோ கோ ஆட்டம் ! மிடீல!

இதற்கு மருந்தாக வள்ளுவர் அறன் வலியுறுத்தல் என்று பத்து குறள்கள் சொன்னார்.

அறத்தான் வருவதே இன்பம் மற்றெல்லாம்
புறத்த புகழும் இல

இன்பத்தை அனுபவி. ஆனால் அறத்தால் பொருளீட்டு. அறமற்ற இன்பம் இன்பம் போல தோன்றி தீவினையைச் சேர்த்துவிடும்.

வடிவேலு தங்கச் சங்கிலியை ஆட்டயப் போட்டு ஒரு சேட் கடையில் தான் பெரிய ரவுடி என பில்டப் கொடுத்து பல ஆயிரம் சுருட்ட முயற்சிக்கும் போது சேட் சாமர்த்தியமாக மனைவியோடு பேசுவது போல பேசி காவல்துறையிடம் மாட்டி விடுவது போல அறமற்ற வழியில் பணம் தேடி வாழ்ந்தால் ஒரு நாள் வாழ்க்கை பணம் கொட்டப் போகின்றது என்று நினைத்து மகிழும்போது அறக் கடவுளிடம் மாட்டி விட்டுவிடும்.
நாம் பரிகாரம் செய்ய திருநள்ளாறு போகலாமா காளகஸ்தி போகலாமா என்று யோசிப்போம்!

ஆடும்வரை ஆட்டம்! ஆயிரத்தில் நாட்டம்! – கண்ணதாசன்

இந்த பண நாயகம் ஒழியாதவரை கோ கோ !

அப்பாடா! நான் உட்கார்ந்துட்டேன்! யாராவது கோ கோன்னு எழுப்பி விட்டுராதீங்கய்யா!

#கோகோஆட்டம்

இறை சித்தம்

இறையருள் இன்றி ஒரு வினாடி கூட உயிர்வாழ முடியாது.

கர்மவினை முடிந்ததும் ஒரு வினாடி கூட உடல் தாங்கி வாழ முடியாது.

ஒரு உண்மைச் சம்பவத்தை பகிர விரும்புகிறேன்.

துறவியின் பெயர் நினைவில்லை. கைலாசாநந்தர் என நினைக்கிறேன்.

அப்பழுக்கற்ற துறவி. அருப்புக்கோட்டை பகுதியில் ஆசிரமம் நடத்தி வந்தார்.

நல்ல உடல்நிலை ஆரோக்கியம் கொண்டவர்.
என்றும் போல ஆசிரம வேலைகளில் ஈடுபட்டிருந்தார். அவருக்கு திடீரென்று நெஞ்சு வலித்தது.

ஆசிரமத்தைச் சேர்ந்தவர்கள் யாராவது இருதய சிகிச்சை நிபுணர்கள் இருக்கிறார்களா என்று அவசர அவசரமாகத் தேடினார்கள்.

அந்த ஊரில் பெரும் பணக்காரர் ஒருவர் இருந்தார். அவர் இருதய நோய் உள்ளவர். மாதம் ஒருமுறை இதயநோய் வல்லுநர் அவரைப் பார்த்து உடல்நலம் ஆய வருவது வழக்கம். அதனால் அந்த மருத்துவரும் மாரடைப்பிற்கான மிக அரிய விலை உயர்ந்த மருந்தை தன் உடன் வைத்திருப்பார்.

துறவிக்கு மாரடைப்பு வந்த போது அந்த மருத்துவரும் அன்று வந்திருந்தார். தகவலறிந்து பதறி காரில் விரைந்தார் ஆசிரமத்தை நோக்கி. ” இறையருள்! ஸ்வாமி பிழைத்துவிடுவார்!” என்று அனைவரும் மகிழ்ந்தார்கள். மருத்துவருக்கு உடலெல்லாம் வேர்த்துவிட்டது. அவசரத்தில் மருந்தை மட்டும் கொண்டு வந்துவிட்டார். ஊசிகளை அந்த செல்வந்தரின் வீட்டில் விட்டுவிட்டு வந்துவிட்டார். அருகில் எந்த மருத்துவமனையோ மருந்தகமோ இல்லை. அனைவரும் உறைந்து போய்விட்டார்கள்.

” இறைவன் சித்தம் நான் புறப்பட வேண்டும் என்பது! அப்படியே ஆகட்டும். உங்கள் மீது பிழை இல்லை. என் பரிபூரண ஆசிகள் உங்களுக்கு. வருகிறேன்!” என்று உயிர் துறந்தார்.

எல்லாம் இருந்தது. ஆனால் விதி முடிந்துவிட்டது.

அதனால் டேக் இட் ஈஸி!

#இறைசித்தம்

நட்பு உறவு நல்வினை தீவினை வாழ்க்கை

நட்பும் சுற்றமும் தரும் துன்பங்களை அவர்களை நோகாமல் ஏற்கவும் அவர்கள் செய்யும் நன்மைகளை பாராட்டி மகிழ்வதும் நம்மை நடமாடும் தெய்வங்களாக்கும்.

நாம் சேற்றில் விழுந்த குழந்தை போல. தாய் கொதிக்கின்ற நீரை(தீவினை) குழந்தை மேல் ஊற்ற மாட்டாள். உடல் உறையும் அளவு குளிர்ந்த நீரையும்(புண்ணியம்) ஊற்றமாட்டாள். பதமான சூட்டிலேயே குளிப்பாட்டுவாள். குழந்தை இருந்தாலும் குளிக்க முரண்டு பிடிக்கும் . ஓடி ஒழியும். தாய் இழுத்துப் பிடிக்க வருவாள். களைத்துப் போய் “டேய்! தம்பிய தூக்கிட்டுவாங்கடா !” என்று மூத்த பையனை(சுற்றம்) மகளை(உறவு) ஏவுவாள். அவர்கள் குழந்தையைப் பிடித்து வருவார்கள்(உறவு நட்பால் வரும் தொல்லை). குழந்தை அவர்களை அடிக்கும்(உறவுக்கும் நட்புக்கும் நாம் தரும் எதிர்வினை)நம் எதிர்வினை . கடிக்கும். ” அம்மா! பாப்பா கடிச்சி வைக்குது!” என்று முறையிடுவார்கள். அம்மா சிரிப்பாள். என் மார்பையே பாலூட்டும்(இறைவன் இல்லை என்று கூறுவது) போது கடிப்பவள் தானே என்று எண்ணி. இதுதான் தெளிவு.

இது தெரிந்தால் பகைவனிடமும் ஏமாற்றுக்காரனிடமும் கருணை அன்பு பெருகும்.

எல்லாம் ஒரு விளையாட்டே இந்த உடம்பு உள்ளவரையில்.

பிறகு அடுத்த உடம்பு .அடுத்த உறவு நட்பு. தொடரும் கர்மவினைகள். சுகம் துக்கம் ஏமாற்றம் சண்டை பெருமிதம் ஆணவம்….. என்று நகரும் வாழ்க்கைகளின் முடிவிலாச் சங்கிலி.

” என் தம்பி துரோகம் பண்ணிட்டான்!
மச்சான் பழிவாங்கிட்டான்!
அப்பா கைவிட்டுட்டார்!
சகோதரி க்ராதகி!” என்று அங்கலாய்ப்பது நேர விரயமே!. அவரவர் விதிவசம்,அவரவர் அனுபவம்!

நட்பும் சுற்றமும் தரும் துன்பங்களை அவர்களை நோகாமல் ஏற்கவும் அவர்கள் செய்யும் நன்மைகளை பாராட்டி மகிழ்வதும் நம்மை நடமாடும் தெய்வங்களாக்கும்.

பொருட்காட்சியில் ராட்டினத்தை இயக்குபவர்(இறைவன்) யோசிப்பார் ” இப்படி மேலும் கீழும் போவதில் என்ன ஆனந்தமோ?! மக்கள் காசு(கர்ம வினை) கொடுத்து வரிசையில் முட்டிமோதி ராட்டினத்தில்(வாழ்க்கை) ஏறுகிறார்கள். காசில்லாதவன்(கர்ம வினை இல்லாதவன்) ராட்டினத்தில் ஏற வேண்டியதும் இல்லை. வேகம் பொறுக்காமல் வாந்தி எடுக்க வேண்டியதும் இல்லை!”

#சுற்றமும்நட்பும்