தன்முடிவு என்ற ஃப்ரீவில்!

அருமை நண்பர் பெல் முத்துக்குமார் சார் freewill உண்டா என்று கேள்வி கேட்டிருந்தார். அறிவியல் சோதனைப்படி freewill இல்லை என்று சான்ஃப்ரான்ஸிஸ்கோ பல்கலைக்கழக சோதனைகளில் நிரூபிக்கப்பட்டது என்றும் கண்ணன் கீதையில் ” அனைவரையும் இயந்திரங்கள் போல நான் ஆட்டிவைக்கிறேன்!” என்று கூறியதையும் சுட்டிக்காட்டினேன். மேலும் தேவாரத்தில் வரும்

ஆட்டுவித்தால் ஆரொருவர் ஆடா தாரே
    அடக்குவித்தால் ஆரொருவர் அடங்கா தாரே
ஓட்டுவித்தால் ஆரொருவர் ஓடா தாரே
    உருகு வித்தால் ஆரொருவர் உருகா தாரே
பாட்டுவித்தால் ஆரொருவர் பாடா தாரே
    பணிவித்தால் ஆரொருவர் பணியா தாரே
காட்டுவித்தால் ஆரொருவர் காணா தாரே
    காண்பாரார் கண்ணுதலாய் காட்டாக் காலே

குறிப்பையும் சுட்டிப் பொருள் கொள்ளலாம்.

மேலும் சிறு விளக்கங்கள் இங்கு பொருந்தும்.

கீதையின் ஆரம்பத்தில் குழப்பமடைந்த அர்ச்சுனன் ” கண்ணா! எனக்கு ஒன்றும் புரியவில்லை! போர்புரிய முடியவில்லை! வில்லும் அம்பும் நழுவுகின்றன! உடல் பற்றி எரிகிறது! நான் உன் சிஷ்யன் ! எனக்கு வழிகாட்டு !” என்கிறான்.

கண்ணன் இந்த ஆன்மா அழியாது ! சத்திரிய தர்மம் தீதை எதிர்த்து அழிப்பதே! கடமையைச் செய்! நீ கொல்லாவிட்டாலும் அவர்கள் செய்த தீவினை அவர்களை கொல்லும் தருணம் இது! “என்னை எண்ணி யுத்தம் செய்! மாம் அனுஸ்மர யுத்யச” என்றான்.

இந்த நிலையில் அர்ச்சனனுக்கு ஃப்ரீவில் இல்லை.செய்வதறியாது குழம்பிய நிலையில்!

மேலும் மேலும் அர்ச்சுனன் கேள்விகளை மடக்கி மடக்கி கேட்டு கேள்வி பதில் 600 ஸ்லோகங்கள் அளவு நீள்கின்றன!

இதற்குப் பிறகு அர்ச்சுனன் ” நீ என்ன சொல்கிறாயோ அதைச் செய்ய சித்தமாக இருக்கிறேன்! கரிஷ்யே வசனம் தவ!” என்கிறான்.

அப்போது கண்ணன் ” உன் விருப்பம் எப்படியோ அப்படிச் செய்! யதா இச்சஸி! ததா குரு!” என்று அவனை ஆச்சரியத்தில் ஆழ்த்தினான்!

முதலில் ” என்னை எண்ணி யுத்தம் செய் என்றவன் இப்போது உன் விருப்பம் போல் செய் என்கிறானே!” என யோசித்தான்.

குழம்பிய நிலையில் நம் ஃப்ரீவில் வேலை செய்வதில்லை. விவேகம் வந்தவுடன் ஃப்ரீவில் வேலை செய்கிறது. கடவுள் வாழ்க்கையின் லகானை நம் கையில் கொடுத்துவிடுகிறான்!
(தொடரும்)

தில்

பலமுறை செய்யாத தவறுக்கு ஏசலும் ,செய்த பணிக்கு நன்றி இன்மையும்,…. ஏற்படும்.

 அப்போது என்றோ செய்ததற்கு இன்று பலன் கிடைக்கிறது ! என்று நினைத்து கடந்துவிடுவது நல்லது!

அந்த வினை அதோடு முடிந்து போகும்.

 எதிர்வினை செய்தால் அது பல கிளைகளாக பிரிந்து துன்புறுத்தும்.

 இதையே ” உன் ப்ராப்தம்! கொடுப்பினை!” என்று சுருக்கமாகச் சொல்கிறோம்.

 எதிர்வினையால் வினை அதிகரிப்பது ஆகம்ய கர்மா எனப்படும்.

இதைப் பிரித்து அறிந்து சிரித்த முகத்தோடு ஏற்றால் ஆகம்ய கர்மா பாதிக்காது.

 பிறவிகள் குறையும்.

அடுத்தூர்வது அஃதொப்ப தில் என வள்ளுவர் தில்லாக இரு என்பதும் இதனால் தான்!

டாக்டர்! நாக்கக்காணோம்!

பல் மருத்துவமனையில் ஒரே குழப்பம். ஒரு நோயாளி தன் நாக்கைக் காணோம் என்று மிகவும் கத்தி கதறிக் கொண்டிருந்தார்.

மருத்துவ உதவியாளர் எவ்வளவு சொல்லியும் அவர் சமாதானமாகவில்லை!

“என்னங்க! இது பெரிய விஷயமா? கண்ணாடில காட்றது தான!” என்றேன். ” இல்லீங்க! ரெண்டு கண்ணுலயும் இப்பதான் பெரிய ஆப்பரேஷன் பண்ணிருக்காரு.திரை போட்டுருக்கு!” என்றார் உதவியாளர்.

டாக்டர் உள்ளே வந்து நிலைமையைப் புரிந்து கொண்டார்.

” ஐயா! உங்களுக்கு நாக்கு தான வேணும்! இன்னும் ஒரு மணி நேரத்துல கண்டுபிடிச்சுத் தர்றது எம் பொருப்பு.ஆனா நான் சொல்றதக் கொஞ்சம் கேளுங்க !” என்றார்.

” ஐயா! உங்களுக்கு பல் பிடுங்க மரத்துப் போற ஊசி போட்ருக்கு. அதனால உங்க நாக்கும் சுத்தமா மரத்துப் போச்சு! அது சிலருக்கு சில மணிநேரம் ஆகும் தெளியிறதுக்கு! சரி கண்ணாடில காட்டலாம்னா உங்க கண்ணுல திரை கட்டியிருக்கு !  அது திறக்க நாளாகும்! இது தான் உங்களுக்கு நாக்கு இல்லாதமாதிரி தெரியிது! நாக்கு இல்லைன்னு சொல்லவே நாக்கு இருந்தாதான் முடியும் பெரியவரே!” என்று சமாதானப் படுத்தினார்.

” அட! அப்டியா விஷயம்?!” என்றார் நோயாளி.

நாக்கு – கடவுள்
மரத்துப் போதல் – சொகுசான அமைதியான உலகவாழ்வு, புலன்களுக்கு உட்பட்டதை மட்டும் அறிதல்
நாக்கு இல்லை என்பது – இறைவன் இல்லை என்று சொல்வது இறைசக்தியின் ஒரு அம்சமான நாமே அவன் இல்லை என்பதைப் போல
நாக்கு உள்ளதை உணர்தல் – உலக இன்ப துன்பங்களை சந்தித்து உலகாயத வாழ்வின் மயக்கம் தெளிந்து இறையுணர்வு வரப்பெறல்
கண்ணில் திரை – ஐம்புலன்களுக்கு எட்டாத இறைநிலை

வாழ்க்கைத் துணை!

வாழ்க்கையில் ஒவ்வொரு அடி எடுக்கும் போதும் அது தரும்  அடியின் வலியிலிருந்து வலிமை நோக்கி முன்னேறுகிறோம்!

நமக்கு வரும் சோதனைகள் வித விதமாய்!

கணவனுக்காக மனைவியும் மனைவிக்காக கணவனும் முடிவெடுக்கும் தருணங்களில் நாம் சரியான முடிவுதான் எடுக்கிறோமா என்ற குழப்பம் பலமுறை வரும்.

நம் பண்பாட்டில் நாம் நம் வாழ்க்கைத் துணையின் கையில் நம்மை அர்ப்பணித்து விடுகிறோம்!

அந்த அர்ப்பணிப்பு புனிதமானது.

அது நல்ல முடிவுகளையே ஈட்டித் தருகிறது! 

போராடியே ஆக வேண்டிய தருணங்கள்!

ஒருவர் மற்றவரின் உயிரையே கொடுக்கும் எடுக்கும் முடிவுகளை எடுக்க கையில் காண்டீபம் நழுவவிட்ட அர்ச்சுனன் போல கலங்குகிறோம்! மற்ற எவரும் உதவவும் முடியாத தருணங்கள்!

தாய் தந்தை கூட செய்வதறியாது கலங்கி தள்ளி நின்று பார்க்க வேண்டிய சூழ்நிலைகள்!

“என்னை நினைத்துக் கொண்டு யுத்தம் செய் !” என்றான் கண்ணன் மனம் கலங்கிய அர்ச்சுனனை நோக்கி!

அதுதான் வாழ்க்கை!

அறியாக் குழந்தை நான்!

குருவாய் எனக்கு இறைவன் ஒருவாய் ஊட்ட மறுவாய் மற்றவர்களுக்குப் பகிர்கிறேன். சோறூட்டும் அம்மாவிடம் ஒருவாய் வாங்கிய குழந்தை ” அக்காவுக்கும் அண்ணனுக்கும் ஊட்டும்மா,பசிக்கும்!” என்று சொல்லும் அறியாக் குழந்தையாக நான். ” அவங்க தட்டு வச்சு சாப்டாச்சு கண்ணு !” என்று தாய் சொன்னாலும் பகிர அடம்பிடிக்கும் அறியாக் குழந்தை நான்!

இலையிருந்தும் சோறில்லை!

நண்பர் வீட்டு திருமணத்திற்கு சென்றிருந்தேன்.
பயணக் களைப்பு மற்றும் நல்ல பசி! கண் கட்டுகிறது ஒரு கட்டு கட்டுவோம் என பந்திக்கு முந்தினேன்.

இலை போடப்பட்டிருந்தது. ” அப்பாடா! கிச்சன் பக்கத்தில் உள்ள இலையில் செட்டில் ஆயிருவோம்!” என டக்கென்று இடம் பிடித்தேன். விறுவிறுவென்று பரிமாறத் தொடங்கினார்கள்.

என் இலைக்கு மட்டும் பரிமாறவில்லை! செம கடுப்பாக எழுந்து நேராக சமையலறைக்குப் போய் ” செம பசி! எனக்கு மட்டும் யாரும் பரிமாற மாட்டேங்கறாங்க! ஒரு வட அப்பளமாவது குடுங்கய்யா!” என்று கெஞ்சினேன்.

” தாராளமா இலை போட்டு சாப்டுங்க!” என்றார் கேட்டரிங் சீஃப். பசிவர பத்தும் பறந்து போக என் வாக்கில் நாகரிகம் குறைந்தது!

“யோவ்! அரமண்நேரமா எல முன்னாடி தான்யா உட்க்கார்ந்து இருக்கேன்! கடுப்பேத்தாதாங்க!” என்று எகிறினேன்.

சமையலறையில் என்ன ப்ரச்சனை என அங்கு வந்த என் நண்பன் ” நீயாடா?! என்னடா ப்ரச்சனை?! சாப்டுட்டு அப்புறம் பேசிக்கலாம்!” என்று மேலும் கடுப்பேற்றினான்.

” டேய்! வெறுப்பேத்தாத! சோத்துக்குத் தாண்டா இவ்ளோ ப்ரச்சனை! இல போட்டாங்க! ஆனா சோறு பரிமாற மாட்டேங்குறாங்க ” என்றேன்.
ஆச்சரியமாக என்னைப் பார்த்த அவன் ” வா ! வந்து காட்டு !” என்றான்.

வந்து பார்த்துவிட்டு உரக்க சிரிக்கத் தொடங்கினான்!
” டேய்! உன் இல மூடி இருக்குடா! அதான் பரிமாறல! நம்ம ஊரு வழக்கம் இலைல உட்கார்ந்ததும் இலயத் தொறந்து தண்ணி தெளிச்சு தொடச்சப் பெறகுதான் பரிமாறுவாங்க! போய் ஒக்காரு நானே பரிமாற்றேன்!” என்றான்!

ஒரு வழியாக சாப்பிட்டு முடித்தேன்! இதுதான் விவரம் என்று உணர்ந்த போது வெட்கினேன்.

இலை- நம் மனம்

மூடிய இலை – குறுகிய மனம்,தனக்குத் தெரிந்தது தான் உண்மை என்ற மன ஊனம்

தண்ணீர் தெளித்து துடைப்பது – சித்தத்தை அன்பு,கருணை,அடக்கம்,பணிவு,மனித நேயத்தால் உள்ளத்தை தூய்மை செய்வது

சோறு – இறைவனின் கருணை,இறையனுபவம்

உணவு உண்டு பசியாறுதல் – இறையனுபவமும் கண்ணில் தெரிந்ததும் தெரியாததும் நாமும் இறைவனே என்ற நிலை அடைதல்

வேதங்கள் சொல்வது என்ன?!

இந்துமதத்தின் நான்கு அடிப்படை மஹாவாக்கியங்கள் என ஒவ்வொரு வேதத்தில் இருந்தும் ஒரு சொற்றொடர் உள்ளது.

ப்ரஞ்ஞானம் ப்ரம்ம – தெளிந்த ஞானமே பரம்பொருள் ; ரிக் வேதம்

தத் த்வம் அஸி – இறைவனும் நீயும் ஒன்று; சாம வேதம்

அஹம் ப்ரம்மாஸ்மி – நான் பரம்பொருள் ; யஜூர் வேதம்

அயம் ஆத்மா பிரம்ம:- இந்த ஆத்மா பரம்பொருள் ;அதர்வண வேதம்

அதுவே நம் மதத்தின் அடிப்படை.
சமஸ்க்ருதம் மிக ஆழமான மொழி. ஒரே சொல் உப்பு மற்றும் குதிரை என்ற பொருட்பட வரும். கீழே நான் காஞ்சிப் பெரியவர் அருள்வாக்கைச் சுருக்கித் தருகிறேன்.

மேலும் வேதத்தில் கர்ம காண்டம் ஞான காண்டம் என இருபிரிவுகள்.

கர்மகாண்டத்தில் மந்திரம் வேள்வி அதிர்வுகள் போன்றவற்றால் நாம் வேண்டிய அழியும் பொருட்களான உலகவாழ்வு,சொர்க்கம் போன்றவற்றை நம்மால் தேவர்களிடமிருந்து பெறமுடியும்.

இது வெறும் அதிர்வு அடிப்படையால் ஆனது. அதாவது சரியாக மந்திரங்களை உபயோகித்தால் இந்திரன், வருணன்,வாயு,அக்கினி போன்றோரை மகிழ்வித்து மழை ,நல்ல விளைச்சல்,நோயின்மை,புத்திர பாக்கியம்,….. இப்படி பலவற்றைப் பெற முடியும்.

எடுத்துக்காட்டாக தேர்தலில் வெல்லவேண்டும் என்று அயோக்கியர்களும் வேள்வி நடத்துவது! பலன் உண்டா? உண்டு.

அரக்கர்கள் வேள்வி தவம் செய்து பல சக்திகளைப் பெற்றது உண்டு.

அதிர்வுகளால் எதையும் உருவாக்க முடியும்.அதை சுயநலத்திற்காக தீயவழியில் பயன்படுத்தக் கூடாது என்ற கட்டுப்பாடும் உண்டு!

மனிதன் வக்கிரமானவன்! தன் சகமாணவன் துரோணரை அழிக்கவேண்டி பிள்ளைவரம் கேட்க யாகம் செய்ய எண்ணினான் துருபதன். எல்லா அந்தணர்களும் அது தர்ம விரோதம் என்று மருத்துவிட ,”இரு அந்தணர்கள் இருக்கிறார்கள் நல்ல மந்திரசக்தி உள்ளவர்கள். அண்ணன் பணத்தாசை உள்ளவன். தம்பி நேர்மையானவன். அண்ணனை பணத்தால் வளைத்துவிட்டால் தம்பி சொல் கேட்ப்பான். நீ எண்ணியது நிறைவேறும் !” என அமைச்சர்கள் திருவாய் மலர வேள்வி நிகழ்ந்து ஆண் குழந்தை உருவானது.அவனே துரோணரை அழிக்க உருவான த்ருஷ்டத்யும்னன் !

தேவர்கள் “மனம் மகிழ்ந்தோம் உனக்கு ஒரு பெண் குழந்தையும் தருகிறோம் பெற்றுக் கொள் !” எனச் சொல்ல துருபதன் ” எனக்கு வேண்டாம் பெண் !” என தேவர்களை அவதூறாகப் பேசி அவமானப்படுத்தினான்.

வரம் தந்தே ஆகவேண்டிய கட்டத்தில் வெறுப்புடன் ஏடாகூடமாக “இந்தப் பெண் வாழ்நாள் முழுவதும் கஷ்டப்படவேண்டும்,அறிவாளியாக இருக்க வேண்டும்,பலரை மணக்க வேண்டும்,பத்தினியாய் இருக்க வேண்டும்!”  என ஏடாகூடமாக வரம் கேட்டு பெண் குழந்தையை அடைந்தான்.

அவள்தான் த்ரௌபதி! நான் மிகவும் வருந்துவது த்ரௌபதியை எண்ணி! அப்பன் கேட்ட வரம் அவள் ஆயுள் முழுவதும் கற்புக்குச் சோதனை!

இது எதற்குச் சொல்கிறேனென்றால் ஓரிரு அந்தணர்கள் மந்திர சக்தியைத் தவறாக பயன்படுத்துவது என்றும் இன்றும் உண்டு!

அதற்கு மந்திரங்களின் ஆளுமை பயன்பாடு தேவை. அந்த அடிப்படையில் தேவர்கள் மந்திரங்களுக்குக் கட்டுப்பட்டவர்கள்.

மந்திரங்களை அறிந்த அந்தணர்கள் தேவர்களை வசப்படுத்தி உலகவாழ்வை செழிப்பாக நடத்தமுடியும் என்பதால் அந்தணர்கள் உயர்வானவர்கள் என்ற பொருளில் சொல்லப்பட்டது.

ஆனால் அந்தணர்கள் கடவுள் என்பது எப்போதும் உலகவாழ்வின் மேன்மை மட்டும் வேண்டித் திரிபவர்களுக்கே பொருந்தும்.

இதில் சிக்கல் என்னவென்றால் அதர்மம் செய்யும் அரசியல்வாதிகள் அரசர்கள் இதைக் குறுக்கு வழியாக ஆஹா! மந்திரத்தால் மாங்காய் வரும் என்ற நிரூபணம் ஆகிவிட்டது. அந்தணர்களுக்கு செய்யவேண்டியதைச் செய்து தேவதைகளைத் திருப்தி செய்து எதை வேண்டுமானாலும் பெறலாம். இதற்கு கடவுள் எதற்கு என்ற சிந்தனை வலுத்து பலகாலம் இப்படியே சென்று கொண்டிருந்தது.
அந்த காலகட்டத்தில் இந்த நிலைமை உருவாகியது. அதாவது எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான் என்பது ஒரு உயர்வு நவிற்சியாய்ச் சொல்வது போல! நம் ஆசிரியர் சாட்சாத் கடவுள் என்றால்  நாம் நம்புவது கடினம்.
அடுத்து ஞானகாண்டம் இந்த உலகாயத போக்கை வன்மையாக கண்டித்து ” மந்திர மந்திரங்களை வைத்து வேண்டியதைப் பெறலாம்.இவை அனைத்தும் அழிபவை! மந்திர தந்திரங்களை கடந்து நீ கடவுள் என்பதை உணர் .உன்னைத் தாண்டி வேறு தெய்வம் இல்லை! என்கிறது.

இதில் பிறந்தவையே நமது அடிப்படை மகாவாக்கியங்கள்.
ப்ரஞ்ஞானம் ப்ரம்ம – தெளிந்த ஞானமே பரம்பொருள் ; ரிக் வேதம்

தத் த்வம் அஸி – இறைவனும் நீயும் ஒன்று; சாம வேதம்

அஹம் ப்ரம்மாஸ்மி – நான் பரம்பொருள் ; யஜூர் வேதம்

அயம் ஆத்மா பிரம்ம:- இந்த ஆத்மா பரம்பொருள் ;அதர்வண வேதம்

இது இறுதி நிலை.

நீண்ட நாட்களாகவே இந்த அடிப்படைகள் பற்றி காணொளி பதிய எண்ணம். நேரம் வரவில்லை! ஒரு தொடராக இந்துக்களாகிய நாம் குழுவில் பதிய எண்ணம்!