கோவிலில் செய்ய வேண்டியது

1.அபிஷேகத் தீர்த்தம் குடிக்காமல் வராதீர்கள்(அறிவியல் விளக்கம் பின்னால் இடுகிறேன். அதற்கு ஒரு இரண்டு பதிவாவது வேண்டும்).
2.சிவன் கோவில் அபிஷேகத் தீர்த்தம் என்றால் அதைவிட முக்கியம்.
பிண்ணனி அறிவியலை அறிந்த பின் ஆச்சரியம் அடைந்தேன் நம் முன்னோர்களை எண்ணி! எவ்வளவு பெரிய அறிவியல் உண்மைகளை எவ்வளவு எளிதாக்கிச் சென்றார்கள் என்று! வியப்பில் விழி பிதுங்குகிறது!
3.விசேஷ நாட்களில் கோவிலில் இரைச்சலும் வேண்டுவோர்களின் மன அதிர்வுகளும் உங்கள் கோவில் செல்லும் பலனையே முறியடித்துவிடும்.

கோவிலில் செய்யக் கூடாதது!

கோவில் மூல விக்ரகம் எலக்ட்ரிக் சார்ஜிங் ஸ்டேஷனைப் போல!  ஒரு ஓரமாக அமர்ந்து கண் மூடி உங்கள் மனதை ப்ளக் செய்யுங்கள். அங்கு ஒலி அலையும் (ப்ரார்த்தனை,அர்ச்சனை,வேண்டுதல்,தேங்காய் உடைத்தல்,அர்ச்சனைத் தட்டு மாறிய சண்டை,ஆயிரம் ரூபாய் தரிசன டிக்கட் சண்டை….) மன அலையும் (இதைக் கொடு முருகா! அதைக் கொடு முருகா என்ற மன உளைச்சல்கள்…)கூடாது.
இந்த ஒலி மற்றும் மன அலைகள் சந்நிதியில் இருக்கும் இறை உருவிலிருந்து வெளிப்படும் சக்தி வாய்ந்த அதிர்வுகளை அடைய முடியாமல் செய்யும்.
இரண்டு உதவிகள் செய்யுங்கள்:
1.பேர் சொல்லி அர்ச்சனை செய்யாதீர்கள்
.அர்ச்சனை டிக்கட்,அர்ச்சனை தட்டே வாங்காதீர்கள். பூவோ மாலையோ வாங்கவேண்டிய அவசியமும் இல்லை.
2.எதையும் வேண்டாதீர்கள்.
இதை இரண்டையும் செய்தால் உங்கள் வாழ்வு செழிக்கும். இது சத்தியம்.
அறிவியல் பூர்வமாக பின்னர் விளக்குகிறேன்

அதிசயங்கள்!அற்புதங்கள்!

நீங்கள் அதிசயங்கள் அற்புதங்களைச் செய்பவர்களை விட்டு விலகுங்கள்! அவர்களிடம் தவறு இல்லை. உங்களிடம் தவறு இருக்கிறது!
“எந்த அற்புதத்தால் எதை வேண்டிப் பெற்றாலும் அவை அனைத்தும் அழியும் பொருட்களே!”
இதை மனதில் நிறுத்தினால் அற்புதங்கள் பெரிய விஷயமாகத் தோன்றாது.
நானும் சில அற்புதங்கள் நிகழ்வதை நேரில் கண்டிருக்கிறேன்.
குழந்தை இல்லாதவர்கள் சில சடங்குகள் அமானுஷ்ய சக்தி உடையவர்களை நாடி அவ்வாறே பெறுவதைக் காணலாம். அது எப்படி நடக்கின்றது என்றால் நம் கர்மவினைகளை முன்னுக்குப் பின் தள்ளிப்போடுவதால். அடுத்து வரும் பிறவிகளில் ஏதோ ஒன்றில் குழந்தைச் செல்வம் உண்டென்றால் அந்த கர்மவினையை இந்த பிறவிக்கு மாற்றி இப்பிறவி வினையை அந்தப் பிறவிக்கு மாற்றிவிடுதலால் குழந்தை பிறக்கிறது!
சீட்டு விளையாடும் போது தேவையற்ற சீட்டு கட்டிலிருந்து கிடைத்தால் வீசிவிட்டு மற்றவர் கீழேபோட்ட சீட்டை எடுத்துக் கொள்வதைப் போல என ஒரு அரைகுறை உதாரணம் சொல்லலாம்.
இது இயற்கையோடு விளையாடுவது போல. தள்ளிப் போடலாம்.ஆனால் தடுக்க முடியாது!
சாயி பாபா இதை அழகாகச் சொல்வது உண்டு ” நீ என்னை உன் கர்மவினைப் பெட்டியைச் சுமக்கும் கூலிக் காரனாக மட்டும் நினை! அதனால் நீ சுமக்கும் பாரம் குறையுமே ஒழிய உன் பெட்டி உன்னுடையதே! வீடு வந்தால் இறக்கி வைத்துவிடுவேன்!”
இதன் உள்ளர்த்தம் ” இறைவழிபாட்டால் துன்பங்கள் குறையும் போது அந்த கணங்களில் நல்லதைச் செய்து பெட்டியில் உள்ள பொருட்களை மாற்றி விடு! அன்பு,இரக்கம்,பணிவு,கருணை,ஈகை ,ஒழுக்கம் என நல்ல பொருட்களை பெட்டியில் வைத்துவிட்டு அகம்பாவம்,கொடூரம்,கோபம்,களவு,பொய்,… இப்படிப்பட்ட கனமான பொருட்களை தூக்கி வீசி விடு!

ஒன்றுமே தெரியாது!

யமம்,நியமம்,ஆஸனம்,ப்ராணாயாமம்,ப்ரத்யாஹாரம்,தாரணம்,த்யானம்,ஸமாதி,ஸஹஜ ஸமாதி,விகல்ப்ப ஸமாதி,நிர் விகல்ப ஸமாதி,வைகரி,உபம்ஸு,மானஸீ,குண்டலினீ,இடா,பிங்கலா,ஸுஷும்னா,மூலாதாரம்,ஸ்வாதிஷ்டானம்,மணிபூரகம்,அநாஹதம்,விஸுத்தி,ஆக்ஞா,ஸஹஸ்ராரம்……
.
இதில் எதுவுமே உங்களுக்குத் தெரியவேண்டிய அவசியமில்லை!
பிறரிடம் நாம் செலுத்தும் அன்பு மட்டுமே  போதும்! இறை நம்பிக்கை கூடத் தேவையில்லை! எதை நாம் எக்கணம் அறியவேண்டுமோ அக்கணம் அது நம்மை வந்தடையும்!
நாம் இறைவனைத் தேடுவதைவிட அவன் நம்மை மிகவும் வேகமாகத் தேடுவதை நம் வாழ்வின் நிகழ்வுகளால் அறியலாம்!

மனக் காந்தம்

வாழ்க்கை காந்த முள் போல அலைக்கழிந்தது. நான் உலகத்தைக் குறை கூறினேன். நந்நூல்களும் ஆன்றோரும் “உன்னில் பிழை! உலகத்தில் பிழை இல்லை!” என்றார்கள். “இந்தப் பெரிசுகளுக்கு ஒன்னும் தெரியாது! நாம யாரு?! அவங்களப் போலவே நம்பள நெனச்சுக் கிட்டு !” என்று முகம் சுழித்தேன்.
வாழ்வு நகர்ந்தது வழக்கம் போல். என்னுள் பல முரண்பாடுகளைக் கண்டேன். ஒன்றொன்றாய் திருத்த முயன்றேன். வாழ்க்கை எனும் காந்த முள்ளின் அலைக்கழிப்பு குறைந்தது! “அடடா! நம்ம உள்ளுக்குள்ள உள்ள காந்தத்திற்கு கட்டுப்பட்டே வாழ்க்கைக் காந்தம் நகர்கிறது ” என கண் கூடாக உணர்ந்தேன். நிலையாமை,அடக்கம்,பணிவு,அன்பு… பழகத் தொடங்கினேன்.உள் மனக் காந்தத்தின் வீரியம் ஏறியது. தன்னுணர்வு(Ego) என்ற முறுக்கேறிய கயிற்றில் கட்டப்பட்ட மனக் காந்தம் வீரியம் அதிகமானாலும் சுழன்று கொண்டே இருக்கிறது. அதனால் வாழ்வெனும் காந்த முள்ளும் இன்னும் அலைபாய்கிறது. தன்னுணர்வு முறுக்குக் கயிறின் முறுக்கைக் குறைத்து அதை அறுக்கும் முயற்சியில் நான்! கயிறு அறுந்தால் காந்தமும் காந்த முள்ளும் சுற்றுவதும் அலைபாய்வதும் நிற்கும்! அதுவே முக்தி நிலை!

விழித்திரு!

சகோதரி Neeraja Bathini Arunachalam  கீழ்க்கண்ட வள்ளலார் பாடலை பகிர்ந்தார்.

விழித்து விழித்திமைத்தாலும் சுடர் இலையேல் விழிகள் விழித் திளைப்பதல்லால் விளை வொன்றும் இல்லையே

கண் பார்வை அற்ற ஒருவன் எத்தனை முறை கண்ணை விழித்து விழித்துப் பார்த்தாலும் கண்ணிற்கு ஒன்றும் புலப்படாது.கண்ணிற்கு உளைச்சல் ஏற்படுவதைத் தவிர வேறு பயனில்லை!
அதைப்போல உலகின் நிலையாமை உணர்தல் என்ற விழிப்புணர்வு ஏற்படாமல் பலப்பல சடங்குகளிலும் சாத்திரங்களிலும் நேரத்தையும் செல்வத்தையும் வீணடிப்பதால் இறைநிலையை உணர முடியாது.நேரமும் செல்வமும் வாழ்வும் வீணாவதைத் தவிர வேறு பயனில்லை.

இதன் பொருள் குருவின் அருளின்றி இறைநிலை பெற இயலாது என்பதல்ல. என்று நமக்கு விழிப்புணர்வு ஏற்படுகிறதோ அன்றுதான் இறைவன் குருவை முன் நிறுத்துவான். நாம் தேடிச் சென்றடையும் குரு சத்குரு அல்ல! பக்குவம் அடையும் வரை குருவைத் தேடுதல் வீண் முயற்சியே!

சடங்குகள்

சடங்குகள் மூலமும் தெய்வத்தை அடையலாம். இல்லாமலும் அடையலாம். சடங்குகள் வழிச் செல்வது எளிது. இந்தக் கேள்விகளுக்கு விளக்கம் சுருக்கமாக அளிக்க முடியாது. அளித்தால் குழப்பம் அதிகமாகும். உதாரணமாக உங்கள் கேள்விக்கு பதிலாக ” சகுண உபாஸனையாலும் நிர்குண உபாஸனையாலும் இறைவனை அறியலாம் ” என்ற சரியான விடை கூறினால் விளங்காது. அதனால் சகுணம்,நிற்குணம்,உபாஸனை,அறிதல் போன்றவற்றை யாராவது உங்களுக்கு விளக்கினால் புரியும். இவையெல்லாம் பலர் மூலம் கேட்டாலும் சட்டென்று புரியாது. அந்த குறைபாட்டை நீக்கவே எனக்கு நேரமில்லாவிட்டாலும் 30 ஆண்டுகளாக நான் தேடித்தேடிக் கண்டதை நண்பர்களுடன் பகிர்கிறேன். முழு நேரத்தேடலில் பல வருடங்கள் ஈடுபட்டவர்களே மிகக் குறைவு. அப்படித் தேடி உண்மையை ஓரளவு அறிந்து கொண்டவர்கள் அதைவிடக் குறைவு. அப்படி உணர்ந்தவுடன் அதைப் பிறருக்குச் சொல்லும் மனநிலை 90% பேருக்கு வராது. மோன நிலை அவ்வளவு சுகமானது. அதில் ஏதோ ஓரிருவரே விவரித்துச் சொல்வர். அதுவும் இறையருளே! அதில் ஏதோ ஒருவரின் நடைமட்டுமே நமக்குச் சரியென்று படும். அதனால்தான் உங்களின் சாதாரணமான நியாயமான கேள்விகளுக்கு அனைவராலும் பதில் சொல்லமுடிவதில்லை. என்னுடைய தேடல்களின் முடிவுகளைப் பலருக்கும் பகிரவே இறையருளால் என் எழுத்து முயற்சி. பல அடிப்படை உண்மைகள் சொல் பொருள் அறிய வேண்டும். என் பகவத்கீதைத் தொடரின் மூலம் பல கேள்விகளுக்கு விடைகள் கிடைக்கும் நண்பர்களே!

நான் அமர்ந்த மலர்களும்!சேகரித்த தேனும்!-1

அறிவு->ஞானம்->அனுபவம்->ஆன்மநிலை என்பது ஒரு பயணம். அதில் அறிவு என்பது பல செய்தி மற்றும் கருத்துக்களை அறிதல் அதாவது knowing மட்டுமே. இதோ எடுத்துக் காட்டு:மனம் அமைதியானால் வாழ்க்கை இனிக்கும். இது அறிவு.அதை புத்தகங்கள் வாயிலாக அடையலாம்.ஆனால் மனம் அமைதியாக என்ன செய்வது என்று அறிய பல நூல்களைப் படித்தால் அடங்குவதற்குப் பதில் மனக் குழப்பம் அதிகரிக்கும்.
ஞானம் என்பது அறிவினை பயன்படுத்தி அனுபவம் அடைந்து ஆன்ம நிலை அடைந்தோர் வாய்ச் சொல்! இதோ எடுத்துக் காட்டுகள்: நல்லவனாய் இரு! நல்லதைச் செய்! – ஸ்வாமி சிவானந்தர் மனம் அமைதி அடைய எளிய வழி! 
அருணகிரி நாதருக்கு முருகன் சொன்னது ” சும்மா இரு சொல்லற!” பேசாமல் மௌனம் காப்பாய்! அனைத்தும் தானே விளங்கும்.
இரமண மகரிஷி “நான் யார் என கேள்!” 
ஞானிகளின் ஒரு சிறிய கூற்றே ஓராயிரம் நூலறிவிற்குச் சமம். அதை பின்பற்றினால் சுய அனுபவம் அதாவது இறைநிலை அல்லது அநுபூதி அடையலாம். பிறப்பிறப்பில்லா நிலையை அடையலாம்.இதைக் கடைப்பிடிப்பது நம் மன நிலையைப் பொருத்தது. 
சிறு வயதிலிருந்தே பலப்பல ஞானிகள் பெரியோர்களின் தொடர்பும் அவர்கள் பால் ஈர்ப்பும் ஏற்பட்டது. அது பெரிய பட்டியல்! இங்கே அந்தப் பட்டியலையும் அவர்கள் ஒவ்வொருவர் மூலமாக நான் கற்ற மறக்கமுடியாத பாடங்களையும் அறிவுரைகளையும் பகிர எண்ணம். சும்மா இரு என்ற அறிவுரையின்படி எதுவும் சொல்லவேண்டாம் எனத் தோன்றும். ஆனாலும் நாம் அறிந்ததை உணர்ந்ததை பகிர்வது நாம் மனித சமுதாயத்திற்கு செய்யவேண்டிய கடமை மற்றும் இறைவனின் கட்டளை என உணர்வதாலும் இதை எழுதுகிறேன்.(தொடரும்)