ஒரே செதுக்கு!

“கடவுள் உண்டா? இல்லையா?! ஒரே வார்த்தைல பதில் சொல்லுங்கள்!”

“ ஒரே செதுக்கில் சிற்பம் வடிக்க முடியுமா?!”

“முடியாது!”

“பல ஆயிரம் செதுக்கல் வழவழப்பாக்க உராய்தல் நீர் ஊற்றிக் கழுவுதல்… இப்படி பல செயல்களின் மூலமே சிற்பம் வடிக்க முடியும்! கல்லுக்குள் சிற்பம் இருந்தாலும் அதனை வெளிக் கொண்டு வர இவ்வளவு பாடுபடுகிறான் சிற்பி!

இதைப்போலவே நம் உள்ளத்திலேயே இறைவன் உறைந்தாலும் உலகெலாம் நிறைந்தாலும் அவனை வெளிப்படுத்த உடல் மனம் சித்தம் இவற்றை வழிபாடு அன்பு கருணை இரக்கம் உயிர்க் கொலை தவிர்த்தல் ஒருமனப்படல் என்ற மனக்குவியம் மனம் சிதறா நிலை அடைந்தால் தெள்ளத் தெளிவாக இறைவன் தென்படுவான்!

ஒரு கல்லைச் செதுக்கினால் சிற்பம் மறு கல்லில் உருவாகாது!

உன்னைத்தூய்மை செய்! உன்னுள் நீயாக இருக்கும் இறைவனைக் காண்பாய்!”

மௌனம்!

2,5,8,10

2 விநாடி மௌனம் காக்கப் பழகினேன்!
சினம் தவிர்த்தேன்!
5 விநாடி மௌனம் காக்கப் பழகினேன்!
மனிதனானேன்!
8 விநாடி மௌனம் காக்கப் பழகினேன்!
நல்ல மனிதனானேன்!
10 விநாடி மௌனம் காக்கப் பழகினேன்!
புனிதனானேன்!
தவறு என்ற எண்ணம்,
தவறாய் இருக்கலாம்,
எனக்கு முழு பின்னணியும் தெரியாதோ?,
நல்ல வேளை நான் வாயைத் திறக்கவில்லை!,
மற்ற கோணங்களை அறிந்தபின் இப்போது தான் உண்மை தெரிந்தது
என மனம் பயணிக்கும் காலம் 10 விநாடியே!