ஆதி சங்கரரின் குற(ர)ள்(ல்)! – 3

mooDa jaheehi dhanAgama thrushNAm kuru sadhbhudhdhim manasi vithrushnAm

yallaBHasE nijakarmOpAththam viththam thEna vinOdhaya chiththam   – 2

मूढ जहीहि धनागमतृष्णां कुरु सद्बुद्धिं मनसि वितृष्णाम् ।

यल्लभसे निजकर्मोपात्तं वित्तं तेन विनोदय चित्तम् ॥ २ ॥

பொருள்மேல் பேரவா புறத்தே ஒதுக்கி மதியைச் செலுத்தி மனப்பற் றற்று,

எதைவிதி வசத்தால் எய்திடு வாயோ அப்பொருள் கொண்டே அகமகிழ் வாயே. -2

ஆதி சங்கரரின் மூல ஸ்லோகத்தின் பொருள்:

மூடனே பொருள் சம்பாதிக்க வேண்டும் என்ற தீராத அடங்காத தாகத்தை விடு! எவ்வளவு பொருள் உன் கர்ம வினைப்படி வந்து உன்னை அடைகிறதோ அதைக் கொண்டு மகிழ்ச்சியாய் இரு!

நாம் அறிவது:

இந்த ஸ்லோகத்தைச் சொன்னவுடன் இடக்காகப் பேசும் நம் மனம் “எவ்வளவு என் கர்ம வினைப்படி என்னை அடையும் என்று எனக்கு எப்படித் தெரியும்?” என்ற கேள்வியை எழுப்பும். இந்தக் கோட்ப்பாட்டை நான் நடைமுறையில் பயன் படுத்திப் பார்த்தேன். எனக்குச் சேர வேண்டியது என்றும் எனக்குத் தகுதியானது என்று நான் நினைத்த ஊதிய உயர்வையும் ஊக்கத் தொகையையும் கேட்ப்பதுண்டு. பல சமயங்களில் நான் எவ்வளவு நல்ல வேலை செய்திருந்தாலும் நிறுவனத்திற்குப் பல கோடி ஈட்டிக் கொடுத்திருந்தாலும் ஒரு காசு கூட ஊதிய உயர்வோ ஊக்கத்தொகையோ கிடைக்காமல் போனதுண்டு! அதே சமயம் “என்னுடைய ஊதிய உயர்வு கோரிக்கைகள் நிராகரிக்கப் படும் .இருந்தாலும் கேட்ப்பதைக் கேட்ப்போம். “வந்தால் வரதராஜன்” என்ற எண்ணத்தில் கேட்ப்பதுண்டு! ஆனால் கேட்டது அனைத்தும் அப்படியே கிடைத்ததும் உண்டு! இந்த இரண்டு நிலைகளையும் யோசித்துப் பார்த்ததில் ஆதி சங்கரர் சொல்லிய கருத்து விளங்கியது. இரண்டு சம்பவங்களிலும் என் கோரிக்கைகள் நியாயமானதே! ஒரு சமயம் நிராகரிப்பு! ஒரு சமயம் ஒப்புதல்! நியாயமான கோரிக்கை இருவிதமான பலனைத் தந்ததேன்! மேலும் ஒரு முறை நிராகரிக்கப்பட்ட பின் மறுமுறை “என்னத்தக் கொடுக்கப்போறாங்க !” என்ற சலிப்பு வந்தது. ஆனால் ஆதிசங்கரரின் இந்த ஸ்லோகம் நினைவிற்கு வந்தது. “என் கடமையான கோரிக்கையை நான் செய்தே ஆகவேண்டும்!” என்று கேட்டேன். இரண்டாம் முறை நான் எதிர்பார்க்காமல் பலன் கிடைத்தது. எனக்கு மறுக்கப்பட்ட தொகை ஒப்புதல் கிடைத்த தொகையைவிட அதிகம்! இங்கேதான் திருப்த்தி என்பதை நாம் கையாள வேண்டும்! இரண்டு சம்பவங்களையும் சேர்த்துப் பார்த்து நம் எதிர்பார்ப்பைக் குறைக்க கட்டுப்படுத்த வேண்டும். ஆனால் நம் மனதிற்கு நியாயமாகப் படுவதை மட்டுமே கேட்க்க வேண்டும்! இவ்வாறு செய்தால் நம் கர்ம வினைப்படி என்ன கிடைக்கும் என்பதை அனுபவ வாயிலாக அறியலாம்! (தொடரும்)

ஆதி சங்கரரின் குற(ர)ள்(ல்)! – 1

அன்பு நண்பர்களே!

அறிவுத்தாகமும் ஆன்மத் தாகமும் நம்மைப் புத்தகக் கடலில் மூழ்கடித்து விடுவதுண்டு! அதனால் மற்றவர்கள் படித்து உணர்ந்து எளிய நடையில் சொன்னால் நம் முன்னேற்றமும் அதைச் செயல் படுத்தத் தெளிவும் விரைவில் பிறக்கும். எடுத்துக் காட்டாக திருவள்ளுவரின் குறளைச் சொல்லலாம்.

நம் அனைவரின் வாழ்விலும் நிகழும் அறம் ,பொருள் மற்றும் இன்பம் பற்றி கட்டுரையாக எழுதாமல் குறள் வெண்பாவாகச் சொன்னது “நெத்தியடி” போல் நம் மனதில் பதிகிறது! துவண்டு போகும் மனத்திற்கு “முயற்சி மெய்வருத்தக் கூலி தரும், தெய்வத்தால் ஆகாதெனினும்!” என்பதைக் கட்டுரையாகச் சொல்லி இருந்தால் எத்தனை பேரை ஈர்த்திருக்கும்?!  இன்று பேருந்துகளில் கூட இதை எழுதி வைக்கிறோம்!

பலப்பல பக்தி வேதாந்த நூல்களை மடை திறந்தவெள்ளம் போல் பொழிந்த ஆதி சங்கரர் வள்ளுவரைப்  போலவே இருவரிக் குறள் போல வாழும் முறையையும்  வாழ்வின் நிலையாமையையும் அழகாக “மோஹ முத்கரம் , mOha mudhGaram ” என்ற 31 இருவரி ஸ்லோகங்களைப் படைத்தார். இது “பஜ கோவிந்தம் பஜகோவிந்தம் ” என்ற வார்த்தைகளைக் கொண்டு  ஆரம்பம் ஆவதால் “பஜ கோவிந்தம்” என்ற பெயரிலேயே பலரும் அறிவார்கள். மோஹ முத்கரம் என்றால் ஆசை எனும் பாறாங்கல்லை உடைக்கும் சம்மட்டி அல்லது உழி அல்லது உடைக்கும் கருவி என்று பொருள். இதை நான் ஏன் குறள் என்று கூறினேன் என்றால் “மழித்தலும் நீட்டலும்” குறள் போல ஒரு ஸ்லோகம் இதில் அமைந்திருப்பதும் மற்றும் இரண்டடி கொண்டதுமே காரணம்.

இந்த ஸ்லோகங்களைப் பற்றிப் பல சரித்திரத் தகவல்கள் உண்டு. ஆனால் நான் அதைப் பற்றிப் பேசப் போவதில்லை. நம் நோக்கம் “இல்லற வழி ஆன்ம நிலை அடைதல்” மட்டுமே! எந்த நூற்றாண்டில் வாழ்ந்தார்? எத்தனை ஸ்லோகங்கள் அவர் செய்தார்? அவரது சீடர்கள் எத்தனை ஸ்லோகங்கள் செய்தார்கள்? என்ற கேள்விகளைத் தவிர்த்து நமக்குத் தேவையான வாழும் முறைகளை மட்டும் பகிர உள்ளேன்! இதைப் போல தமிழில் பஜ கோவிந்தம் யாராவது ஆக்கம் செய்யமாட்டார்களா என்ற எண்ணம் தோன்றுகிறதல்லவா? அதை என் தாய்வழிப் பாட்டனார் நிறைவேற்றி இருக்கிறார். அதையும் இனைத்துப் பகிர உள்ளேன்.

இங்கே என் தாய்வழிப் பாட்டனாரைப் பற்றி குறிப்பிடவேண்டியது மிக அவசியம். அவர் ஒரு இல்லறத் துறவி. பல மொழிப் புலவர். யோகி. முருக பக்தர். ஆங்கிலம்,இந்தி,ஸமஸ்க்ருதம்,தெலுங்கு,தமிழ் ஆகிய மொழிகளில் கவி பாடும் புலமை பெற்றவர். அவர் “துதி குமரேசனைத் துதி குமரேசனை” என அதே மெட்டில் அழகான தமிழில் செய்திருக்கிறார். (தொடரும்)