மதமும் குழந்தைகளும்

  நாம் பின்பற்றும் மதத்தை நம் குழந்தைகளும் பின் பற்றுகின்றனவே! அது சரியா? தவறா?

நானே இறைவனைக் கண்டதில்லை அப்படி இருக்க அவர்களைப் பின்பற்றச் செய்கிறோமே என்ற கேள்வி எழலாம். சில குழந்தைகள் கடனே என்று பின்பற்றலாம். பின் பற்றாமலும் போகலாம். 
நான் எனக்குச் சொல்லுவது “
1.என் குடும்பத்தில் பிறந்தது அவர்களின் மற்றும் இறைவனின் தேர்வு!
2.எத்தனையோ பிறவி எடுத்த நாம் எந்த எந்த மதங்களையெல்லாம் பின்பற்றினோமோ?
3.எல்லா மதங்களும் சொல்வது மனித நேயம்,தவறான செயல் தவிர்த்தல்,வாழ்வின் நிலையாமை போன்ற பொதுக் கருத்துக்களே”.

என் மகள் ” கடவுள் உண்டா? நீங்கள் கண் மூடி மூச்சடக்கி என்ன செய்கிறீர்கள்?” என்று கேட்டாள்.

நான்” 
1.நம்மை மீறிய சக்தி ஒன்று இருப்பதை நாம் எளிதாக அறியலாம். அதற்கு நாம் நம் வாழ்வின் நிகழ்வுகளை உற்று நோக்கினால் போதும்.
2.மனமடங்கினால் அச்சக்தியை உணரலாம் என்று எல்லா மதங்களும் நேராகவோ மறைமுகமாகவோ சொல்கின்றன.
3. மனமடங்க பயிற்சி தேவை. அதற்கு 
நான்கு வழிகள் உண்டு.

மக்கள் சேவை – கர்ம யோகம். அதாவது எந்த காரியம் நமக்குக் கொடுக்கப் படுகிறதோ அதைச் செவ்வனே செய்தல். அதனால் எல்லா உயிரிடமும் அன்பு ஏற்படும்.

இறைவனைத் தொழுதல் – பக்தி யோகம் 
இறை நூல்கள் வழி நடப்பது. இறைவனின் நற்குணங்களைப் பாடி அவ்வாறே வாழ்தல்
சிந்தித்தல் – ஞான யோகம் 
வாழ்வின்நிகழ்வுகள்,நிலையாமை,மனம்,உடல்,மரணம்,பிறப்பு,தூக்க நிலை …. பற்றி யோசித்துத் தெளிதல்

பயிற்சி – ராச யோகம் 
உடல் பயிற்சி – ஆசனம்,மூச்சைக் கட்டுப் படுத்துவது,உடலைப் பேணுவது,தியானம் .

ஒவ்வொருவரின் மனநிலைக்குத் தகுந்தவாறே நம் மனம் இந்த நான்கில் ஒன்றில் ஈடுபடும். இவற்றில் உயர்வு தாழ்வில்லை! எந்த மதம் என்பதும் பொருட்டில்லை!

இந்த நாலும் நமக்குப் பிடிப்பதும் உண்டு. எது உன் மனத்தைக் கவர்கிறதோ அதைப் பின்பற்று! மற்றவர்கள் வழி தவறு என்று எண்ணுவது உன் அறியாமை. அதில் நேரத்தைத் தவறவிடாதே! 
நான் இறக்கும் முன் அந்நிலை அடைந்தால் நிச்சயம் உனக்கும் சொல்வேன்! இல்லை என்றால் என் பயணம் வரும் பிறப்பில் தொடரும். 
இவையெல்லாம் இவ்வயதில் குழப்பம் தரும். நீ வாழ வாழ தெளிவு பிறக்கும்!

சுருங்கச் சொன்னால் Be good! Do good! நல்லவளாய் இரு! நல்லதைச் செய்! ” 
என்றேன்.
“ஒரு குழந்தைக்கு இப்படி விளக்கமா !?” என்று மனைவியார் கேட்டார்கள். 
” இதைப் போல் எனக்கு சிறுவயதில் விளக்கியிருந்தால் மேலும் நன்றாக அமைதியாக வாழ்ந்திருப்பேன் என்ற எண்ணம் மேலிடுவதால்த் தான்!” என்றேன்!

Leave a comment