கோப்பை,அண்டா,ஏரி என் குருக்கள்!

2,5,8,10 என்ற என் பதிவின் விளக்கம் கேட்டிருந்தார் நண்பர் K Akbar.
இதற்கு இரண்டு விளக்கங்கள் உண்டு.

முதல் விளக்கம் இதோ!

ஒரு சிறிய கோப்பையில் உள்ள நீரில் ஒரு  கல்லை ஒரு 5 அங்குல உயரத்திலிருந்து  போட்டால் அலைகள் உருவாகி கோப்பையின் சுவற்றில் மோதி எதிரலையாக திரும்பி அலையோடு பலமுறை மோதி கொந்தளிப்பு ஏற்படும்.

ஒரு பெரிய கொப்பரையில் அதே கல்லை அதே உயரத்தில் இருந்து  போட்டால் அலைகள் வரும் எதிரலைகள் தாமதமாக வரும். நீர் கொந்தளிக்காது .

அதே கல்லை அதே உயரத்தில் இருந்து ஏரியில் போட்டால் அலை எழும்பும். வீரியம் குறைந்து இருக்கும். அலைகள் கரையை அடைந்து  எதிரலை ஏற்பட வாய்ப்பில்லை.

அறிவியல் கூற்றுப்படி ஒரு கல் தன் கன அளவு அதாவது volume க்கு ஈடான நீரையே இடம் பெயரச் செய்யும்.

ஒரே பருமனும் எடையும் உள்ள ஒரு கல் ஒரு கோப்பை,அண்டா,ஏரியில் உள்ள நீரில் ஒரே உயரத்தில் இருந்து விழுந்தால் எழும் அலை,எதிரலை எதனால் மாறுபடுகிறது?

அது விழும் நீரின் அளவைப் பொறுத்ததே!

அதாவது  நம்மைப் போன்ற பாமரன்,ஓரளவு பக்குவப் பட்டவன் மற்றும் ஞானி இவர்களின் மனம் முறையே ஒரு கோப்பை,அண்டா மற்றும் ஏரிக்கு ஒப்பிடலாம்.

“அடே! முட்டாள்! அடியே! முட்டாள்! ” என்று நம்மை யாராவது சொன்னால் நம் கண்கள் சிவக்க சொன்னவரின் பரம்பரையையும் சேர்த்திழுத்து செந்தமிழில் “கரும்” ஆங்கிலத்தில் “பச்சை பச்சையாக” வசைபாடிவிடுவோம்! இது 2-5 நொடிகளில் நடந்து முடிந்துவிடும்!

ஓரளவு பரந்த மனம் உள்ளவர் சில விநாடிகள் கழித்து  தான் வருந்துவதை முகத்தளவில் எதிர் வினையாகக் காட்டுவார். அண்டாவில் சிறிய எதிரலை போல! இது ஒரு 5-8 நொடிகளில் நிகழும்.

நன்கு பழுத்த ஞானி இவை அனைத்தும் வெறும் சொற்களே. நம்மை பாதிக்காது. நாம் உடலல்ல. ஏதோ கர்மவினை காரணமாக நமக்கு இது நிகழ்கிறது என மௌனம் காப்பார். எந்த எதிர்வினையும் இருக்காது ,ஏரி நீர் போல.
மாறாக மேலும் புன்முறுவல் பூத்து வைதவரை வாழ்த்தி நன்றியும் தெரிவிப்பார்கள்! இது 10 விநாடிகள் தாண்டி நடக்கும் எதிர்வினை!

இந்த கால அளவு ஒருவருக்கொருவர் மாறுபடும் அவரவர் மனதின் பரப்பளவைப் பொருத்து!

கீழே 2,5,8,10 என்ற என் பதிவு !

2,5,8,10
=======
2 விநாடி மௌனம் காக்கப் பழகினேன்!
சினம் தவிர்த்தேன்!
5 விநாடி மௌனம் காக்கப் பழகினேன்!
மனிதனானேன்!
8 விநாடி மௌனம் காக்கப் பழகினேன்!
நல்ல மனிதனானேன்!
10 விநாடி மௌனம் காக்கப் பழகினேன்!
புனிதனானேன்!
தவறு என்ற எண்ணம்,
தவறாய் இருக்கலாம்,
எனக்கு முழு பின்னணியும் தெரியாதோ?,
நல்ல வேளை நான் வாயைத் திறக்கவில்லை!,
மற்ற கோணங்களை அறிந்தபின் இப்போது தான் உண்மை தெரிந்தது
என மனம் பயணிக்கும் காலம் 10 விநாடியே!

Leave a comment