கர்ம வினைகளும்,தாக்கமும், அதனின்று விடுபடலும்!

Swarnakanthi Kumarasamy அம்மா ஒரு வினாவை வைத்தார்.
கல்வி இருந்தால் செல்வம் சேர்வதில்லையே ஏன்? இதுதான் நியதியா?

இல்லையம்மா!

நம் கர்மவினைகள் மூன்று வகைப்படும்.

பலகோடி பிறவிகளில் நாம் விரும்பியவை ஆசைப்பட்டவை ஒரு கிடங்கில் ஒரு குவியலாகக் கிடக்கும்.

நாம் செய்த வினைகள் ஒரு குவியலாகக் கிடக்கும்.
இந்த கிடங்கில் சேர்ந்த குவியல்களின் பெயர் சஞ்சித கர்மா.

அதாவது சேமித்த வினை.

இந்த பிறவி எடுக்கும் போது கிடங்கில் இருந்து சில ஆசைகளையும்(பெரிய இசைக் கலைஞனாக ஆகவேண்டும் என்ற ஆசை) கொஞ்சமும் செய்த வினையில்( நீரிழிவு நோய்,கண் குறைபாடு,இதய நோய் இப்படி) கொஞ்சமும் அந்த ஆசைகளும் வினைகளும் நிறை வேறத் தகுந்த உடலும் அதற்குத் தகுந்த ஆயுளுமே நமக்குக் கிட்டும் .

இப்படி இந்த பிறவியில் நாம் கொண்டுவரும் வினைகள் ப்ராரப்த கர்மா என்ற செயல்படு வினைகள் ஆகும்.

அதனால் இன்ப துன்பங்கள் அலைபோல வந்து போகும்.

இதை மாற்ற இயலாது.

ஆனால் அதன் தாக்கத்தைக் குறைத்துக் கொள்ளலாம்.

இதை பலமுறை ஆன்மீகத் தொடரில் எழுதி இருக்கிறேன்.

இந்த ப்ராரப்த கர்மா ,அதாவது கொண்டுவந்த வினையை நாம் அனுபவிக்கும் போது வெகுண்டு விசனப்பட்டு மற்றவரை தாக்குவது பேசுவது கெடுப்பது என்பது புதுவித வினைகளுக்கு வித்திடும்.

அதாவது சிறைக் கைதி சிறைக்குள் இருப்பவர்கள் அதிகாரிகளைத் தாக்கி மேலும் நீண்ட தண்டனையைப் பெறுவது போல! இது நம் கையில் தான் இருக்கிறது. இதைத்தான் ஊழையும் உப்பக்கம் காண்பது என்கிறார் வள்ளுவர்.

அந்த வினைகளின் பெயர் ஆகம்ய கர்மா.

அதாவது இப்போது புதிதாகச் சேர்த்த சஞ்சித கர்மா கிடங்கில் சேரப் போகும் வினை என்று பொருள்.

இந்த தெளிவு உள்ளவர்கள் யாரிடமும் பகைமை பாராட்டமாட்டார்கள்.

எய்தவன்( நாம் செய்த வினைகளே வில்) இருக்க அம்பை(நம்மீது கடுமையாக நடப்போர் உற்றார் உறவினர் நட்பு வெறும் அம்புகளே!) நோவதில்லை.

இது எளியது. ஆனால் இதை ஆழமாக சிந்தித்து நம் இன்றைய வாழ்வை சீராக்கினால் இந்த வாழ்வும் இனிதே கடக்கும்.

கிடங்கில் சேர்த்த கர்மவினைகளும் பஞ்சுப் பொதியாய் எரிந்து போகும்.

அதற்கு எளிய வழிமுறை உண்டு.

அதற்குப் பின் பிறப்பு இறப்பு இல்லை.

இது அனைவருக்கும் சாத்தியமே!

மத சாதி மொழி வயது திணை பால் நாடு வேறுபாடு இல்லை!

எல்லா தீபங்களிலும் சுடர்விடும் நெருப்பு ஒன்றே!

அதைப்போல எல்லா ஆன்மாவும் ஒன்றே!

புற வேற்றுமைகளில் உழல்பவன் மூடன்!

அதை அறிந்து தவிர்ப்பவன் ஞானி!

இவ்வளவு தான் வேற்றுமை அம்மா!🙏🙏🙏
#வினைகளின்தாக்கமும்விடுபடலும்

Leave a comment