ஆன்மீகம்-33

23 June 2018
வானவில்
========
நம் பாவங்கள் அதாவது கர்மவினைகள் நம்மை தாக்கும்போது மகான்கள் சித்தர்கள் ஞானிகள் எப்படி நம்மைக் காக்கிறார்கள்?
ஒரு சிலவற்றை இங்கே பார்ப்போம்.

ஒன்று நம் கர்மவினையை அவர்கள் ஏற்றுக் கொண்டு அனுபவிப்பது!

இரண்டாம் முறை அந்தப் பாவத்திற்கு பரிகாரம் போல ஒரு செயலைச் செய்யச் சொல்வது அல்லது தாங்களே செய்வது!

மூன்றாம் முறை பாவ புண்ணியங்களின் வரிசையை மாற்றி அமைப்பது!

நான்காவது முறை மேலும் ஆச்சரியமானது. மகான்கள் தங்கள் பழைய பிறவி வினைகளை உயிரற்ற ஜடப்பொருளின் மீது தற்காலிகமாக இறக்கி வைப்பது!

நம் கர்ம வினையை அவர்கள் அனுபவிப்பது! இது மிகக் கொடுமையானது!

1.காஞ்சிப் பெரியவர் ஒரு பக்தரின் தீராத வயிற்று வலியைத் தான் வாங்கிக் கொண்டு துடியாய்த் துடித்தார்! இதைத் தாங்க முடியாத அவரது பணிவிடைத் தொண்டர் ரகசியமாக பெரியவரிடம் சொல்லாமல் வைத்தீஸ்வரன் கோவிலுக்குப் போய் வயிறு உருவாரம் வாங்கிச் சாற்றச் சென்றார். அந்த வயிறு உருவாரம் மிக அரியது. அதையும் பெரியவரே தன் கருணையால் தொண்டருக்கு கிடைக்கச் செய்தார். தொண்டர் திரும்பி வந்ததும் “வயிறு உருவாரம் சாற்றினாயோ? ” என்றார் புன்னகையுடன்.
2. ராமக்ருஷ்ண பரம ஹம்ஸர் பக்தர்களின் கர்மவினைகளை தான் ஏற்றுக் கொண்டு விடுவார். ஒருமுறை இதைத் தவிர்க்க அவரது தொண்டர்கள் முயன்றனர். பல காலமாக விபசாரத்தில் ஈடுபட்டு பல நோய்களுக்கு ஆளான ஒரு பெண் தொண்டை புற்றுநோயால் அவதிப்பட்டாள். தொண்டர்கள் அவள் பரமஹம்ஸரைத் தொடாமல் தடுத்தனர். அவள் ஓடிச் சென்று அவரது காலைக் கட்டிக் கொண்டு தன் பாவங்களை மன்னிக்க வேண்ட பரமஹம்ஸரும் ஏற்றுக் கொண்டுவிட்டார். இறுதிக் காலத்தில் அதே தொண்டை புற்று நோயால் இரத்தம் கக்கி வாய் பேசமுடியாமல் இறுதி நாள்வரை அந்த பாவங்களைத் தாங்கினார்! இறுதி நாட்களில் அவர் தன்னால் பேசமுடியவில்லை என்று கரகரத்த குரலில் சொல்லிக் கொண்டிருந்தார். அவரை நன்றாக அறிந்த சீடர் ஒருவர் ” ஸ்வாமி இதெல்லாம் நடிப்புதானே! உங்கள் முகத்தில் ஆனந்தம் தான் எனக்குத் தெரிகிறது!” என்றார். பரமஹம்சர் குபீரென்று சிரித்துவிட்டு ” என் குட்டு வெளிப்பட்டுவிட்டது! கண்டுபிடித்துவிட்டாயே!” என்றார். மகான்கள் உடலை சட்டையாக அணிந்தவர்கள். அவர்களை உடல் உபாதைகள் பாதிக்காது.
3. ரமண மகரிஷியிடம் ஒரு பக்தர் தான் அதிக பாவங்கள் செய்ததாக புலம்பிக் கொண்டே இருந்தார். பல நாள் பொறுத்த இரமணர் ” உன் புண்ணியங்களை எல்லாம் எனக்குக் கொடுத்துவிடு !” என்றார்.
பக்தர் ” நான் பாவி . என் புண்ணியங்கள் என்று பெரிதாக ஒன்றுமில்லை!” என்றார்.
” இருப்பதைக் கொடு!” என்றார். அவரும் தந்தேன் என தந்துவிட்டார். ” இப்போது உன் பாவங்களை எல்லாம் கொடு !” என்றார். பக்தர் பதறிவிட்டார். ” இவை மிகப் பெரிய பாவங்கள். இதை தரமாட்டேன்!” என்றார். இரமணர் பலவாறு வாதாடி அத்தனை பாவங்களையும் பெற்றுக் கொண்டார். அதற்குப் பின் அந்த பக்தர் திரும்ப வரவேயில்லை!

இரண்டாம் முறை பரிகாரம் செய்வது!
1.திருவண்ணாமலையில் சேஷாத்ரி ஸ்வாமிகள் என்ற பெரிய சித்தர் இருந்தார். ரமணரைக் காப்பாற்றி நமக்குக் கொடுத்தவர். அபிராமிபட்டரின் மறு அவதாரமாகக் கருதப்பட்டவர்!
ஒரு முறை ஒருவரை தெருவிலே போகும்போது அந்த நபரின் செருப்பைக் கழற்றி சிலமுறை அடித்துவிட்டார். அன்று ஒரு பெரிய வழக்கில் அந்த நபருக்கு சாதகமாக தீர்ப்பானது! அவர் பட வேண்டிய கர்மவினையால் வரவேண்டிய அவமானத்தை இப்படி நீக்கினார்!
2. வாயால் உணவு உண்ணமுடியாமல் வயிற்றில் வைக்கப்பட்ட குழாய் மூலமாக மட்டும் உணவு உண்ண முடிந்த கல்கத்தாவைச் செல்வந்தர் காஞ்சிப் பெரியவரிடம் வேண்டி நிற்க, பதினெட்டு புராணங்களை நாடெங்கும் அலைந்து தொகுத்து திரட்டி அச்சிட்டு வெளியிடச் சொல்லி கர்மவினை முடித்து முன்பு போல் வாயால் உணவு உண்ண அருள் செய்தார் காஞ்சி மஹாப் பெரியவர்!

குருவருளால் இயலாதது ஒன்றும் இல்லை! அதனால் கர்மவினை நீங்க குருவைச் சரணடைதல் இந்து மதத்தில் மிகச் சிறப்பாக சொல்லப்படுகிறது!

இதே போலத்தான் நம் பாவங்களையெல்லாம் இயேசு ஏற்க சிலுவையில் அறையுண்டார் என கூறப்படுகிறது!

இன்று போலிச்சாமியார்கள் பாதிரிகள் மௌல்விகள் மலிந்து மதங்களை மனங்களை நாசம் செய்கிறார்கள்!

அடுத்த பதிவில் பாவபுண்ணியங்களை வரிசை மாற்றம் செய்தல்,பாவத்தின் பலனை ஜடப் பொருள்களின் மேல் ஏற்றுதல் போன்றவற்றைப் பார்ப்போம்!

பாவபுண்ணியங்கள் பெரிய பொருட்டல்ல! ஆனால் பலரும் பயப்படும் பயம் நீங்கவே இவ்வளவு ஆழமாக பல பதிவுகளில் சொல்லிச் செல்கிறேன்!
உண்மையான ஆன்மீகம் இன்னும் எழுதத் தொடங்கவே இல்லை! பாவ புண்ணிய சிந்தனைகள் மிக மிக மிக தாழ்வான சிந்தனைகள்! ஆனால் இவற்றை விளக்கவில்லையென்றால் நம் மனம் ஆன்மீகத்தில் நாட்டம் கொள்ளாது! அதனால் அந்தக் கேள்விகளுக்கு விடை தந்து மனதை அமைதிப்படுத்தியே உண்மை ஆன்மீகம் பேசவேண்டும்! இல்லையென்றால் நம் சிற்றறிவு பாவ புண்ணியங்களையே “கட்டி” அழும்!
எவ்வளவு கோடிக்கணக்கான பாவம் செய்தாலும் முயற்சியால் பிறப்பிறப்பற்ற நிலை அடைய முடியும்! இதில் யாரும் ஸ்பெஷல் இல்லை!😀😁🤣
( தொடரும்)

விட்டுச் செல்!

கண்ணாடி = காந்தி
சிலுவை = இயேசு
புல்லாங்குழல் = கண்ணன்
வில் = ராமன்
வீணை = ராவணன்
காதற்ற ஊசி = பட்டினத்தார்
சும்மா இரு = அருணகிரியார்
நான் யார் = ரமண மகரிஷி
நிர்வாணம் ,ஒளிவட்டம் = புத்தர்
பரமஹம்சர் = ராமக்ருஷ்ணர்
…………….
ஒற்றைப் பொருள்! ஒற்றைச் சொல்!
இவையனைத்தும் இவர்களுக்கு முன்பும் வழக்கத்தில் இருந்தவை!
இவற்றிற்கு ஒரு தனித்துவத்தை ஏற்படுத்தி உலகை விட்டுச் செல்லும் முன் இவர்கள் விட்டுச் சென்றார்கள்!

நாம் எதைவிட்டுச் செல்லப் போகிறோம்?!