கோ கோ ஆட்டம்!

வாழ்கிறோமா அல்லது உயிரை கையில் பிடித்துக் கொண்டு ஒவ்வொரு நாளையும் கழிக்கிறோமா என்ற ஐயம் தோன்றுகிறது..

இதன் மூல காரணம் பணம். பணத் தேவை அதிகரிப்பு.

வாழ்க்கை கோ கோ ஆட்டம் போல ஆகிவிட்டது. நம் பணப்பையில் அடுத்தவன் கைவைத்து காலி செய்ய நாம் அடுத்தவன் பணப்பையில் கைவிடுகிறோம்.

பாதிக்கப் பட்டவன் மற்றவன் பணப்பையில் கை வைக்க ஓடுகிறான். அதாவது பரவாயில்லை. நாம் மூச்சிறைக்க வந்து உட்கார்ந்த உடனே கோ கோ என்று நம்மை மறுபடி தொட்டு விடுகிறான்.

ஓடி ஓடி களைத்து வாழ்ந்தோமா தினமும் செத்துச் செத்து வாழ்ந்தோமா என்ற நிராசையுடன் இருக்கும்போதே காலன் வந்து கதவைத் தட்டிவிடுகிறான்! வாழ்க்கையாடா இது?! என்று தோன்றுகிறது. இந்த கோ கோ விளையாட்டு வெள்ளைக்காரன் கற்றுக் கொடுத்தது .

அறம் என்ற சொல்லே அவன் பரம்பரையில் கிடையாது. அறமில்லா நடமாடும் பிணங்களாய் பணத்தைத் தேடி தேடி ஓட வைக்கும் இந்த கோ கோ ஆட்டம் ! மிடீல!

இதற்கு மருந்தாக வள்ளுவர் அறன் வலியுறுத்தல் என்று பத்து குறள்கள் சொன்னார்.

அறத்தான் வருவதே இன்பம் மற்றெல்லாம்
புறத்த புகழும் இல

இன்பத்தை அனுபவி. ஆனால் அறத்தால் பொருளீட்டு. அறமற்ற இன்பம் இன்பம் போல தோன்றி தீவினையைச் சேர்த்துவிடும்.

வடிவேலு தங்கச் சங்கிலியை ஆட்டயப் போட்டு ஒரு சேட் கடையில் தான் பெரிய ரவுடி என பில்டப் கொடுத்து பல ஆயிரம் சுருட்ட முயற்சிக்கும் போது சேட் சாமர்த்தியமாக மனைவியோடு பேசுவது போல பேசி காவல்துறையிடம் மாட்டி விடுவது போல அறமற்ற வழியில் பணம் தேடி வாழ்ந்தால் ஒரு நாள் வாழ்க்கை பணம் கொட்டப் போகின்றது என்று நினைத்து மகிழும்போது அறக் கடவுளிடம் மாட்டி விட்டுவிடும்.
நாம் பரிகாரம் செய்ய திருநள்ளாறு போகலாமா காளகஸ்தி போகலாமா என்று யோசிப்போம்!

ஆடும்வரை ஆட்டம்! ஆயிரத்தில் நாட்டம்! – கண்ணதாசன்

இந்த பண நாயகம் ஒழியாதவரை கோ கோ !

அப்பாடா! நான் உட்கார்ந்துட்டேன்! யாராவது கோ கோன்னு எழுப்பி விட்டுராதீங்கய்யா!

#கோகோஆட்டம்