சிற்றறிவு

நம் ஒவ்வாருவரின் சிந்தனையும் பனித்துளியில் பிரகாசிக்கும் சூரியன் போல . முழு உண்மையையும் அதாவது Omniscience ,சர்வ ஞானம் , ஒரு துளி மனத்தால் புரிந்து கொள்ள முடியாது. அதனால் நம் கருத்துக்கள் மிகப் பெரிய உண்மையான universal intelligenceன் ஒரு துளியே. இதில் சரி தவறு என்று எதுவுமே கிடையாது. மனம் என்ற ஒன்றிருக்கும் வரை பலப்பல எண்ணங்கள் வெளிப்பட்டுக் கொண்டு இருக்கும்.
நம் மனம் என்னும் பனித்துளியின் பரப்பளவே நம் அறிவை நிச்சயிக்கிறது. நமக்குப் பிடித்ததை நாம் அறிந்ததை சரி என்று சொல்லும் நம் மனம். நமக்குப் பிடிக்காததை தெரியாததை தவறென்று சொல்லும் நம் மனம். அவ்வளவுதான். இறுதியில் இன்பமாய் இருப்பதே வாழ்வின் நோக்கம். அது எப்படி வந்தால் என்ன?

நம் மனம் என்னும் பனித் துளியின் பரப்பளவு விரிவடைய விரிவடைய ஒரு கட்டத்தில் பனித்துளியே வெடித்துச் சிதறி மனமற்ற நிலை ஏற்படும்.
பனித்துளியை அதன் உருவத்தில் பிடித்து ஈர்த்து வைக்கும் பரப்பு இழுவிசை(surface tension) நான் என்ற உணர்வே!
மனமற்ற மோனநிலை இருவகையாகப் பெறலாம்!
ஒன்று நம் அறிவை விரிவு படுத்திக் கொண்டே போய் நமக்குத் தெரிந்தது ஒன்றுமில்லை என்ற நிலை அடைந்து நமது நான் என்ற ஆணவம் அற்றுப் போதல்!
இரண்டாவது நாமே நம் முன் நடந்த சான்றோரின் வழி வெளிவந்த உண்மைகளைக் கேட்டறிந்து நம் ஆணவத்தை தன்னடக்கமாக மாற்றுதல்!

எவ்வகையோ மனமடங்கக் கல்லார்க்கு மனமும் உண்டு! மறு பிறவியும் உண்டு!

முடிவிலா சிந்தனைகள்

சிந்தனை குறைய வேண்டும் என்கிறார்கள். பால் பொங்கி தணிவது போல. யோக சித்த வ்ருத்தி நிரோதஹ- மனம் அடங்குவதே யோகம் என்கிறது பதஞ்சலி யோக சூத்திரம். மனமடங்கக் கல்லார்க்கு வாயேன் – திருமூலர்.
மனம் கேள்வி கேட்டு கேட்டு அதற்கு முடிவில்லை என உணர்ந்து குருவை சரணடைந்து இறைநிலை அடைவது யதார்த்தம்! A simple natural process! கேள்வி கேட்க்கும் மனம் தன்னை பகுத்தறிவாளி என முட்டாள்த்தனமாக எண்ணி சிலகாலம் சந்தோஷப்படுவதும் இயற்கையே!

2,5,8,10

2 விநாடி மௌனம் காக்கப் பழகினேன்!
சினம் தவிர்த்தேன்!
5 விநாடி மௌனம் காக்கப் பழகினேன்!
மனிதனானேன்!
8 விநாடி மௌனம் காக்கப் பழகினேன்!
நல்ல மனிதனானேன்!
10 விநாடி மௌனம் காக்கப் பழகினேன்!
புனிதனானேன்!
தவறு என்ற எண்ணம்,
தவறாய் இருக்கலாம்,
எனக்கு முழு பின்னணியும் தெரியாதோ?,
நல்ல வேளை நான் வாயைத் திறக்கவில்லை!,
மற்ற கோணங்களை அறிந்தபின் இப்போது தான் உண்மை தெரிந்தது
என மனம் பயணிக்கும் காலம் 10 விநாடியே!