ஒன்றே குலம் ஒருவனே தேவன் !

ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்பது இறுதி நிலை! நம் போன்றோருக்கு பல குலங்கள் பல தெய்வங்களே சரியான பாதை! ஒன்றாம் வகுப்பில் அ ஆ இ ஈ என்றே படித்தாக வேண்டும்! அருணகிரிநாதர் பாடல் பொருள் விளக்கம் அசை சீர் பிரித்துச் சொன்னால் ஒன்றாம் வகுப்பில் விளங்காது! படிப்படியாக ஞானம் அதுவல்ல இதுவல்ல என்று அனுபவத்தால் உணர்ந்து இறைவன் நாமே என்பது இறுதிநிலை! த்வைதம் விசிஷ்டாத்வைதம் அத்வைதம்! எடுத்தவுடன் அத்வைதம் பேசினால் கைதட்டல் பட்டங்கள் கிடைக்கும்! அத்வைதநிலை கிடைக்காது! இந்துமதம் சீரழிவதன் காரணம் நாம் சித்தர்கள் போல பிதற்றித் திரிவதுதான்!

மலைமேல் நிற்போருக்கு பேருந்து ஒரு எறும்பு போல!

அடிவாரத்தில் இருக்கும்போது பேருந்து உயிர் பறிக்கும் எமன்! எறும்பு என்று எதிர்க்க முடியாது!

“இந்து”மகா சமுத்திரம்!

இந்து மதம் மிகப் பெரிய கடல்! அதில் எந்தத் துறைமுகத்திலிருந்து பயணத்தைத் தொடங்குவது என்ற தயக்கம் ஏற்படுகிறது!

வேத உபநிடதங்களின் சாரத்தை அறிவதா?

நடைமுறை ஆன்மீகம் தொடங்கி நம் மதத்தின் பயனை உடனே அடைவதா?

270 ஆண்டுகளாக உடைத்துச் சிதைக்கப்பட்ட வழிமுறைகளை சீரமைத்து வர்ணாஸ்ரமம் என்ற மாபெரும் கப்பலில் பயணிப்பதா?

இன்றும் இதை அழிக்கத் துடிக்கும் புயல் போன்ற சக்திகளோடு போராடுவதா? வாதிடுவதா?

இதற்கு காஞ்சிப் பெரியவர் அருள்வாக்கின் அடிப்படையில் தோன்றிய கருத்து:

” நம் தர்மத்தை உணர்ந்து அதைவிடாமல் நாம் கடைப்பிடிப்பதே நம் மதம் அழியாது காப்பாற்றும் வழி!”

அதனால் வாதங்களைத் தவிர்த்து ஆனால் நம் மதத்திற்கு ஏற்படும் தீமைகளைக் கவனமாக மனதில் வாங்கி நம் மத நெறிகளைக் கடைப்பிடித்து நம் குழந்தைகளுக்கு நம் வாழ்வே பாடமாக வாழ்ந்து பயணிப்பதே இன்றைய தேவை!

ஒன்று ஆங்கிலேயன் விதைத்த பிரிவினை வேரறுப்போம்!

இரண்டு நம் நடைமுறை வாழ்வில் ஆன்மீகத்திற்கு உரிய பங்களிப்போம்!

ஆன்மீகம்-55

ஆன்மீகம் இரண்டாம் பகுதி

=======================

வானவில்

=========

ஆன்மீகம்-55

===========

26 November 2018

வீடு-1

=====

அறத்தைப் பற்றி பொருளைப் பற்றி இன்பம் துய்த்து இவையனைத்தையும் விடுவதே வீடு!

பற்றியதை விடும் கலையே வீடு என்ற வாழ்வின் இறுதிநிலை.

பிறப்பிலிருந்து நாம் கற்பது அனைத்தையும் பற்றும் முறைகளையே!

உறவு,கல்வி,பட்டம்,பதவி,புகழ், செல்வம்,….

இவற்றைப் பற்ற முயன்று ஓரளவு பற்றி முடிவதற்குள் நாம் பற்றிய அனைத்தும் நம்மைவிட்டு விலகும் நேரம் வந்துவிடுகிறது.

பலவற்றை நாமே விடவேண்டிய நிலை ஏற்படுகிறது. அதை நாம் உணராமல் விடவேண்டியவற்றை இறுக்கமாகப் பற்றி நம்மை விட்டுச் செல்பவற்றைப் பற்றி அழுது புலம்பி ஆர்ப்பரிக்கிறோம்!

அதுவரை தான் தான் என்ற எண்ணத்தில் வாழ்ந்து வந்த நாம் நம்மையும் மீறிய சக்தியினைப் பற்றிய சிந்தனைகளில் அறிந்தோ அறியாமலோ விழுகிறோம்.

இறப்பு பிறவி பாவ புண்ணியங்கள் மறுபிறப்பு பற்றிய சிந்தனைகள் கேள்விகள் மேலோங்குகின்றன.

பலரின் அறிவுரைகளை அவர்களது தேடல்களை வரலாறுகளை ஆர்வமுடன் கேட்டு எவ்வழி செல்வது என்ற குழப்பத்தில் ஆழும் நிலை!

இருக்கும் காலத்தை எவ்வாறு கழிப்பது, விட்டுச் செல்லும் பட்டம், பணம்,பதவி,உறவு விட்டுச் செல்லும் வெற்றிடத்தை எப்படி நிரப்புவது ?

இந்த நிலைகளை ஆதிசங்கரர் இரண்டே வரிகளில் சொல்கிறார்.

பாலனாய் இருந்தவரை பகலிரவும் விளையாடல்!

பருவம் வந்தபின் பாவையரின் தேடல்!

வயதானபின் வருந்தல் சிந்தனைகளின் சூழல்!

இறைவனை என்றுமே எண்ணாது வீழல்!

#ஆன்மீகம்

(தொடரும்)

ஆன்மீகம்-53

ஆன்மீகம் இரண்டாம் பகுதி

=======================

வானவில்

=========

ஆன்மீகம்-53

===========

12 November 2018

பொருள்-1

========

அறத்தான் வருவதே இன்பம்! அதாவது அறத்தால் வருவதே இன்பம்! அறத்தால் மட்டும் இன்பம் வருமா? பொருள் தேவையில்லையா என்ற வினா எழுகிறது.

அறவழி நடந்தால் தேவையான பொருள் தானே வரும் . அப்படி அறவழி நின்றதால் இயல்பாகப் பெற்ற பொருள் இன்பத்தைத் தரும்!

பொருள் என்பதன் பொருள் இரு வகை!

ஒன்று பொருளாதாரத்தின் அடிப்படையான காசு,பனம், துட்டு மனி!

இரண்டாவது வாழ்வின் பொருள்! வாழ்வின் நோக்கம்!

நாம் முதல் வகையைப் பார்ப்போம்!

பொருளில்லார்க்கு இவ்வுலகில்லை!

வள்ளுவர் “தில்”லாகச் சொல்லுவது என்னவென்றால் கஷ்டப்பட்டு பணத்தைச் சம்பாதி! உன் எதிரிகளின் செருக்கை அடக்க பணம் எஃகைப்போல கூர்மையான ஆயுதமாகும்!

செய்க பொருளைச் செறுநர் செருக்கறுக்கும்

எஃகதனிற் கூரிய தில்.

இல்லத்தின் அடிப்படை பொருள். அதை அறவழியில் ஈட்டுவது , எவ்வளவு ஈட்டுவது, எவ்வாறு செலவிடுவது என்பனவற்றைப் படிப்படியாக்க் காண்போம்.

நாம் பொருள் ஈட்டும் வகை பிறருக்காக வேலை செய்வது அல்லது நாமாகத் தொழில் செய்வது என இருவகைப்படும்.

முதலில் பிறரிடம் வேலை செய்யும் வகையைப் பார்ப்போம்.

அது அலுவலகம் என்றால் நமக்கு மேல் ஒரு தலைமை , அலுவலக விதிமுறைகள் என்ற இரு தண்டவாள பட்டிகளில் தடம் புரளாமல் நம் தொழிலைச் செய்தல் வேண்டும்.

தலைமையை மதித்து நடக்கும் அதே வேளையில் விதிமுறைகளை பின்பற்றுவதாக இருந்தாலும் அறத்திற்கும் நம் மனசாட்சிக்கும் எதிராகச் செயல்படாது இருத்தல் வேண்டும்.

(தொடரும்)

சோப்புநுரைக் குமிழிகள்!

இந்துக்களுக்குப் பெரிய சிக்கல் மிக மிக மிக பழமையான ஆழமே காணமுடியாத ஞானப் பொக்கிஷம்!

இதை ஒரு புத்தகத்திலோ ஒருவரிடம் மட்டுமோ கேட்டு அறியவும் முடியாது! புரியவும் வாய்ப்பில்லை!

மேலும் நமது வழி வினாக்கள் கேள்விகள் எழுப்பி கேட்டறிந்து தானே உணர்ந்து தெளிவு பெற்று கேள்விகள் அடங்கிய நிலையான மோனநிலையையே இறுதியாகச் சொல்கிறது!

கேள்விகள் கேட்ப்பது மனம்! அது அடங்கும் வரை கேள்விகள் சோப்புக் குமிழ்கள் போல தொடர்ந்து எழுந்து கொண்டே இருக்கும் ! நாம் சிறு பிள்ளைகளைப் போல அதை ஒவ்வொன்றாக உடைத்து( விடை கிடைத்து) விளையாடுகிறோம்! ஆனால் பலப்பல சோப்புநுரைக் குமிழ்களை உடைத்து விளையாடிய பிறகே அந்த குமிழ்களில் ஒன்றும் இல்லை என குழந்தை உணர்ந்து ஆர்வம் இழந்து சோப்புக் கரைசலையே கொட்டிவிட்டு “ அம்மா! பசிக்கிது!” என்று ஓடுகிறது! மனம் அடங்கும் வரை “ இறைவா! உன்னைத் தவிர எதுவும் வேண்டாம்!” என்ற சரணாகதி வரும் வரை கேள்வி கேட்கும் மனம் கேட்டுக்கொண்டு அரைகுறை நம்பிக்கையிலேயே இறை வணக்கத்தைத் தொடரும்!

நாமும் அப்படியே! இந்தக் கேள்விகளிலும் அதன் பதில்களிலும் ஞானம் இருப்பதாக நமக்குத் தோன்றினாலும் அவைகளால் ஒரு பயனும் இல்லை ! நடைமுறையில் முன்னோர் வகுத்த வழியை “ கண்மூடித்தனமாக” மறுபடி சொல்கிறேன் “கண்மூடித்தனமாக “ கடைப்பிடித்தாலே பிறப்பிலா பெருநிலையை அடையலாம்! இது காஞ்சிப் பெரியவர் மேல் ஆணை!

இது ஒரு புறம் இருக்கட்டும் ! நாம் சிறுபிள்ளைகளே! அதனால் பல சோப்புக் குமிழ்களை உடைத்துத் தெளிவு பெறுவோம்!

சனாதன தர்மம்!

இந்துவாய் இருக்க நம்பிக்கை தேவையில்லை!

இந்துவாய் நடக்க முயற்சி தேவை!

செல்ஃப் சர்வீஸ்!

கோவிலுக்கு வர்ற இருக்குறவன்கிட்ட வாங்கி இல்லாதவனுக்குத் தர்றான் கடவுள்!

“ ஏலேய்! அத நீங்களே செய்யலாமுல்ல! கோவில்வரைக்கும் ஏண்டா வண்டி கட்டி வர்றீக?!

இதெல்லாம் செல்ஃப் சர்வீஸ்டா! கவ்ன்டர்ல ஏண்டா கூட்டம் போடுறீங்க?!”

அங்கலாய்க்கிறான் கடவுள்!

ஆன்மீகம்-52

ஆன்மீகம் இரண்டாம் பகுதி

================

வானவில்

======

5 November 2018

சென்ற 51 வாரங்களாக ஆன்மீகத்தின் அடிப்படையை உணர முயன்றோம். ஆன்மீகம் பலரின் மனதில் பலப்பல பொருள் தரும். ஆன்மீகம் நம் மனதின் நிலைக்குத் தகுந்தவாறே புரியும். அதுமட்டுமே சரியென்று படும். அதனால் எத்தனை மனங்கள் உண்டோ அத்தனை கருத்துக்கள் உண்டு.

கோவில் வழிபாடு சிலருக்கு ஆன்மீகம்!

மந்திரம் சபித்தல் சிலருக்கு ஆன்மீகம்!

தியானம் பழகல் சிலருக்கு ஆன்மீகம்!

பிறருக்கு உதவுதல் சிலருக்கு ஆன்மீகம்!

பக்தியில் பஜனை செய்தல் சிலருக்கு ஆன்மீகம்!

அதனால் ஆன்மீகத்தை பல கோணங்களில் அணுகலாம். கடந்த ஓராண்டாக நாம் அறிய முற்பட்டது இதோ இங்கே!

1. ஆன்மா,மனம்,உடல்,உலகம் இது அனைவருக்கும் அனைத்திற்கும் (தாவர,விலங்கு,அஃறிணை, உயிரற்ற பொருள்வரை) பொது

2. மதம் மனம் சம்பந்தப்பட்டது. உடலைத் தாண்டியது.

3. சாதி மத இன பால் திணை மொழி நாடு போன்ற பாகுபாடுகளுக்கு அப்பாற்பட்டது.

4.சாதி மத இன பால் திணை மொழி நாடு போன்ற பாகுபாடுகள் வாழ்வியலை நெறிப்படுத்தத் தோன்றியவையே. அதைத் தாண்டி இப்பிரிவினைகளுக்கு பயன் ஏதும் இல்லை.

5. உடல் மனவெளி இரண்டையும் சார்ந்த வேறுபாடுகளைக் கடக்காமல் ஆன்மாவை உணர முடியாது. ஆன்ம அனுபவம் பெறமுடியாது!

6. அற்புதங்கள் சித்திகள் இவற்றால் பெறும் பலன்கள் அனைத்தும் அழியும் தன்மை உடையவையே! இராமகிருஷ்ண பரமஹம்ஸர் சித்துக்களை மலத்திற்கு ஒப்பிடுகிறார்.

7. இல்லறத்தின் வழியே இறைநிலை அடையலாம்.

8. படிப்படியான மனத்துறவே நிலைக்கும். அதுவே நமது பாரம்பர்யம்.

9. பாவ புண்ணியங்கள் அனைவருக்கும் உண்டு. பாவ மன்னிப்பு மனதை இறுக்கத்திலிருந்து விடுபடச் செய்து புதுவாழ்வு தொடங்க உதவுகிறது.

10. பாவமன்னிப்பு அனைத்து மதங்களிலும் ஏதோ ஒரு வகையில் சொல்லப்பட்டுள்ளது.

11. மதங்கள் மனப்பயிற்சிக்காகத் தோன்றியவையே!

12. வழிகள் வேறுபடுவது வெளித்தோற்றத்தாலும் நம் அறியாமையாலுமே!

இப்படி ஒரு பட்டியலை மனதில் இருத்திக் கொண்டால் நமக்கு உண்மை ஆன்மீகம் வசப்படும். அதன் வழியே மனம் வசப்படும். வசப்பட்ட மனம் இறை அனுபவத்தை நம்மிடமிருந்து மறைக்காது. காலடியில் நாய் போல கட்டுப்பட்டுக் கிடக்கும். இல்லாவிடில் மனம் கள்ளுண்ட வெறிபிடித்த குரங்கே!

நம் முன்னோர் வகுத்த அறம்,பொருள்,இன்பம் ,வீடு என்ற வகைப்பாட்டில் இந்தத் தொடரைக் கொண்டு செல்லலாம் என்ற சிந்தனை இறையருளால் தோன்றியது.

இந்த ஆண்டு முழுவதும் அறம் ,அடுத்த ஆண்டு பொருள்,அதற்கடுத்த ஆண்டு இன்பம் ,இறுதியில் வீடு என 208 பதிவுகளாக எழுத எண்ணம் தோன்றியது. ஆனால் அது அவ்வளவு உபயோகமாக இருக்காது.

அதையொட்டி இந்த வாரத்தில் இருந்து அறம்,பொருள்,இன்பம்,வீடு என்று மாதத்தின் நான்கு வாரங்களில் அறிவோம்.

அதாவது இன்றைய பதிவு அறம் அடுத்தவாரம் பொருள் அதற்கடுத்த வாரம் இன்பம் அதற்கடுத்த வாரம் வீடு என்ற சுழற்சி அடிப்படையில் ஒவ்வொரு மாதமும் 12 மாதங்களில் 52 பதிவாகத் தொடர சித்தம். இறையருளுடன் பயணிப்போம்.

இல் அறத்தைத் தொடர்வோம் .

அறத்தின் வேர் குடும்பத் தலைவி! அவளே ஆலமரம் ! அதனால் தர்மபத்தினி எனப்படுகிறாள் என்ற கருத்தை உள்வாங்கினோம்.

எல்லா உறவுகளும் தொடங்குவதும் தொடர்வதும் இல்லமே! அதுவும் அங்கே வசிப்பவர்கள் மற்றும் வந்து செல்பவர்கள் இடையில் உள்ள பிணைப்பே இல்லறத்தின் உரைகல்.

முதல் கடமையாக தலைவியானவள் இல்லத்தில் வசிக்கும் இரத்த உறவுகள் திருமண உறவுகளை மதித்து அன்பு வழிப்படுத்த கணவனின் துணையோடு முயல வேண்டும். அதற்கு மிகப் பெரிய காரணி கணவனின் தளராத துணை! அதைப் பெறுவது மிகவும் இன்றியமையாதது.

#ஆன்மீகம்

குறுக்கு வழிகள் இல்லை! இல்லவே இல்லை!

(எச்சில் இலையில் உருளும் பக்தர்கள் காணொளிக்கு என் பின்னூட்டம்!)

நம் மனதிற்கு சில கருத்துக்கள் ஒத்து வரும். சில ஒத்து வராது. இதில் சாதி காரணமல்ல. வடநாட்டில் பக்தி அதிகம். தென்னாட்டில் பஜனை பக்தி கிடையாது. மந்திர ஜபம், பூஜை உண்டு! வடநாட்டு வழிமுறைகள் நம்மை முகம் சுழிக்கச் செய்யும்! நிறைய இப்படி வழக்கங்கள் உண்டு! யோனி பூஜை கூட உண்டு! விந்து வெளியிடாத உடலுறவு வகை வழிபாடும் உண்டு! அதாவது நம் இறுதி நோக்கம் உடல் மனம் சார்ந்த பிடிகளிலிருந்து விடுபட்டு ஆன்மாவில் ஒன்றும் அந்த நிலையில் இருப்பது! இந்த உடல் கர்மவினையால் நாம் பின்னிக் கொண்ட சட்டை என்ற நிலை அடைதல்! இதுவே முக்தி! மோக்ஷம்!

யோனி பூஜை செய்து யோனியை சக்தியாக வணங்கி பின் விந்து விழாத நிலையில் மனதை குவித்தல் ஒரு வழிமுறை! மிக மிகக் கடினமான முறை! உடலுறவின் உச்சத்தில் மனதை இழுத்துக் கட்டுவது மிக மிக மிக இருபாலாருக்கும் கடினம்! இதற்கு முன் பலப்பல வழிபாடு சிந்தனை செயல் என மனத்தை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தவர்கள் மட்டுமே இந்த யோகப் பயிற்சியில் இறங்க முடியும்!

இப்படி விந்துவிழாத உடல் உறவை வெற்றி கண்டவர்கள் பலர் உண்டு! அவர்களுக்கு “ஊர்த்வ ரேதஸ், அதாவது விந்து மேல்நோக்கிய ஓட்டம் “ உள்ளவர்கள் என்ற பெயர். இதில் காமம் சார்ந்த கலவியே நம் கண்ணில் படும்! கண்ணபிரானுக்கு ஊர்த்வ ரேதஸ் என்ற பெருமை உண்டு! அது இந்துக்களுக்கு தெரியாது! நமக்கு சாதி பஞ்சாயத்திலேயே பொழுது போகிறது! அவதாரங்கள் பலவற்றை நடைமுறையில் செய்து காட்டியவர்கள்!

ஆனால் இப்படி பல ஆயிரம் ஊர்த்வ ரேதஸ்கள் யோகிகள் இருந்தார்கள்! இன்றும் உண்டு! இதையாரும் தம்பட்டம் அடித்துக் கொள்வதில்லை! விவரம் தெரியாத நாம் தான் அறிவிலிகள்! இவற்றை என் பதின்ம வயதில் இல்லஸ்ட்ரேட்டட் வீக்லியில் படித்த போது ஆச்சரியமாக இருந்தது! “இல்லறத்தில் இருந்தே இந்த வழிமுறைகளை கடைப்பிடிக்க முடியும்! ஆனால் கணவன் மனைவி இருவருக்குமே ஆங்கிலக் கல்வியால் காமத்தைத் தவிர ஒரு மண்ணாங்கட்டியும் தெரியாது!” இதுதான் நிலை!

எச்சில் இலையில் உருள்வதால் தோல் வியாதிகள் குணமானவர்கள் உண்டு! சொன்னால் நம்ப முடியாது . நீங்களே தேடி கண்டு கொள்ளுங்கள்!

எச்சில் இலையில் உருள்வதால் ஈகோ குறைதல், பல பிறப்புகளில் செய்த பாவங்களுக்கு பிராயச்சித்தம் ( தனியாக தீச்சட்டி, அலகு குத்தல்,மண் சோறு…… பற்றி பார்ப்போம்), உண்மையான இறை அனுபவத்தில் மூழ்கிய பக்தர்களின் அடிப்பொடி ( அடியார்க்கு அடியேன் என்ற கருத்து) என்பதை ஏற்றல் என்ற பல கோணங்கள் உண்டு!

இவற்றையெல்லாம் ஏன் சொல்கிறேன் என்றால் இவை சரியா தவறா என விவாதிக்க அல்ல! இப்படி நாம் அறியாத பல கோணங்கள் உண்டு என்பதை சுட்டிக் காட்டவே!

(இதனால் எனக்குக் கிடைப்பது ஒரு பயனும் இல்லை.

நமக்குத் தெரிந்ததை பகிராமல் இருப்பது தவறு என்ற ஒரே எண்ணத்தால் பொன்னான நேரத்தை இதை எழுதி செலவிடுகிறேன்!)

இணர்ஊழ்த்தும் நாறா மலர்அனையர் கற்றது

உணர விரித்துரையா தார்

ஆதிசங்கரர் இவற்றையெல்லாம் நீக்கி கணபதி,சிவன்,சக்தி,விஷ்ணு,முருகன்,ஆதித்தன் என வழிபாடுகளை மட்டும் நிலைநிறுத்தினார்! ஆனால் மற்ற வழிபாடுகள் தலை தூக்கத் தொடங்கிவிட்டன! மக்கள் குறுக்கு வழிகளில் புண்ணியம் தேடத் தயார்! நேர்வழி செல்ல விரும்புவதில்லை!

இது எல்லா மதத்தவர்களுக்கும் பொருந்தும்!

இயேசு சொன்னதை கடைப்பிடிப்பதைவிட மதமாற்ற ஊழியம் செய்வது எளிது என்ற அநேக கிறித்தவர்கள் உண்டு!

நபி வழி நடப்பதைவிட “ஃபத்வா கொடுக்கிறேன் அவரைக்

கொன்றுவிட்டு வா!” என்பதைக் கடைப்பிடிப்பது எளிது என்ற இஸ்லாமியர் உண்டு!

புத்தரின் அஹிம்ஸையைக் கடைப்பிடிப்பதைவிட தேரர் சொல்லும் நபரை போட்டுத் தள்ளுவது எளிது என நினைக்கும் பௌத்தர்கள் பல ஆயிரம்!

மக்களே முக்தி ,நிர்வாணம்,சுவனம்,பரலோகத்தில் உள்ள பிதா இவற்றில் எதற்கும் குறுக்கு வழி இல்லை!

பீ கேர் ஃபுல்! நான் என்னச் சொன்னேன்!