அறமற்ற வாழ்வு!

அறம்,பொருள்,இன்பம்,வீடு.

தர்ம,அர்த்த,காம,மோக்ஷம்.

இது படிப்படியாக ஏறவேண்டிய படிக்கட்டு!

இதை நம் முன்னோரும் கல்வி முறையும் வலியுறுத்தினர்(திணை மயக்கம்).

இன்று ஐந்து வயது குழந்தை ” அப்பா! யூ ட்யூப் சேனல் ஆரம்பித்து கொடுங்கள்! செலிபிரிடி ஆகிறேன். காணொளிகள் பதிந்து பொருட்களை விற்று மில்லியனர் ஆகிறேன்!” என்கிறாள்.

காம,காம,அர்த்த,அர்த்த,அர்த்த,மேலும் காம,காம,காம,…. என்று கமா போட்டு வாழ்க்கை கழிகிறது.

அல்ஃபபட் ஆரம்பமே
அ- அறம் செய விரும்பு .

அறம் வாழ்வின் ஆணி வேர்.

வேதோகிலம் தர்ம மூலம்.(வேதங்கள் தர்மத்தின் ஆணிவேர்).

ந கர்மணா ந ப்ரஜயா தனேன ச
த்யாகேன ஏக அம்ருதத்வம் ஆனஸுஹு

Na Karmana Na prajaya dhanena Tyagena eka amritatvam aanashuh(பலப்பல கர்மங்களை ,பெரும் செயல்களைச் செய்வதால்,மகப் பேற்றால்,செல்வத்தால் கிடைக்காதது பிறப்பிறப்பற்ற நிலை!

த்யாகத்தால் துறவால் மட்டுமே கிட்டும்!

அறமில்லா வாழ்வு ஸ்டியரிங் வீல் மற்றும் ப்ரேக்கில்லா வண்டி போல் ஓடி புளியமரத்தில் முட்டும்!

நான் கேரண்டி!

ஆன்மீகம்-52

ஆன்மீகம் இரண்டாம் பகுதி

================

வானவில்

======

5 November 2018

சென்ற 51 வாரங்களாக ஆன்மீகத்தின் அடிப்படையை உணர முயன்றோம். ஆன்மீகம் பலரின் மனதில் பலப்பல பொருள் தரும். ஆன்மீகம் நம் மனதின் நிலைக்குத் தகுந்தவாறே புரியும். அதுமட்டுமே சரியென்று படும். அதனால் எத்தனை மனங்கள் உண்டோ அத்தனை கருத்துக்கள் உண்டு.

கோவில் வழிபாடு சிலருக்கு ஆன்மீகம்!

மந்திரம் சபித்தல் சிலருக்கு ஆன்மீகம்!

தியானம் பழகல் சிலருக்கு ஆன்மீகம்!

பிறருக்கு உதவுதல் சிலருக்கு ஆன்மீகம்!

பக்தியில் பஜனை செய்தல் சிலருக்கு ஆன்மீகம்!

அதனால் ஆன்மீகத்தை பல கோணங்களில் அணுகலாம். கடந்த ஓராண்டாக நாம் அறிய முற்பட்டது இதோ இங்கே!

1. ஆன்மா,மனம்,உடல்,உலகம் இது அனைவருக்கும் அனைத்திற்கும் (தாவர,விலங்கு,அஃறிணை, உயிரற்ற பொருள்வரை) பொது

2. மதம் மனம் சம்பந்தப்பட்டது. உடலைத் தாண்டியது.

3. சாதி மத இன பால் திணை மொழி நாடு போன்ற பாகுபாடுகளுக்கு அப்பாற்பட்டது.

4.சாதி மத இன பால் திணை மொழி நாடு போன்ற பாகுபாடுகள் வாழ்வியலை நெறிப்படுத்தத் தோன்றியவையே. அதைத் தாண்டி இப்பிரிவினைகளுக்கு பயன் ஏதும் இல்லை.

5. உடல் மனவெளி இரண்டையும் சார்ந்த வேறுபாடுகளைக் கடக்காமல் ஆன்மாவை உணர முடியாது. ஆன்ம அனுபவம் பெறமுடியாது!

6. அற்புதங்கள் சித்திகள் இவற்றால் பெறும் பலன்கள் அனைத்தும் அழியும் தன்மை உடையவையே! இராமகிருஷ்ண பரமஹம்ஸர் சித்துக்களை மலத்திற்கு ஒப்பிடுகிறார்.

7. இல்லறத்தின் வழியே இறைநிலை அடையலாம்.

8. படிப்படியான மனத்துறவே நிலைக்கும். அதுவே நமது பாரம்பர்யம்.

9. பாவ புண்ணியங்கள் அனைவருக்கும் உண்டு. பாவ மன்னிப்பு மனதை இறுக்கத்திலிருந்து விடுபடச் செய்து புதுவாழ்வு தொடங்க உதவுகிறது.

10. பாவமன்னிப்பு அனைத்து மதங்களிலும் ஏதோ ஒரு வகையில் சொல்லப்பட்டுள்ளது.

11. மதங்கள் மனப்பயிற்சிக்காகத் தோன்றியவையே!

12. வழிகள் வேறுபடுவது வெளித்தோற்றத்தாலும் நம் அறியாமையாலுமே!

இப்படி ஒரு பட்டியலை மனதில் இருத்திக் கொண்டால் நமக்கு உண்மை ஆன்மீகம் வசப்படும். அதன் வழியே மனம் வசப்படும். வசப்பட்ட மனம் இறை அனுபவத்தை நம்மிடமிருந்து மறைக்காது. காலடியில் நாய் போல கட்டுப்பட்டுக் கிடக்கும். இல்லாவிடில் மனம் கள்ளுண்ட வெறிபிடித்த குரங்கே!

நம் முன்னோர் வகுத்த அறம்,பொருள்,இன்பம் ,வீடு என்ற வகைப்பாட்டில் இந்தத் தொடரைக் கொண்டு செல்லலாம் என்ற சிந்தனை இறையருளால் தோன்றியது.

இந்த ஆண்டு முழுவதும் அறம் ,அடுத்த ஆண்டு பொருள்,அதற்கடுத்த ஆண்டு இன்பம் ,இறுதியில் வீடு என 208 பதிவுகளாக எழுத எண்ணம் தோன்றியது. ஆனால் அது அவ்வளவு உபயோகமாக இருக்காது.

அதையொட்டி இந்த வாரத்தில் இருந்து அறம்,பொருள்,இன்பம்,வீடு என்று மாதத்தின் நான்கு வாரங்களில் அறிவோம்.

அதாவது இன்றைய பதிவு அறம் அடுத்தவாரம் பொருள் அதற்கடுத்த வாரம் இன்பம் அதற்கடுத்த வாரம் வீடு என்ற சுழற்சி அடிப்படையில் ஒவ்வொரு மாதமும் 12 மாதங்களில் 52 பதிவாகத் தொடர சித்தம். இறையருளுடன் பயணிப்போம்.

இல் அறத்தைத் தொடர்வோம் .

அறத்தின் வேர் குடும்பத் தலைவி! அவளே ஆலமரம் ! அதனால் தர்மபத்தினி எனப்படுகிறாள் என்ற கருத்தை உள்வாங்கினோம்.

எல்லா உறவுகளும் தொடங்குவதும் தொடர்வதும் இல்லமே! அதுவும் அங்கே வசிப்பவர்கள் மற்றும் வந்து செல்பவர்கள் இடையில் உள்ள பிணைப்பே இல்லறத்தின் உரைகல்.

முதல் கடமையாக தலைவியானவள் இல்லத்தில் வசிக்கும் இரத்த உறவுகள் திருமண உறவுகளை மதித்து அன்பு வழிப்படுத்த கணவனின் துணையோடு முயல வேண்டும். அதற்கு மிகப் பெரிய காரணி கணவனின் தளராத துணை! அதைப் பெறுவது மிகவும் இன்றியமையாதது.

#ஆன்மீகம்

குறுக்கு வழிகள் இல்லை! இல்லவே இல்லை!

(எச்சில் இலையில் உருளும் பக்தர்கள் காணொளிக்கு என் பின்னூட்டம்!)

நம் மனதிற்கு சில கருத்துக்கள் ஒத்து வரும். சில ஒத்து வராது. இதில் சாதி காரணமல்ல. வடநாட்டில் பக்தி அதிகம். தென்னாட்டில் பஜனை பக்தி கிடையாது. மந்திர ஜபம், பூஜை உண்டு! வடநாட்டு வழிமுறைகள் நம்மை முகம் சுழிக்கச் செய்யும்! நிறைய இப்படி வழக்கங்கள் உண்டு! யோனி பூஜை கூட உண்டு! விந்து வெளியிடாத உடலுறவு வகை வழிபாடும் உண்டு! அதாவது நம் இறுதி நோக்கம் உடல் மனம் சார்ந்த பிடிகளிலிருந்து விடுபட்டு ஆன்மாவில் ஒன்றும் அந்த நிலையில் இருப்பது! இந்த உடல் கர்மவினையால் நாம் பின்னிக் கொண்ட சட்டை என்ற நிலை அடைதல்! இதுவே முக்தி! மோக்ஷம்!

யோனி பூஜை செய்து யோனியை சக்தியாக வணங்கி பின் விந்து விழாத நிலையில் மனதை குவித்தல் ஒரு வழிமுறை! மிக மிகக் கடினமான முறை! உடலுறவின் உச்சத்தில் மனதை இழுத்துக் கட்டுவது மிக மிக மிக இருபாலாருக்கும் கடினம்! இதற்கு முன் பலப்பல வழிபாடு சிந்தனை செயல் என மனத்தை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தவர்கள் மட்டுமே இந்த யோகப் பயிற்சியில் இறங்க முடியும்!

இப்படி விந்துவிழாத உடல் உறவை வெற்றி கண்டவர்கள் பலர் உண்டு! அவர்களுக்கு “ஊர்த்வ ரேதஸ், அதாவது விந்து மேல்நோக்கிய ஓட்டம் “ உள்ளவர்கள் என்ற பெயர். இதில் காமம் சார்ந்த கலவியே நம் கண்ணில் படும்! கண்ணபிரானுக்கு ஊர்த்வ ரேதஸ் என்ற பெருமை உண்டு! அது இந்துக்களுக்கு தெரியாது! நமக்கு சாதி பஞ்சாயத்திலேயே பொழுது போகிறது! அவதாரங்கள் பலவற்றை நடைமுறையில் செய்து காட்டியவர்கள்!

ஆனால் இப்படி பல ஆயிரம் ஊர்த்வ ரேதஸ்கள் யோகிகள் இருந்தார்கள்! இன்றும் உண்டு! இதையாரும் தம்பட்டம் அடித்துக் கொள்வதில்லை! விவரம் தெரியாத நாம் தான் அறிவிலிகள்! இவற்றை என் பதின்ம வயதில் இல்லஸ்ட்ரேட்டட் வீக்லியில் படித்த போது ஆச்சரியமாக இருந்தது! “இல்லறத்தில் இருந்தே இந்த வழிமுறைகளை கடைப்பிடிக்க முடியும்! ஆனால் கணவன் மனைவி இருவருக்குமே ஆங்கிலக் கல்வியால் காமத்தைத் தவிர ஒரு மண்ணாங்கட்டியும் தெரியாது!” இதுதான் நிலை!

எச்சில் இலையில் உருள்வதால் தோல் வியாதிகள் குணமானவர்கள் உண்டு! சொன்னால் நம்ப முடியாது . நீங்களே தேடி கண்டு கொள்ளுங்கள்!

எச்சில் இலையில் உருள்வதால் ஈகோ குறைதல், பல பிறப்புகளில் செய்த பாவங்களுக்கு பிராயச்சித்தம் ( தனியாக தீச்சட்டி, அலகு குத்தல்,மண் சோறு…… பற்றி பார்ப்போம்), உண்மையான இறை அனுபவத்தில் மூழ்கிய பக்தர்களின் அடிப்பொடி ( அடியார்க்கு அடியேன் என்ற கருத்து) என்பதை ஏற்றல் என்ற பல கோணங்கள் உண்டு!

இவற்றையெல்லாம் ஏன் சொல்கிறேன் என்றால் இவை சரியா தவறா என விவாதிக்க அல்ல! இப்படி நாம் அறியாத பல கோணங்கள் உண்டு என்பதை சுட்டிக் காட்டவே!

(இதனால் எனக்குக் கிடைப்பது ஒரு பயனும் இல்லை.

நமக்குத் தெரிந்ததை பகிராமல் இருப்பது தவறு என்ற ஒரே எண்ணத்தால் பொன்னான நேரத்தை இதை எழுதி செலவிடுகிறேன்!)

இணர்ஊழ்த்தும் நாறா மலர்அனையர் கற்றது

உணர விரித்துரையா தார்

ஆதிசங்கரர் இவற்றையெல்லாம் நீக்கி கணபதி,சிவன்,சக்தி,விஷ்ணு,முருகன்,ஆதித்தன் என வழிபாடுகளை மட்டும் நிலைநிறுத்தினார்! ஆனால் மற்ற வழிபாடுகள் தலை தூக்கத் தொடங்கிவிட்டன! மக்கள் குறுக்கு வழிகளில் புண்ணியம் தேடத் தயார்! நேர்வழி செல்ல விரும்புவதில்லை!

இது எல்லா மதத்தவர்களுக்கும் பொருந்தும்!

இயேசு சொன்னதை கடைப்பிடிப்பதைவிட மதமாற்ற ஊழியம் செய்வது எளிது என்ற அநேக கிறித்தவர்கள் உண்டு!

நபி வழி நடப்பதைவிட “ஃபத்வா கொடுக்கிறேன் அவரைக்

கொன்றுவிட்டு வா!” என்பதைக் கடைப்பிடிப்பது எளிது என்ற இஸ்லாமியர் உண்டு!

புத்தரின் அஹிம்ஸையைக் கடைப்பிடிப்பதைவிட தேரர் சொல்லும் நபரை போட்டுத் தள்ளுவது எளிது என நினைக்கும் பௌத்தர்கள் பல ஆயிரம்!

மக்களே முக்தி ,நிர்வாணம்,சுவனம்,பரலோகத்தில் உள்ள பிதா இவற்றில் எதற்கும் குறுக்கு வழி இல்லை!

பீ கேர் ஃபுல்! நான் என்னச் சொன்னேன்!

காமத்துப்பாலும்! காட்சிப் பாலும்!

காமத்துப் பால் முக்கியம்!
காட்சிப் பால் தேவையற்றது!

பருவமடைய அடைய ஆண் பெண்ணைத் தேடுவது பெண்ணை ஆண் தேடுவது மொட்டு மலராவது போல சுகமான அனுபவம்!

பெண்ணைக் காட்சிப் படுத்தும்போது மொட்டின் மீது வாசனைத் திரவியங்களைப் பூசி வண்டுகளை வன்முறையாக வரவழைப்பது தேவையற்றது!

பசித்தவன் உணவைத் தேடுகிறான்!
களைத்தவன் உறக்கம் தேடுகிறான்!
இதை அடைந்தவன் காமம் தேடுகிறான்!
காமம் தீர்ந்தவன் கலையைத் தேடுகிறான்!
கலையில் சலித்தவன் கருவிகளைத் தேடுகிறான்!
கண்டுபிடிப்பில் சலித்தவன் தன்னைத் தேடுகிறான்!
தன்னைத் தேடுபவன் கடவுளைக் காண்கிறான்!
கடவுளைத் தேடுபவன் தன்னைக் காண்கிறான்!

தன்னைக் கண்டவன் தயையில் நிலைக்கிறான்!
கடவுளைக் கண்டவன் கடவுளாகிறான்!

காலன்,காமம்,கடவுள்!

காலன் பற்றுவது உடலை காமம் பற்றுவது மனத்தை! காமம் இயங்குவது உடலால்! சித்தத்தை புருவமத்தியில் நிறுத்தினால் உடல் தளை அழிகிறது! அதனால் நாம் உடலைச் சார்ந்தவர்கள் அல்ல என்ற தெளிவு பிறக்கிறது! உடல் உணர்வற்ற போது உடல் உறவு பெரிதாகப் படுவதில்லை! இதைக் குறிக்கவே சிவபெருமான் மூன்றாம் கண்ணாகிய புருவமத்தியால் காமனை எரித்தான் என்று உருவகப்படுத்திச் சொல்லப் பட்டது! உடலின்பத்தை சனாதன தர்மம் என்றுமே பழித்ததில்லை. அதைச் சிற்றின்பம் என்றார்கள். அதைவிட மிகப் பெரிய இன்பம் நம் ஐம்புலன்களைத் தாண்டி உணர முடியும்.அதைப் பேரின்பம் என்றார்கள்! சிற்றின்பத்தை அனுபவி . ஆனால் அது நிலையற்றது என்பதை உணர்.

ஆன்மீகம்-10

வானவில்
=========
(5 Jan 2018)
சென்ற வாரம் அன்பர் சுகு சுகுமார் அறுபதாம் கல்யாணத்திற்கும் வானப் ப்ரஸ்தத்திற்கும்(வன ப்ரஸ்தம்= காட்டை நோக்கிச் செல்லுதல்) தொடர்பு உண்டா என்று கேட்டிருந்தார்.
மனித வாழ்வை நம் பண்பாட்டில் அறம்(தர்மம்),பொருள்(அர்த்தம்),இன்பம்(காமம்),வீடு(மோக்ஷம்= மோஹ+க்ஷயம் = ஆசை+ அழிவது) நான்காகப் பிரித்து வகைப்படுத்துகிறோம்.

அறம்- பிறப்பிலிருந்து 20-21 வயது வரை அறம் ,அறம் சார்ந்த வாழ்வைப் பயின்று நடக்கிறோம்.

பொருள்-21-50வரை பொருள் தேடுகிறோம்.

இன்பம்- 25-50வரை புலனின்பம் நுகர்ந்து களிக்கிறோம்; சலிக்கிறோம்

வீடு- 50-60ல் நம் சந்ததிகளுக்குச் செய்ய வேண்டிய கடமைகளைச் செய்து அவர்கள் நம்மை விட்டுச் செல்வதே நம் முதல் விடுதலை.
விடு என்பதே வீடு என்றும் வீடுபேறு(விடு+பெறு=உலக உறவுகளை விடு + அடுத்த பிறவி பெறு) என்றானது.

இது தான் மிக முக்கியமான கட்டம். 30-40 ஆண்டுகளாக நம்மைச் சார்ந்த பந்தங்கள் விலகக் காண்போம். மனது வலிக்கும். வெறுமை பற்றும். வாழ்வின் பொருளென்ன ? என்ற கேள்விகள் மனதை நிறைக்கும். நம்மைக் கலங்கச் செய்யும்.

அப்போது நம் அடுத்த கட்டமான வாழ்வின் இறுதியான நாம் வந்ததன் பொருளைத் தேட நினைவூட்டும் வகையில் அறுபதாம் திருமணம் நம் சந்ததிகள் உறவுகள் சூழ கொண்டாடப் படுகிறது. இதுவரை சரி.

அதென்ன காட்டைத் தேடிப் போவது என்ற வனப்ரஸ்தம்?

ஒருகாலத்தில் நல்ல ஆன்மத் தேடல் உள்ள ஞானிகளும் யோகிகளும் காட்டிலேயே வசித்தார்கள். அவர்கள் கண்ட உண்மைகளைக் கேட்டே அறிய வேண்டும். அதனால் மன்னர்கள் முதல் பாமரர் வரை தம்பதிகளாய் தங்கள் குடும்பப் பொறுப்பை அடுத்த தலைமுறையின் கையில் ஒப்படைத்து யாத்திரைகள் அல்லது கானகம் தேடிப் போவது மரபு!
ஸந்யஸ்த ஸ்ரவணம் குர்யாத் – உலகத் தொடர்பை விட்டு நன்மொழி கேள் என்று பொருள்
இன்றைய நடைமுறையில் எல்லா ஞான நூல்களும்  உரைகளும் நமக்கு நாட்டிலேயே கிடைக்கிறது. நல்ல ஞானிகளும் நம்மிடையே வாழ்ந்து  வழிகாட்டியாக இருக்கிறார்கள்.
ஆனால் மற்றொரு சிக்கல் நமக்கு இருக்கிறது. இந்த ஞான உபதேசங்களைக் கேட்டாலும் படித்தாலும் நாம் மகன் மகள் உடன் வாழும் போது நம் மனம் கிடந்து உழன்று முழுவதுமாக எதையும் விடமுடியாமல் தானாடவில்லை என்றாலும் சதையாடும் என்ற கூற்றிற்கிணங்க குடும்ப விஷயங்களில் மூக்கை நுழைத்து பரிதவிக்கிறோம். வாழ்க்கை வெறுத்துப் போகிறது.
இந்நேரங்களில் நாம் வனத்தில் இருந்தால் எப்படி குடும்ப விஷயங்களில் தலையிட்டிருக்க மாட்டோமோ அதைப் போல இருந்து நம்மைக் கேட்டால் மட்டுமே அறிவுரை,கருத்துச் சொல்லும் விரதத்தை மேற்கொள்ள வேண்டும். இது தான் இன்றைய சூழ்நிலையில் வனப் ப்ரஸ்தம். குழந்தைகள்,உடன் இல்லை என்றால் தம்பதிகளாய் நம் இறுதி கட்டத்தை அமைதியாக அழகாகக் கடக்கலாம்!(தொடரும்)
#ஆன்மீகம்