பிணைந்த மாவு,தொடு மாவு,சப்பாத்திக் கட்டை என் குருக்கள்!

பிணைந்த சப்பாத்தி மாவை சப்பாத்திப் பலகையில் வைத்து சப்பாத்திக் கட்டையால் அழுத்தி உருட்டினேன். சப்பாத்திக் கட்டையோடு மாவு ஒட்டிக் கொண்டது. அதைப் பிரித்து எடுத்து மறுபடி பந்தாக உருட்டி மறுபடி சப்பாத்திக் கட்டையால் அழுத்தி உருட்டினேன். மறுபடி ஒட்ட நான் பிரித்து எடுத்து பந்தாக்கி மறுபடி சப்பாத்தி செய்ய முயல்வதுமாய் இருந்தேன்! ஒரு சப்பாத்தி செய்தபாடில்லை!
பந்தாக உருட்டிய மாவை கொஞ்சம் கோதுமை மாவில் உருட்டி சப்பாத்தி செய்ய முயன்றேன். அது ஒட்டவில்லை. ஓரளவு வட்டமாக வர ஆரம்பித்தது! ஆனால் மறுபடி ஒட்ட ஆரம்பித்தது. மறுபடி கொஞ்சம் கோதுமை மாவை தூவி சப்பாத்திக் கட்டையால் அழுத்தி உருட்டினேன். இப்படி பல முறை செய்து அழகான வட்டமாக வந்தது சப்பாத்தி!
அழகாக நெய் ஊற்றி வாட்டி அனைவருக்கும் படைத்தேன்!

சப்பாத்தி – மனம்

பிணைந்த மாவு கட்டையில் ஒட்டுதல் – நாம் வைக்கும் பற்று

சப்பாத்திக் கட்டை- வாழ்க்கை

ஒட்டிய சப்பாத்தி மறுபடி உருண்டையாதல் – மறுபிறவி

கட்டையில் ஒட்டி மறுபடி உருண்டையாதல் – நிலையாமை உணராது உலகப் பொருட்கள் உறவில் பட்டம் பணம் பதவியில் பற்றுவைத்து கருப்பிண்டமாக அன்னை வயிற்றில் வருதல்

தொடுமாவு – தினமும் நிலையாமை உணர்த்தல்

அழகான வட்டவடிவ பெரிய சப்பாத்தி – பரந்து விரிந்த மனம்

நன்கு தயாரான சப்பாத்தி உண்ணப்படல் – பிறவா நிலை எய்தல்

இறைவனுக்கு படைக்கும் பொங்கல்

உடல் என்ற மண் பானையில்,

ஆணவம் காமம் க்ரோதம் லோபம் போன்ற விறகுகள் எரிய,

தள தளவென சிந்தனையால் கொதிக்கும் மனமென்னும் நீரில்,

நிலையாமை என்ற அரிசியை இட்டு,

இன்சொல் எனும் வெல்லம் ,

கேட்க்காமலே பிறருக்கு உதவி என்னும் முந்திரி இட்டு,

உற்றார் உறவினருக்கு அன்பான முத்தங்கள் என்ற கிஸ்மிஸ் இட்டு,

உயிர்நேயம் எனும் பாலூற்றி,

இடைவிடாத பொது சேவை என்று நன்றாக கிளறி,

பணிவு பக்தி என்ற வாழையிலையில் படைத்தால் இறைவன் ஏற்றுக் கொள்வான்!

முக்தியெனும் மெடல்!

ஆண்டவனின் அருள் மழையில் நனைபவன் குளியலறையில் குளிக்க வேண்டியதில்லை!
ஈகோ மனித நேயமின்மை கொடூரம் வக்கிரம் ….. இப்படி அசுர குணங்கலாளான குடையைப் பிடித்துத் திரிபவன் ஆண்டவனின் அருள் மழையில் நனைய முடிவதில்லை! அப்படிப்பட்டவனே சரியை கிரியை யோகம் இன்னர் இஞ்சினியரிங் ஆர்ட் ஆஃப் லிவ்விங்  யோகா வாசி கேம்ப் என்று பாத்ரூமில் குளிக்க முயல்கிறான்!
முக்திக்கு சுலபமான வழி!
அகந்தையை விடல்!
நான் எனது பற்றை விடல்!
நிலையாமை உணர்தல்!
செய்தால் முக்தியெனும் மெடல்!

ஆன்மீகம்-52

ஆன்மீகம் இரண்டாம் பகுதி

================

வானவில்

======

5 November 2018

சென்ற 51 வாரங்களாக ஆன்மீகத்தின் அடிப்படையை உணர முயன்றோம். ஆன்மீகம் பலரின் மனதில் பலப்பல பொருள் தரும். ஆன்மீகம் நம் மனதின் நிலைக்குத் தகுந்தவாறே புரியும். அதுமட்டுமே சரியென்று படும். அதனால் எத்தனை மனங்கள் உண்டோ அத்தனை கருத்துக்கள் உண்டு.

கோவில் வழிபாடு சிலருக்கு ஆன்மீகம்!

மந்திரம் சபித்தல் சிலருக்கு ஆன்மீகம்!

தியானம் பழகல் சிலருக்கு ஆன்மீகம்!

பிறருக்கு உதவுதல் சிலருக்கு ஆன்மீகம்!

பக்தியில் பஜனை செய்தல் சிலருக்கு ஆன்மீகம்!

அதனால் ஆன்மீகத்தை பல கோணங்களில் அணுகலாம். கடந்த ஓராண்டாக நாம் அறிய முற்பட்டது இதோ இங்கே!

1. ஆன்மா,மனம்,உடல்,உலகம் இது அனைவருக்கும் அனைத்திற்கும் (தாவர,விலங்கு,அஃறிணை, உயிரற்ற பொருள்வரை) பொது

2. மதம் மனம் சம்பந்தப்பட்டது. உடலைத் தாண்டியது.

3. சாதி மத இன பால் திணை மொழி நாடு போன்ற பாகுபாடுகளுக்கு அப்பாற்பட்டது.

4.சாதி மத இன பால் திணை மொழி நாடு போன்ற பாகுபாடுகள் வாழ்வியலை நெறிப்படுத்தத் தோன்றியவையே. அதைத் தாண்டி இப்பிரிவினைகளுக்கு பயன் ஏதும் இல்லை.

5. உடல் மனவெளி இரண்டையும் சார்ந்த வேறுபாடுகளைக் கடக்காமல் ஆன்மாவை உணர முடியாது. ஆன்ம அனுபவம் பெறமுடியாது!

6. அற்புதங்கள் சித்திகள் இவற்றால் பெறும் பலன்கள் அனைத்தும் அழியும் தன்மை உடையவையே! இராமகிருஷ்ண பரமஹம்ஸர் சித்துக்களை மலத்திற்கு ஒப்பிடுகிறார்.

7. இல்லறத்தின் வழியே இறைநிலை அடையலாம்.

8. படிப்படியான மனத்துறவே நிலைக்கும். அதுவே நமது பாரம்பர்யம்.

9. பாவ புண்ணியங்கள் அனைவருக்கும் உண்டு. பாவ மன்னிப்பு மனதை இறுக்கத்திலிருந்து விடுபடச் செய்து புதுவாழ்வு தொடங்க உதவுகிறது.

10. பாவமன்னிப்பு அனைத்து மதங்களிலும் ஏதோ ஒரு வகையில் சொல்லப்பட்டுள்ளது.

11. மதங்கள் மனப்பயிற்சிக்காகத் தோன்றியவையே!

12. வழிகள் வேறுபடுவது வெளித்தோற்றத்தாலும் நம் அறியாமையாலுமே!

இப்படி ஒரு பட்டியலை மனதில் இருத்திக் கொண்டால் நமக்கு உண்மை ஆன்மீகம் வசப்படும். அதன் வழியே மனம் வசப்படும். வசப்பட்ட மனம் இறை அனுபவத்தை நம்மிடமிருந்து மறைக்காது. காலடியில் நாய் போல கட்டுப்பட்டுக் கிடக்கும். இல்லாவிடில் மனம் கள்ளுண்ட வெறிபிடித்த குரங்கே!

நம் முன்னோர் வகுத்த அறம்,பொருள்,இன்பம் ,வீடு என்ற வகைப்பாட்டில் இந்தத் தொடரைக் கொண்டு செல்லலாம் என்ற சிந்தனை இறையருளால் தோன்றியது.

இந்த ஆண்டு முழுவதும் அறம் ,அடுத்த ஆண்டு பொருள்,அதற்கடுத்த ஆண்டு இன்பம் ,இறுதியில் வீடு என 208 பதிவுகளாக எழுத எண்ணம் தோன்றியது. ஆனால் அது அவ்வளவு உபயோகமாக இருக்காது.

அதையொட்டி இந்த வாரத்தில் இருந்து அறம்,பொருள்,இன்பம்,வீடு என்று மாதத்தின் நான்கு வாரங்களில் அறிவோம்.

அதாவது இன்றைய பதிவு அறம் அடுத்தவாரம் பொருள் அதற்கடுத்த வாரம் இன்பம் அதற்கடுத்த வாரம் வீடு என்ற சுழற்சி அடிப்படையில் ஒவ்வொரு மாதமும் 12 மாதங்களில் 52 பதிவாகத் தொடர சித்தம். இறையருளுடன் பயணிப்போம்.

இல் அறத்தைத் தொடர்வோம் .

அறத்தின் வேர் குடும்பத் தலைவி! அவளே ஆலமரம் ! அதனால் தர்மபத்தினி எனப்படுகிறாள் என்ற கருத்தை உள்வாங்கினோம்.

எல்லா உறவுகளும் தொடங்குவதும் தொடர்வதும் இல்லமே! அதுவும் அங்கே வசிப்பவர்கள் மற்றும் வந்து செல்பவர்கள் இடையில் உள்ள பிணைப்பே இல்லறத்தின் உரைகல்.

முதல் கடமையாக தலைவியானவள் இல்லத்தில் வசிக்கும் இரத்த உறவுகள் திருமண உறவுகளை மதித்து அன்பு வழிப்படுத்த கணவனின் துணையோடு முயல வேண்டும். அதற்கு மிகப் பெரிய காரணி கணவனின் தளராத துணை! அதைப் பெறுவது மிகவும் இன்றியமையாதது.

#ஆன்மீகம்

கட்டெறும்பு!

கை கூப்பி கண் மூடி கடவுளை நினைக்கும் போது காலில் கட்டெறும்பாய் கர்மவினைகள் கடித்தன!

உலக ஆசை என்ற புற்றின் மேல் நிற்பதை உணர்ந்தேன். கொஞ்சம் தள்ளி நின்று கண் மூடினேன். அப்போதைக்கப்போது ஓரிரு எறும்புகள் கடித்தாலும் முன்பு போல் கன்னாபின்னா கடிகள் இல்லை!

ஆன்மீகம்-41

வானவில்
18 August 2018
ஆன்மீகத்தின் குவியம் பற்றி சிந்தித்தோம்! ஆன்மீகம் உடலைத் தாண்டி மனதைத் தாண்டி அறிவையும் தாண்டி ஆன்மா நாம் என்ற அனுபவத்தை அடைதலாகும்.

அது சரி அதனால் நாம் அடையும் பயன் என்ன?

நான் ஆன்மா நான் கடவுள் என்பதை உணராவிட்டால் என்ன கெட்டுவிட்டது?

உணர்வதால் என்ன பயன் ஏற்படப் போகிறது?

நம் வாழ்வில் நமக்கு இரண்டு மயக்கங்கள்.

1.நாம் உடல் என்ற எண்ணம்.

2.இந்த வாழ்வு நிலையற்றது என்பதை நாள்தோறும் பார்த்தாலும் நாம் அதை உணராமல் ஆணவத்தில் திரிவது.

இதனால் வரும் கேடு:
===================
இந்த உடல் என்ற எண்ணம் இருப்பதால் நாம் நம் உடலையும் உடல் சார்ந்த உறவுகளையும் பொருட்க்களையும் காப்பாற்றுவதிலேயே செலவிடுகிறோம். போட்டி பொறாமையில் வாழ்வை வீணடிக்கிறோம்.
இப்படி நாம் காப்பாற்றிய உடல் பொருள் உறவுகள் நிலைக்காமல் போகும்போது கத்திக் கதறி அழுகிறோம்!

நாம் இந்த உடல் இல்லை. உடல் மனம் அறிவு இவற்றைத் தாண்டிய ஆன்மா என்ற எண்ணம் தோன்றினால் உறவு பொருள் சேர்ந்தாலும் உடல் வலிமை பெற்றிருந்தாலும் அறிவிலே சிறந்தாலும் இவை அனைத்தும் அழிந்தாலும் நம் மனம் அமைதியை இழக்காது.

அனைவரின் உள்ளும் நிலைத்திருப்பது ஒரே பரம்பொருள் என்ற உணர்வே மிஞ்சும். அடுத்தவரையும் அன்புடன் நடத்த மன்னிக்க வாழ்த்த வாழவைக்கத் தோன்றும். இந்த நிலையைக் குறிக்கத்தான் “அன்பே சிவம்!” என்றோர் ஆன்றோர்.

நிலையாமை மற்றும் நாம் உடலல்ல என்ற அனுபவத்தை அடைய பல வழிமுறைகள் தோன்றின. அவற்றின் தொகுப்பே மதங்கள்!

உருவங்களின் உதவியோடு இறைநிலையை உணர நம்மைத் தயார் செய்வது மற்றும் உருவமற்ற பரம்பொருளை நோக்கி நம்மை முன்னேற்றுவது என மதங்கள் இருவகைப்படும்.

உருவ வழிபாட்டின் மூலம் இறைநிலை உணர்தல் சகுணப் ப்ரம்ம வழிபாடு எனவும்

அருவ வழிபாட்டின் மூலம் இறைநிலை உணர்தல் நிர்குணப் ப்ரம்ம வழிபாடு எனவும் அழைக்கப் படுகிறது.

அருவ வழிபாடு – கிறிஸ்த்தவ,இஸ்லாமிய மதங்கள்

உருவ வழிபாட்டில் தொடங்கி அருவத்தில் முடிவது – இந்து மதம் என்று ஆங்கிலேயரால் அழைக்கப்பட்ட பேரேதும் இல்லாத மதம்
(தொடர்வோம்)

#ஆன்மீகம்

ஆரம்பமும் முடிவும்!

“கடவுளே!

நல்ல சொந்த பந்தத்தக் கொடு!

பேரும் புகழக் கொடு!

நல்ல படிப்பக் கொடு! ”

“உற்றாரை யான் வேண்டேன்;

ஊர் வேண்டேன்; பேர் வேண்டேன்;

கற்றாரை யான் வேண்டேன்; கற்பனவும் இனி அமையும்;

குற்றாலத்து அமர்ந்து உறையும் கூத்தா! உன் குரை கழற்கே,

கற்றாவின் மனம் போல, கசிந்து, உருக வேண்டுவனே!”

வேண்டாததை வேண்டிப் பெற்று பெற்றதை வேண்டாமென்று வேண்டுவது நமது லாஜிக்!

என்ன விரட்டலயா!

வாழ்க்கை கசக்க கசக்க நிலையாமை உணர்வோம்! அது இறைவனின் கொடை! புரிய பலவருடம் ஆகும்! புரியும்போது புன்முறுவல் வரும்! வடிவேலு கோழி பேரம் பேசும்போது பலர் விரட்டி ஓடிவர தன்னைத் தான் என்று பல கிமீ ஓடி தன்னை அல்ல என உணரும் மொமன்ட் எல்லாருக்கும் வரும்!
நமது உலகவாழ்வு நிலையானது என்ற அறியாமையைத் தான் அது விரட்டுகிறது!
கடவுளே கதி என்று வாழ்பவர்களை இன்னும் விரட்டும்!
கடவுளுக்கு, துன்பத்தில் நம் நேர்மை கண்ணியம் கட்டுப்பாட்டை மற்றவர்களுக்கு டெமோ கொடுப்பதில் மகிழ்ச்சி ! ” பண்பட்டவனைப் பாரடா!” என்று!

ஆன்மீகம்-22

7 ஏப்ரல் 2018
வானவில்
=========
ஆன்மீகத்திற்கான தகுதி ,அதன் இறுதி நிலை,அதன் வழிமுறைகள் ,பாதைகள் பற்றி அறிந்தோம்.

தகுதி- உயிருடன் உடல்தாங்கி இருத்தல்

இறுதிநிலை – பிறப்பிறப்பற்ற நிலை

வழிமுறை – நிலையாமை உணர்ந்து பிறப்பிறப்பைத் தரும் ஆசை களைவதே!

பாதைகள்-நாத்திகம்,ஆத்திகம்,பக்தி,சேவை,ஞானம்,ராஜயோகம்,…இப்படிப் பல . உடலுறவு கூட ஒரு பாதை! கடினமான ஒன்று ! அதுவும் ஒரு பாதையே! விந்து வெளிப்படாத உடலுறவும் ஒரு யோகமே! நம்மால் கடைப்பிடிக்க இயலாத ஒன்றை விவாதித்து அறிந்து பயனில்லை.

ஆன்மீகத்தில் உடல் சார்ந்த அனைத்தையும் புறந்தள்ளி மனம் புத்தி சித்தம் அஹங்காரம் என்ற தன்னுணர்வு ஆன்மா என்பவை பற்றியே பேச பழக ஆராய வேண்டும்!

“சாதி மத இன பால் திணை உருவமா அருவமா என்று கீழான எண்ணங்களை மறந்தும் பேச நினைக்கக் கூடாது. அது அறியாமைச் சுழலில் நம்மை பலப்பல பிறவிகளில் அதே நிலையில் நிறுத்தி வைத்து ஆன்மத் தேடலைத் தடைப்படுத்தும். சுருக்கமாக அதை மாயை எனச் சொல்லி தவிர்ப்போம்!”

இவற்றை அறிந்தபின் நடைமுறைப்படுத்துவது எவ்வாறு என பார்த்து வருகிறோம்!

மனதார வாழ்த்தல்,பிறர் துன்பம் களைதல்,நிலையாமையை நினைவு கூறல்,ஈகை,கருணை பழகல்.

இதனால் அடையும் பயன் மனத்தூய்மை.

மனத்தூய்மையால் அடையும் நன்மை என்ன?

மனத்தூய்மையால் அடைவது சித்தத் தூய்மை!

சித்தத் தூய்மையால் அடைவது இறையனுபவம்! 

இதுவரை சரி! மனத்திற்கும் சித்தத்திற்கும் என்ன வேறுபாடு?

கடற்கரையில் அலைகள் எழுந்து வந்தபடி கரையில் மோதியபடி இருக்கும்.
அதில் சூரிய பிம்பம் இரண்டு அலைகளுக்கு இடைப்பட்ட நேரத்திலேயே தெரியும். அதுவும் அலைக்கழியும் நிலையற்ற பிம்பமாகவே தெரியும்!

நடுக்கடலில் சாந்தமாக அலையின்றி சூரியன் தங்கத்தட்டு போல ஒளிரும்.

கடற்கரை நீர் – மனம். ஆசை ,வெறுப்பு என்ற காற்று வீச அவற்றை அடையும் தவிர்க்கும் முயற்சியில் அலைக்கழியும்.
கடற்கரை சூரிய பிம்பம் – நம் மனதில் அவ்வப்போது வந்து போகும் இறையனுபவம் என்ற ஆனந்தம் ,அமைதி. எடுத்துக்காட்டாக தூக்கத்தில் அனுபவிக்கும் சுகமான அமைதி மனமடங்குவதால் நாம் அனுபவிக்கும் குறுகிய கால (சத் சித்) ஆனந்தமான இறையனுபவமே!

சித்தம் – அலையற்ற ஆழ்கடல் . அதில் சூரியன் ஒளிர்வதைப் போல இடையற்ற இறையனுபவத்தை அடையலாம். இதையே சமாதி நிலை என பலவாறாகச் சொல்கிறோம்.

இன்னுமொரு குறிப்பு: மனம் சித்தம் புத்தி அஹங்காரம் எல்லாமே உண்மையில் ஒன்றுதான் என்ற நுட்ப்பங்களை இப்போதைக்குத் தவிர்ப்போம். கடல்நீர்,கடற்கரை நீர்,நடுக்கடல் நீர்,அலைகள்,கடல் நுரை இவையனைத்தும் ஒன்றானாலும் நாம் பாகுபடுத்திப் பார்ப்பது போலவே இது!

யோகம் = சித்தத்தில் ஏற்படும் மாற்றங்களைத் தவிர்ப்பதே யோகம் – பதஞ்சலி யோக சூத்திரம்

நடைமுறை ஆன்மீகம் மன அலைகளைக் குறைத்து முடிவில் ஓரெண்ணம் கூட எழாத நிலையில் மனம் சித்தம் இவற்றிற்கும் உள்ள வேறுபாடழிந்து கடற்கரை நீரும் நடுக்கடல் நீரும் அலையற்றிருப்பது போன்ற நிலையடையும் நோக்கத்தோடே !
(தொடர்வோம்)
#ஆன்மீகம்

ஈகோ

ஈகோ கடலோரம் கட்டிய மணல் வீடு!
ஒன்று அலை(கர்மவினை) அழிக்கும். இல்லையென்றால் உடனிருப்பவர்கள்(கணவன்,மனைவி,உறவினர்,சம்பந்தமே இல்லாதவர்களால்) மூலம் மிதிபடும்!
எல்லா ஈகோவும் தூளாகும்.
நாமே குறைத்துக் கொண்டால்(பீச்சை விட்டு கிளம்பும் முன் மண் வீட்டை இடித்துவிட்டால்)சேதாரம் குறைவு!