தானம்,கொடை,ஈகை

ஆங்கிலக் கலாச்சாரம் கிழக்கிந்தியக் கம்பெனி வடிவில் விற்பனை லாபம் கொள்ளை லாபம் சுரண்டல் வரி வசூல் கிஸ்தி …. என்ற மந்திரங்களை 200 வருடங்கள் ஓதிச் சென்றதன் பலன் நாம் பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகக் காத்த பண்பாடு பல்லிளித்துவிட்டது. மீள முடியவில்லை.

அது நம் குணமாகவே மாறிவிட்டது. செய்யும் கொஞ்சநஞ்ச தானமும் பெயர் புகழுக்காகவோ புண்ணியம் வேண்டியோ பாவம் தொலைக்கவோ செய்யப்படுகிறது.

எல்லா உயிரிலும் இறைவனிருக்கிறான்.

எல்லா உயிருக்கும் உணவு இயங்கு சக்தி.

அதை எந்த நோக்கமும் இன்றி பகிரவேண்டும்.

சொர்க்கத்தில் இடம் பிடிக்க பாவத்தைக் கழுவ அன்னதானமாகச் செய்யும் நாம் அனைவரும் பிச்சைக்காரர்களே!

பயன்தூக்கார் செய்த உதவி நயந்தூக்கின் நன்மை கடலிற் பெரிது.

#தானம்கொடைஈகை

ஆன்மீகம்-22

7 ஏப்ரல் 2018
வானவில்
=========
ஆன்மீகத்திற்கான தகுதி ,அதன் இறுதி நிலை,அதன் வழிமுறைகள் ,பாதைகள் பற்றி அறிந்தோம்.

தகுதி- உயிருடன் உடல்தாங்கி இருத்தல்

இறுதிநிலை – பிறப்பிறப்பற்ற நிலை

வழிமுறை – நிலையாமை உணர்ந்து பிறப்பிறப்பைத் தரும் ஆசை களைவதே!

பாதைகள்-நாத்திகம்,ஆத்திகம்,பக்தி,சேவை,ஞானம்,ராஜயோகம்,…இப்படிப் பல . உடலுறவு கூட ஒரு பாதை! கடினமான ஒன்று ! அதுவும் ஒரு பாதையே! விந்து வெளிப்படாத உடலுறவும் ஒரு யோகமே! நம்மால் கடைப்பிடிக்க இயலாத ஒன்றை விவாதித்து அறிந்து பயனில்லை.

ஆன்மீகத்தில் உடல் சார்ந்த அனைத்தையும் புறந்தள்ளி மனம் புத்தி சித்தம் அஹங்காரம் என்ற தன்னுணர்வு ஆன்மா என்பவை பற்றியே பேச பழக ஆராய வேண்டும்!

“சாதி மத இன பால் திணை உருவமா அருவமா என்று கீழான எண்ணங்களை மறந்தும் பேச நினைக்கக் கூடாது. அது அறியாமைச் சுழலில் நம்மை பலப்பல பிறவிகளில் அதே நிலையில் நிறுத்தி வைத்து ஆன்மத் தேடலைத் தடைப்படுத்தும். சுருக்கமாக அதை மாயை எனச் சொல்லி தவிர்ப்போம்!”

இவற்றை அறிந்தபின் நடைமுறைப்படுத்துவது எவ்வாறு என பார்த்து வருகிறோம்!

மனதார வாழ்த்தல்,பிறர் துன்பம் களைதல்,நிலையாமையை நினைவு கூறல்,ஈகை,கருணை பழகல்.

இதனால் அடையும் பயன் மனத்தூய்மை.

மனத்தூய்மையால் அடையும் நன்மை என்ன?

மனத்தூய்மையால் அடைவது சித்தத் தூய்மை!

சித்தத் தூய்மையால் அடைவது இறையனுபவம்! 

இதுவரை சரி! மனத்திற்கும் சித்தத்திற்கும் என்ன வேறுபாடு?

கடற்கரையில் அலைகள் எழுந்து வந்தபடி கரையில் மோதியபடி இருக்கும்.
அதில் சூரிய பிம்பம் இரண்டு அலைகளுக்கு இடைப்பட்ட நேரத்திலேயே தெரியும். அதுவும் அலைக்கழியும் நிலையற்ற பிம்பமாகவே தெரியும்!

நடுக்கடலில் சாந்தமாக அலையின்றி சூரியன் தங்கத்தட்டு போல ஒளிரும்.

கடற்கரை நீர் – மனம். ஆசை ,வெறுப்பு என்ற காற்று வீச அவற்றை அடையும் தவிர்க்கும் முயற்சியில் அலைக்கழியும்.
கடற்கரை சூரிய பிம்பம் – நம் மனதில் அவ்வப்போது வந்து போகும் இறையனுபவம் என்ற ஆனந்தம் ,அமைதி. எடுத்துக்காட்டாக தூக்கத்தில் அனுபவிக்கும் சுகமான அமைதி மனமடங்குவதால் நாம் அனுபவிக்கும் குறுகிய கால (சத் சித்) ஆனந்தமான இறையனுபவமே!

சித்தம் – அலையற்ற ஆழ்கடல் . அதில் சூரியன் ஒளிர்வதைப் போல இடையற்ற இறையனுபவத்தை அடையலாம். இதையே சமாதி நிலை என பலவாறாகச் சொல்கிறோம்.

இன்னுமொரு குறிப்பு: மனம் சித்தம் புத்தி அஹங்காரம் எல்லாமே உண்மையில் ஒன்றுதான் என்ற நுட்ப்பங்களை இப்போதைக்குத் தவிர்ப்போம். கடல்நீர்,கடற்கரை நீர்,நடுக்கடல் நீர்,அலைகள்,கடல் நுரை இவையனைத்தும் ஒன்றானாலும் நாம் பாகுபடுத்திப் பார்ப்பது போலவே இது!

யோகம் = சித்தத்தில் ஏற்படும் மாற்றங்களைத் தவிர்ப்பதே யோகம் – பதஞ்சலி யோக சூத்திரம்

நடைமுறை ஆன்மீகம் மன அலைகளைக் குறைத்து முடிவில் ஓரெண்ணம் கூட எழாத நிலையில் மனம் சித்தம் இவற்றிற்கும் உள்ள வேறுபாடழிந்து கடற்கரை நீரும் நடுக்கடல் நீரும் அலையற்றிருப்பது போன்ற நிலையடையும் நோக்கத்தோடே !
(தொடர்வோம்)
#ஆன்மீகம்

ஆன்மீகம்-21

வானவில்
=========
31 March 2018
ஆன்மீகத்தின் இறுதி நோக்கம் பிறப்பிறப்பற்ற நிலை . இது மத மொழி இன பால் குல சாதி திணை இவற்றைத் தாண்டிய ஒன்று என்பதை நாம் வலியுறுத்தி வருகிறோம்.

ஆன்மீகத்தின் நுழைவாயிலில் இவை அனைத்தையும் கழற்றிவைத்துவிட்டே நுழைய வேண்டும்!

1.இதில் ஏதேனும் ஒன்றின் காரணமாக நம்மில் அகம்பாவமோ ஆணவமோ கர்வமோ தாழ்வு உயர்வு மனப்பான்மையோ இருந்தால் நமக்கு ஆன்மீகம் பேச பழக தகுதியில்லை!

2.இன்று நாம் உள்ள நிலையிலிருந்தே எளிதாக பிறப்பிறப்பற்ற நிலையை இந்தப் பிறப்பிலேயே அடையமுடியும்.

அதற்கான சில நுணுக்கங்கள் இங்கே.

முதலில் முறைகள். பின் அதன் பலனை அறிவோம்.
1. செய்யும் தொழிலை ஆர்வத்தோடு முழுமுனைப்போடு செய்தல்.
” கெரகம்! ஏந்தெறமைக்கு இந்த வேலை ரொம்ப லோ லெவல்!
இந்த சம்பளத்துக்கு இவ்வளவு வேல செய்யிறதே ஜாஸ்தி!
மவனே ப்ரமோஷன் கண்ணுலயே காட்ட மாட்றாய்ங்க!
இப்படி மனம் சஞ்சலமாவதை “உடனே” விட்டுவிடவேண்டும்.

2. நெஞ்சாற வாழ்த்தப் பழகுங்கள்.அனைவரின் இன்பதுன்பங்களில் பங்கு கொள்ளுங்கள்.
” யாருனே தெரியாது! எதுக்கு வாழ்த்தனும்?!”
” ஏம் பொறந்தநாள கண்டுக்கவே இல்ல இவ!”
” வரமுடியாதுன்னு தெரிஞ்சும் பத்திரிக்க வைக்கான்!”
” வாப்பா செத்ததுக்கு துக்கம் விசாரிக்கல இவன்!”
இப்படி குறுகிய சிந்தனையைக் “கொளுத்தி விடுங்கள்!”

3. நிலையாமையை நாளில் மும்முறை நினையுங்கள்.
காலை எழுந்ததும்
” இந்த நாள் நல்ல நாளாக ஆகட்டும். அதற்கு என்னைச் சுற்றி உள்ளவர்கள் துணையாக இருக்கட்டும்!
நானும் மற்றவர் வாழ்வில் இந்த நாள் இன்பமாகவும் சிறிதளவேனும் அவர்களின் துன்பம் குறைய என்னால் இயன்றதைச் செய்வேன்.
அள்ளி அள்ளிச் சேர்த்தாலும் காதறுந்த ஊசியும் வராது கடைவழிக்கு. அதனால் கூடியவரை கைப்பொருளை அனுபவித்து பகிர்ந்து வாழ்வேன்!”
என மனமாறச் சொல்லுங்கள்.
(இறை நம்பிக்கை இருந்தால் இதில் இறைவனைச் சேர்த்துக் கொள்ளுங்கள். )
மதிய உணவின்போதும்
“அள்ளி அள்ளிச் சேர்த்தாலும் காதறுந்த ஊசியும் வராது கடைவழிக்கு. அதனால் கூடியவரை கைப்பொருளை அனுபவித்து பகிர்ந்து வாழ்வேன்!
இந்த உணவு எனக்களித்த இறைவன் அருளால் எல்லா உயிருக்கும் உணவு கிடைக்கட்டும்!” என மனமாறச் சொல்லுங்கள்.
இரவில்
” பல ப்ரச்சனைகள் பல நல்லவை இன்று நடந்து கடந்து போனது. இன்றைக்கு மனிதநேயம் என்றால் என்ன என்று கற்றேன். அடக்கம் கற்றேன். ஈகை கற்றேன்.”  இப்படி அன்றைய தின நிகழ்வுகளில் ஏற்பட்ட படிப்பினைகளை நினைவு கூர்ந்து ” நான் மேலும் நல்வழிப்பட நாளையை நோக்கிப் பயணிக்கிறேன்! ”
என மனதாறச் சொல்லுங்கள்.

4.ஈகை பழகுங்கள்
ஏதோ ஒரு தொண்டு நிறுவனத்திற்கோ பசித்தவருக்கு ஒரு பழமோ ஒரு பிடி அரிசியோ ( மாதம் முழுவதும் சேர்த்து) உடையோ கொடுக்கும் முறையைக் கைக் கொள்ளுங்கள்.

5.பலன் கருதாது உதவுங்கள்
இவ்வுலகில் நடமாடும் உயிரினங்கள் அனைத்தும் இறைவனின் பிம்பங்கள். அவர்கள் படும் துன்பங்களை அவர்கள் செய்த கர்மவினை எனக் கடந்து போகாதீர்கள்.
” உதவு! உதவு! உதவு! அது திறக்கும் சொர்க்கத்தின் கதவு!”

முதலில் எளிய முறைகள்! பின் வலிய வழிமுறைகள்!

அட்டாங்க யோகம் நுண்ணுடல் சமாதி குண்டலினி ….. இப்படி அனைத்தையும் ஆராயப் போகிறோம்!

இவை அனைத்தையும் மேற்சொன்ன எளிய வழியில் அடையலாம் ! 
நாயன்மார் ஆழ்வார்கள் சாட்சி!
அவ்வை சாட்சி! அவ்வை கேரண்டி!

அரியதுகேட்கின் வரி வடிவேலோய்
அரிதரிது மானிட ராதலரிது
மானிடராயினும் கூன்குருடு செவிடு பேடுநீங்கிப் பிறத்த லரிது
பேடுநீங்கிப் பிறந்த காலையும் ஞானமும் கல்வியும் நயத்தலரிது
ஞானமும் கல்வியும் நயந்த காலையும் தானமும் தவமும் தான்செய்தலரிது
தானமும் தவமும் தான்செய்வாராயின் வானவர் நாடு வழிதிறந்திடுமே.

#ஆன்மீகம்
(தொடரும்)