ஆன்மீகம்-23

14 ஏப்ரல் 2018
வானவில்
=========
“நடைமுறை ஆன்மீகம்”

உடல் சார்ந்த வேறுபாடுகளைக் களைந்து ஆன்மீகத்தின் வாசற்படியில் நிற்கிறோம்!

நிலையாமையை நித்தமும் ஒருமுறையேனும் சிந்திக்கிறோம்!

மனம்,சித்தம் அடங்குவதே ஆன்மீகத்தின் நோக்கம் என்று முழுமையாக/அரைகுறையாக நம்புகிறோம்!

ஓரளவு மனித/உயிர் நேயம் பழகுகிறோம்!

சித்தத்தின் அலைகள் ஓய்வதே யோகம் எனப் பார்த்தோம்.

நடைமுறை ஆன்மீகம் என்பது இருவழிப்பாதை !

மதங்கள் சார்ந்த பாதை! மதங்கள் சாராத பாதை!

மதங்கள் மனமடங்கும் வழிகளை பாமரரும் பயன்பெறும் வழிபாட்டு முறையாக வகுத்தன!

மதம் சாராத வழிகளான தன்னொழுக்கம்,நேர்மை,பிற உயிர்க்கு மனம் உடல் சொல்லால் தீங்கிழைக்காமை,பிறரின் துன்பம் துடைத்தல்,…. இவற்றின் மூலமும் சித்த சுத்தி அடைந்து பிறப்பிறப்பற்ற பேரானந்த நிலை அடையலாம்!

மதம் சார்ந்த வழிமுறை-1
——————————————–
காலை எழும்போதும் மதியம் மாலை இரவு தூங்கும் முன்னும் இறைவனைச் சிந்தித்தல். இன்றைவிட நாம் நாளை நல்ல எண்ணங்கள் செயல்கள் சொற்கள் உள்ளவர்களாக மாறவேண்டும் என இறைவனை வேண்டுதல்.

மதம் சாராத வழிமுறை-1
——————————————-
நான் என்னுடையது என்ற எண்ணத்தைக் களைய முயல்தல்.
வள்ளுவர் சொல்கிறார் ” கண்ணா! ஸிம்பிள் வழி! நீ தேவர்களைவிட ஒருபடி மேலே போகனும்னா உன் ஈகோ ,பொஸஸிவ்னஸை விட்டுவிடு!”

யானெனது என்னும் செருக்கறுப்பான் வானோர்க்கு உயர்ந்த உலகம் புகும்.

மனம்,சித்தம்,புத்தி,அஹங்காரம் என்று எப்படிச் சொன்னாலும் அனைத்தும் ஒன்றையே குறிக்கும் என சென்ற பதிவில் பார்த்தோம்.

மனம் தண்ணீர். சட்டி உடல். அடுப்பு உலக வாழ்வு. எரியும் விறகுகள் – பணம்,பட்டம்,பதவி,ஆணவம்,அகம்பாவம்,பிறரைப் பழித்தல்,அழித்தல்,காழ்ப்பு,…..

விறகு எரிவதால் நீராகிய மனம் கொதிக்கிறது.
ஒன்று நம் பயன்கருதா விருப்பு வெறுப்பற்ற செயல்கள்(கர்ம யோகம்) என்ற அரிசியைக் களைந்து உலையில் போட்டால் ஞானம் சோறாகி விறகும் சாம்பலாகி எல்லாம் அமைதியாகிவிடும். அது இறைநிலை. சஹஜ ஸமாதி. செயலாற்றி செயலின்றி இருத்தல். விவேகானந்தர் போன்ற நிலை.

மற்றொன்று ஆணவம்,பணம்,பட்டம்,பதவி…. போன்ற விறகை ஒன்றொன்றாகக் களைதல் .இது ஞான யோகம். நிர்விகல்ப சமாதி என்ற உலக தோற்றமாற்றங்களே இன்றி அமையும் நிலை. இரமணமகரிஷி

இதில் நமக்கு எது ஒப்புமோ அதைப் பின்பற்றி உய்வோம்!
வன்முறை களைவோம்! நன்முறை பயில்வோம்!
(#ஆன்மீகம்)

ஆன்மீகம்-22

7 ஏப்ரல் 2018
வானவில்
=========
ஆன்மீகத்திற்கான தகுதி ,அதன் இறுதி நிலை,அதன் வழிமுறைகள் ,பாதைகள் பற்றி அறிந்தோம்.

தகுதி- உயிருடன் உடல்தாங்கி இருத்தல்

இறுதிநிலை – பிறப்பிறப்பற்ற நிலை

வழிமுறை – நிலையாமை உணர்ந்து பிறப்பிறப்பைத் தரும் ஆசை களைவதே!

பாதைகள்-நாத்திகம்,ஆத்திகம்,பக்தி,சேவை,ஞானம்,ராஜயோகம்,…இப்படிப் பல . உடலுறவு கூட ஒரு பாதை! கடினமான ஒன்று ! அதுவும் ஒரு பாதையே! விந்து வெளிப்படாத உடலுறவும் ஒரு யோகமே! நம்மால் கடைப்பிடிக்க இயலாத ஒன்றை விவாதித்து அறிந்து பயனில்லை.

ஆன்மீகத்தில் உடல் சார்ந்த அனைத்தையும் புறந்தள்ளி மனம் புத்தி சித்தம் அஹங்காரம் என்ற தன்னுணர்வு ஆன்மா என்பவை பற்றியே பேச பழக ஆராய வேண்டும்!

“சாதி மத இன பால் திணை உருவமா அருவமா என்று கீழான எண்ணங்களை மறந்தும் பேச நினைக்கக் கூடாது. அது அறியாமைச் சுழலில் நம்மை பலப்பல பிறவிகளில் அதே நிலையில் நிறுத்தி வைத்து ஆன்மத் தேடலைத் தடைப்படுத்தும். சுருக்கமாக அதை மாயை எனச் சொல்லி தவிர்ப்போம்!”

இவற்றை அறிந்தபின் நடைமுறைப்படுத்துவது எவ்வாறு என பார்த்து வருகிறோம்!

மனதார வாழ்த்தல்,பிறர் துன்பம் களைதல்,நிலையாமையை நினைவு கூறல்,ஈகை,கருணை பழகல்.

இதனால் அடையும் பயன் மனத்தூய்மை.

மனத்தூய்மையால் அடையும் நன்மை என்ன?

மனத்தூய்மையால் அடைவது சித்தத் தூய்மை!

சித்தத் தூய்மையால் அடைவது இறையனுபவம்! 

இதுவரை சரி! மனத்திற்கும் சித்தத்திற்கும் என்ன வேறுபாடு?

கடற்கரையில் அலைகள் எழுந்து வந்தபடி கரையில் மோதியபடி இருக்கும்.
அதில் சூரிய பிம்பம் இரண்டு அலைகளுக்கு இடைப்பட்ட நேரத்திலேயே தெரியும். அதுவும் அலைக்கழியும் நிலையற்ற பிம்பமாகவே தெரியும்!

நடுக்கடலில் சாந்தமாக அலையின்றி சூரியன் தங்கத்தட்டு போல ஒளிரும்.

கடற்கரை நீர் – மனம். ஆசை ,வெறுப்பு என்ற காற்று வீச அவற்றை அடையும் தவிர்க்கும் முயற்சியில் அலைக்கழியும்.
கடற்கரை சூரிய பிம்பம் – நம் மனதில் அவ்வப்போது வந்து போகும் இறையனுபவம் என்ற ஆனந்தம் ,அமைதி. எடுத்துக்காட்டாக தூக்கத்தில் அனுபவிக்கும் சுகமான அமைதி மனமடங்குவதால் நாம் அனுபவிக்கும் குறுகிய கால (சத் சித்) ஆனந்தமான இறையனுபவமே!

சித்தம் – அலையற்ற ஆழ்கடல் . அதில் சூரியன் ஒளிர்வதைப் போல இடையற்ற இறையனுபவத்தை அடையலாம். இதையே சமாதி நிலை என பலவாறாகச் சொல்கிறோம்.

இன்னுமொரு குறிப்பு: மனம் சித்தம் புத்தி அஹங்காரம் எல்லாமே உண்மையில் ஒன்றுதான் என்ற நுட்ப்பங்களை இப்போதைக்குத் தவிர்ப்போம். கடல்நீர்,கடற்கரை நீர்,நடுக்கடல் நீர்,அலைகள்,கடல் நுரை இவையனைத்தும் ஒன்றானாலும் நாம் பாகுபடுத்திப் பார்ப்பது போலவே இது!

யோகம் = சித்தத்தில் ஏற்படும் மாற்றங்களைத் தவிர்ப்பதே யோகம் – பதஞ்சலி யோக சூத்திரம்

நடைமுறை ஆன்மீகம் மன அலைகளைக் குறைத்து முடிவில் ஓரெண்ணம் கூட எழாத நிலையில் மனம் சித்தம் இவற்றிற்கும் உள்ள வேறுபாடழிந்து கடற்கரை நீரும் நடுக்கடல் நீரும் அலையற்றிருப்பது போன்ற நிலையடையும் நோக்கத்தோடே !
(தொடர்வோம்)
#ஆன்மீகம்