நாம் கடவுள்!

த்வைதம்,விசிஷ்டாத்வைதம் மனம் என்ற ஒன்று தனித்து உணரப்படும்போது ஏற்படும் காட்சிப் பிழைகள். அத்வைதம் மனம் அழிந்த உண்மை நிலையில் நாம் கடவுள் என உணர்தல்.
தண்ணீரில் முக்கிய குச்சி வளைந்ததாகத் தெரிவதும் குட்டையாகத் தெரிவதைப் போன்ற காட்சிப்பிழை! வெளியில் எடுத்தால் குச்சியின் நீளம் ஒரு இம்மி கூட மாறுவதில்லை. தண்ணீரின் ஒளி முறிவு எண் refractive index காற்றைவிட அதிகமாவதால் இந்த காட்சிப்பிழை ஏற்படுகிறது. மனம் அழியும் வரை இறைவன்-பக்தன் என இரட்டை நிலை! மனம் அழிந்தால் இறைவனே மிச்சம். இறைவன்-பக்தன் கிடையாது. மனம் நம் எண்ணங்களின் கோர்வை. எண்ணங்கள் ஆசை வெறுப்பால் வருபவை. ஆசை தொலைந்தால் மனம் இல்லை. நாம் கடவுள் என்ற நிலை. பிறப்பிறப்பு இல்லை.

ஆன்மீகம்-19

வானவில்
=========
10 மார்ச் 2018
ஆன்மீகம் ஒரு பயணம் .பிறப்பு இறப்பு இடையில் வரும் நிறுத்தங்கள். மேலும் கீழ்க்கண்ட சொற்கள் நமக்குப் பலப்பல குழப்பங்களைத் தருகின்றன.
1.எண்ணங்கள்
2.செயல்கள்
3. பாவங்கள்
4.புண்ணியங்கள்
5.கர்மங்கள்
6.வினைகள்
7.கடவுள்
8. உடல்
9.மனம்
10.அருவம்
11. உருவம்
12. பக்தி
13.சேவை
14.ஜீவாத்மா
15. பரமாத்மா
16. மோக்ஷம்
17.வீடுபேறு
18.குடும்பம்
19. சந்யாஸம்
20.யோகம்
21.ஆசை
22. துன்பம்
23.இன்பம்
24.பருவுடல்(gross body)
25. நுண்ணுடல்(subtle body)
26.விளைவுடல்(வினையுடல் causal body)
27.ப்ராணசக்தி
28.குண்டலினி
29.பூசை
30.வழிபாடு,
31.தொழுகை,
32.புனித யாத்திரை… இப்படி பல சொற்கள் ,பொருள் விளங்காச் சொற்கள்!
சொல்வாரும் இல்லை! புரிவதும் இல்லை!
“இதுக்கு என்னங்க முடிவு? !” என புலம்புகிறோம்.
இதை எளிதாக்கவே நம் முன்னோர்கள் மதம்,மும்முறை,ஐம்முறை வழிபாடு,ஈகை,சடங்கு,நீதிக் கதைகள்,புராண இதிகாசங்கள்,புனித நூல்களை வகுத்தார்கள்!

அவ்வழி சென்றாலே உள்ளத் தூய்மை அடைந்து இறையனுபவம் இந்த உடலிலேயே இந்தப் பிறப்பிலேயே நாம் அனைவரும் பால் இன மத மொழி திணை நாடு … என்ற வேறுபாடின்றி பெறலாம்!

இது தான் அடிப்படை உண்மை!

நம்மில் உயர்ந்த ஆத்மா தாழ்ந்த ஆத்மா என்று ஏதும் இல்லை!

உடல்,மன அளவில் நம்மில் பல வேறுபாடுகள் உண்டு. ஆன்ம அளவில் வேறுபாடு இல்லை.

“இறைநிலை உணர அதாவது நாம் கடவுள் என்ற நிலையை உணர இரண்டே தகுதிகள் தான் வேண்டும்!”

1. ஆன்மநிலையை உணர உடல் மன அளவில் உள்ள வேறுபாடுகளைக் கடக்க வேண்டும்.
2. மனம் என்ற கருவியை புலனின்பத்தில் குவித்து வீணாக்காமல் உள்நோக்கித் திருப்பி ஆன்மாவே நாம் என உணர்தல் வேண்டும்.

இதை எப்படிச் செய்வது?
1.மத சாதி பால் இன மொழி சார்ந்த உயர்வு தாழ்வு பேசுவதைத் தவிருங்கள்! மனதிலிருந்து அந்த அறியாமை இருளைத் துடையுங்கள்! நீங்கள் பாதி கடவுள் ஆகிவிடுவீர்கள்!
2. புலன் நுகரும்போது அதன் நிலையற்ற தன்மையை ஒரு கணம் சிந்தியுங்கள். உலகின் நிலையாமையை அடிக்கடி சிந்தியுங்கள். படிப்படியாக மனம் உள் நோக்கும்! மனமடங்கும்! மீதி கடவுள் ஆகிவிடுவீர்கள்

சென்ற இடத்தால் செலவிடா தீதொரீஇ
நன்றின்பால் உய்ப்ப தறிவு.

விளக்கம்:
மனத்தை சென்ற இடத்தில் செல்லவிடாமல், தீமையானதிலிருந்து நீக்கிக் காத்து நன்மையானதில் செல்லவிடுவதே அறிவாகும்.

தினமும் ஒரு அறத்துப்பால் குறள் படியுங்கள்!

அதன்படி நிற்கப் பழகுங்கள்!

ஆன்மீக வித்தை அதி சுலபம்!

(தொடர்வோம்! வீடு பெறுவோம்!)
#ஆன்மீகம்